தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


ADDED : மே 10, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சொல்கிறார்கள்/ 11/05/26 திங்கள் இதழ்

––––––

நாணயம் விகடன், மார்ச்., 29.2026 பக்: 36

பெண்களுக்கு

இயற்கையிலேயே

நிதி நிர்வாகம்

உண்டு!

–––––––––

திருநெல்வேலியை சேர்ந்த, எஸ்.முத்துலட்சுமி:

பண நிர்வாகத்தில் பட்டையை கிளப்பும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்ப பெண்களில், என் அம்மாவும் ஒருவர். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று, சமூகம் பெண்களை அடக்கி வைத்திருந்த காலத்திலும், நிதி நிர்வாகம் என்பது பெரும்பாலான பெண்களுக்கு இயற்கையாகவே இருந்தது.

அப்படி வாழ்ந்தவர்களில் ஒருவர், என் அம்மா. சம்பாதிக்கும் பணத்தை அம்மா கையில் கொடுத்து விடுவார் அப்பா. மாத சம்பளத்துக்குள் குடும்ப செலவுகளை கட்டுப்படுத்தியும், அதே நேரத்தில் உணவுக்கும் உடைகளுக்கும் எந்தவொரு குறையுமில்லாமல் குடும்பம் நடத்துவதில் கைதேர்ந்தவர் அம்மா.

இப்போது, ‘லோன்’ என்று கவுரவமாக சொல்லப்படுகிற கடன் என்பது, அம்மா இருக்கும் திசையில் எட்டி பார்த்ததே இல்லை. எங்களது பள்ளி பருவத்தில், வெளியிலோ, உணவகத்திலோ நாங்கள் சாப்பிட்ட நாட்கள் மிகவும் குறைவு. சத்தான வீட்டு சாப்பாடு வாயிலாக ஆரோக்கியம் பேணியதாலும், ஒவ்வாத உணவுகளை தவிர்த்ததாலும், குழந்தைகளுக்கான மருத்துவ செலவு என அதிகப்படியாக செலவழித்தது இல்லை.

நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில், பாடங்களை படிக்க சொல்லி அதிலிருந்து கேள்வி கேட்டு, எங்களை தேர்வுக்கு தயாராக்கிய டியூஷன் ஆசிரியரும் அம்மா தான். அவரின் அன்பே, ஒழுக்கமான வாழ்க்கைக்கு அடிப்படை. ‘அம்மா வருத்தப்படுவார்’ என்ற கவசமே, பல தேவையற்ற செலவுகளில் இருந்து எங்களை காத்தது. ‘சிக்கனம் தேவை எக்கணமும்’ என்ற சிந்தனையிலேயே வாழ்க்கையை நகர்த்தியவர் அவர்.

ஒரு முறை மாத கடைசியில், அவசர செலவுக்காக அப்பாவுக்கு பணம் தேவைப்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தபோது, அம்மா கடுகு டப்பாவில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்து, ‘அவ்வப்போது சேமித்த பணம்’ என்றார்.

சமையல் கூடத்தையும் சேமிப்பு கூடமாக பயன்படுத்திய அம்மாவை பார்த்து, நான் பலமுறை வியந்திருக்கிறேன். சில சமயங்களில், இரும்பு பெட்டியில் மடித்து வைத்திருக்கும் துணிகளில் இருந்தும் பணம் எடுத்து கொடுப்பார்.

‘வருமானத்துக்கு மீறிய ஆசைகள், கடன் வாங்க சொல்லும்; அடுத்தவர் வாழ்க்கையோடு ஒப்பிட சொல்லும்; நிதி நிர்வாகத்தை தடுமாற வைக்கும். அவரவர் ஆசை அவரவர் வருமானத்துக்குள் இருந்தால், அவமானம் எப்போதும் இருக்காது’ என்று அம்மா சொல்லி தந்த வீட்டு பாடத்தின் அடிப்படையிலேயே, இன்றும் எங்கள் வீட்டு நிதி பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

***

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us