போர் பதற்றம் தணியும் சூழலில் கமாடிட்டி வர்த்தகம் எப்படி இருக்கும்?
போர் பதற்றம் தணியும் சூழலில் கமாடிட்டி வர்த்தகம் எப்படி இருக்கும்?
ADDED : மே 28, 2026 05:49 AM

மேற்கு ஆசிய போர் பதற்றங்களின் தாக்கம் இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்து வருவதை போலவே, உலகளாவிய கமாடிட்டி சந்தையிலும் முரண்பாடான போக்கு நிலவுகிறது.
குறிப்பாக, சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பாதையாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் முழுமையாக திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. இதன்காரணமாக, கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருகிறது. அதற்கேற்றவாறு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நகர்வுகளும் அமைந்துள்ளன.
இவை ஒருபுறம் என்றால், ஏறுமுகத்தில் இருந்த தொழில்துறை உலோகங்க ளான தாமிரம் மற்றும் அலுமினியம் ஆகியவை, சர்வதேச நுகர்வு சந்தையின் மந்தநிலை காரணமாக, ஒரு குறுகிய எல்லைக்குள் முடங்கியுள்ளன.
இந்நிலையில், வரும் நாட்களில் கமாடிட்டி வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது பற்றி 'காம்ட்ரெண்ட்ஸ் ரிசர்ச்' நிறுவன இயக்குநர் ஞானசேகரன் தெரிவித்ததாவது:
தங்கம் வட்டி உயர்ந்தால் சரிய வாய்ப்பு: ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான செய்திகளால் பல்வேறு நாடுகளிலும் அதிகரிக்கும் பணவீக்கத்தால், வட்டி விகிதங்களை உயர்த்தும் சூழல் உருவாகியுள்ளது.
வட்டி விகிதங்கள் உயர்ந்தால் முதலீட்டாளர்கள் அதிக ஆபத்துள்ள கமாடிட்டி வர்த்தகத்தை தவிர்த்து, ரிஸ்க் இல்லாத வங்கி டிபாசிட் மற்றும் டாலரில் முதலீடு செய்ய முனைவர்.
எனவே, கமாடிட்டி சந்தையில் 10 கிராம் தங்கம் விலை விரைவில் 1,50,000 என்ற ஆதரவு நிலையை நோக்கி இறங்க வாய்ப்புள்ளது.
வெள்ளி தொழில்துறை தேவை குறைவதால் சரியலாம்: வட்டி விகிதம் உயரும் சூழலில், தொழில்துறை உலோகமான வெள்ளியின் தேவை குறையும். எனவே, தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியும் சரிவை சந்திக்கக்கூடும். மேலும், வட்டி விகிதம் உயரும் போது டாலர் வலுவடைகிறது, இது கமாடிட்டிகள் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கக்கூடும். எம்.சி.எக்ஸ்., சந்தையில் வெள்ளி வரவிருக்கும் நாட்களில் 2,50,000 ரூபாய் வரை குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கச்சா எண்ணெய் சீராகும் விநியோகத்தால் சரிவை சந்திக்கும்: அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்படலாம் என்ற நம்பிக்கையாலும், ஹார்முஸ் நீரிணைப்பில் கப்பல் போக்குவரத்து மெதுவாக தடையின்றி நகர்வதாலும் விநியோக கவலைகள் தணிந்துள்ளன.
அமெரிக்காவின் தற்காப்பு தாக்குதல்கள் காரணமாக அவ்வப்போது சிறிய ஏற்றம் கண்டாலும் போர் நீடிக்காது என்ற சாதகமான பார்வை காரணமாக, ஒரு பேரல் சமீபத்திய உச்சமான 117 டாலர் என்ற நிலையில் இருந்து சரிந்து உள்ளது.
வரும் நாட்களில், கமாடிட்டி சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விரைவில் 8,300 நிலைக்கு வரக்கூடும்.
தாமிரம் டாலரின் அழுத்தத்தால் பலவீனமடையலாம்: ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சி, தரவு மையங்கள் மற்றும் மின்மயமாக்கல் காரணங்களால் இதற்கான தொழில்துறை தேவை வலுவாக உள்ளது.
அதேநேரம், உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள் பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதும், வலுவான டாலரும் இதன் விலையேற்றத்தை கட்டுப்படுத்துகின்றன.
இந்நிலையில், வரும் நாட்களில் எம்.சி.எக்ஸ்., சந்தையில் தாமிரம் 1,320 என்ற சப்போர்ட் நிலை வரை சற்று பலவீனமடைய வாய்ப்புள்ளது.
அலுமினியம் விநியோகம் சீராவதால் இயல்பு நிலைக்கு திரும்பும்: மேற்கு ஆசிய பதற்றம் மற்றும் கடற்படை முற்றுகையால் உலக விநியோகத்தில் 9 சதவீதம் பாதிக்கப்பட்டு, விலை 4 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்டது. எரிசக்தி விலை உயர்வால் உற்பத்தி செலவும் அதிகரித்தது.
தற்போது விநியோகம் படிப்படியாக அதிகரித்து வருவதால் சந்தை இயல்பு நிலைக்கு திரும்புகிறது. எனவே, வரும் வாரத்தில் ஒரு கிலோ அலுமினியத்தின் முன்பேர வர்த்தக ஒப்பந்தம் 365 என்ற நிலை வரை ஒரு சிறிய திருத்தம் வரலாம்.
