முதலீட்டு குழப்பங்களுக்கு தீர்வு தந்த கருத்தரங்கம்
முதலீட்டு குழப்பங்களுக்கு தீர்வு தந்த கருத்தரங்கம்
ADDED : ஏப் 26, 2026 01:29 AM

மு தலீடுகள் தொடர்பான குழப்பங்களுக்கு விடை தரும் நோக்கில் 'மார்க்கெட் அகாடமி' நிறுவனம், சென்னையில் 'முதலீட்டாளர் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026'ன் 2வது நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய நிதி சந்தையில் பொறுப்பான மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய பங்கேற்பை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இக்கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. இதில், ஒழுங்குமுறை ஆணையங்கள், பங்கு சந்தை பிரதிநிதிகள் மற்றும் நிதித்துறை வல்லுநர்கள் பங்கேற்று, எந்தெந்த முதலீடுகள் லாபகரமானவை என்பது குறித்து விரிவான விளக்கங்களை அளித்தனர்.
நிகழ்ச்சியில், பேசிய என்.எஸ்.இ.,யின் ஒழுங்குமுறை பிரிவு மூத்த துணை தலைவர் அவிஷ்கர் நாயக், இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர்களின் பங்கேற்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார். எனவே, முதலீட்டாளர்களுக்கு தேவையான நிதி அறிவை வழங்கும் நோக்கில், என்.எஸ்.இ., விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
'ஆன்மி'யின் முன்னாள் தேசிய தலைவர் சுரேஷ் பேசும்போது, தற்போதைய சூழலில் நிதி திட்டமிடல் குறித்த கல்வி என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல; அது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமான ஒன்று எனக் கூறினார். பங்குச் சந்தை என்பது வெறும் தரவுகளால் மட்டுமல்ல, முதலீட்டாளர்களின் நம்பிக்கையால் தான் இயங்குகிறது என்றும் அவர் பேசினார்.
பங்கு சந்தை என்பது பெரும் பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல என்றும் அது சாமானியர்களுக்குமானது தான் என பேசிய 'என்ரிச் மனி' நிறுவனத்தின் நிறுவனர் பொன்முடி, சிறிய தொகையிலிருந்து முதலீட்டை துவங்குங்கள் என தன் கருத்தை பதிவிட்டார்.
வீட்டு பட்ஜெட் திட்டமிடல் பற்றி பேசிய 'பார்ச்சூன் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ்' நிறுவனர் பத்மநாபன், ஈட்டும் வருவாயில் முதலில் முதலீட்டிற்கு முக்கியத்துவம் அளித்துவிட்டு, மீதமுள்ள தொகையை செலவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
