UPDATED : மே 15, 2026 12:34 AM
ADDED : மே 15, 2026 12:15 AM

சமீபகாலமாக இந்திய பங்கு சந்தை, கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களுடன், முதலீட்டாளர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் ஒரு விறுவிறுப்பான 'ரோலர் கோஸ்டர்' பயணம் போலவே அமைந்திருக்கிறது. ஒரு நாள் 'ஜெட்' வேகத்தில் ஏறும் சந்தை, மறுநாள் 'பாதாளத்திற்கு' இறங்கிவிடுகிறது. இந்த போக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே செய்கிறது. தற்போதுள்ள சூழலில் , சிறு முதலீட்டாளர்கள், ஏற்கனவே வாங்கிய பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடியாத சூழலில், எது வரை இறங்கும் அல்லது எங்கு 'ஆவரேஜ்' செய்யலாம் என்பது குறித்து குழம்பிப்போய் இருக்கிறார்கள். இத்தகைய குழப்பங்களுக்கு தெளிவு பெறும் விதமாக சந்தை நிபுணர்கள் சில விளக்கங்களை அளித்துள்ளனர்.
![]() |
'இரண்டு காலாண்டுக்கு இந்த நிலை நீடிக்கும்'
சுரேஷ் பார்த்தசாரதி நிறுவனர், மைஅசெட்கன்சாலிடேஷன்.காம்
தற்போது போர்பதற்ற காரணங்களால் சந்தை சரிந்தாலும், எப்.ஐ.ஐ., வெளியேற்றம், ஏ.ஐ., பாதிப்புகள் மற்றும் ரூபாய் வீழ்ச்சியால், இந்திய பங்கு சந்தைகள் கடந்த சில மாதங்களாக ஊசலாடி வருகின்றன.
இத்தகைய சூழல் இன்னும் இரண்டு காலாண்டுகளுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதால், உடனடி லாபத்தை எதிர்பார்த்து முதலீடு செய்யாதீர்கள். அதேபோல அவசரகால நிதியாக வைத்திருக்கும் பணத்தையும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் .
பிரதமரின் அறிவுரையால் தங்கம் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக வைத்திருக்கும் பணத்தை சந்தைக்குள் கொண்டு வர நினைப்பவர்கள், அவற்றை மொத்தமாக முதலீடு செய்யாமல் 'எஸ்.டி.பி.,' முறையில் 'லார்ஜ்கேப்' பங்குகளில் பிரித்து முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுக்க துணிந்தவர்கள் நல்ல ஐ.டி., பங்குகளை தேர்வு செய்யலாம். நீண்டகால முதலீட்டாளர்கள் பதற்றமடைந்து வெளியேறாமல், ஒரு பகுதி லாபத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதமுள்ள முதலீட்டுடன் தொடர்வது எதிர்கால லாபத்திற்கு வழிவகுக்கும்.
கவனிக்க வேண்டிய துறைகள்
1.ஐ.டி
2. உலோகம்
3.பாதுகாப்பு
'சந்தையை கணிக்க முயற்சிக்காதீர்கள்'
ஸ்ரீகாந்த் மீனாட்சி நிறுவனர், பிரைம் இன்வெஸ்டார்
கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்த தெளிவின்மை
மற்றும் சர்வதேச போர் பதற்றங்கள் காரணமாக, பங்குச் சந்தை தற்போது கணிக்க
முடியாத நிலையில் உள்ளது. இந்த பிரச்னைகள் தீரும் வரை, சந்தையின் போக்கை
யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.
சந்தை சரிவில் முதலீடு செய்வது தற்போது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்ற அபாயகரமான சூழலாக இருக்கிறது.
எனவே, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க தயாராக உள்ள
முதலீட்டாளர்கள் தற்போது பங்குகளை வாங்கலாம்; குறுகிய கால லாபத்தை
எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏமாற்றத்தை தரும் சந்தை என்பதை நினைவில் வைத்து
கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்தின் அடிப்படை வலிமை சீராக இருந்து, சந்தை
சூழலால் மட்டும் அதன் விலை குறைந்திருந்தால் அதை தாராளமாக வாங்கலாம்.
இருப்பினும், ஆரம்பகட்ட முதலீட்டாளர்கள் தற்போதைய சூழலில் அவசரப்பட்டு
முதலீடு செய்யாமல், கைகளை கட்டிக்கொண்டு காத்திருப்பதே புத்திசாலித்தனம்.
கவனிக்க வேண்டிய துறைகள்:
1. பார்மா
2. எண்ணெய் மற்றும் எரிவாயு
3. உலோகம்
![]() |
'பதற்றம் தணிந்தால் மட்டுமே தெளிவு பிறக்கும்'
பொன்முடி ஆர் நிறுவனர், என்ரிச் மனி
க டந்த ஏப்ரல் 7 முதல், நிப்டி ஒரு குறுகிய எல்லைக் குள் வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெய் மற் றும் மூலப்பொருட்களின் விநியோக தொடரில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், மூலப்பொருள்களின் விலை உயர்ந்து, நிறுவனங்களின் லாப வரம்பை குறைக்கும் சூழல் நிலவுகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியில் பதற்றம் தணிந்தால் மட்டுமே, சந்தையில் நீண்ட கால அடிப்படையில் தெளிவு பிறக்கும்.
நிப்டிக்கு 22,300 என்பது வலுவான ஆதரவு நிலை. ஏற்கனவே, மூன்று முறை இந்த நிலையை தொட்டு சந்தை மீண்டுள்ளதால், இதற்கு கீழே செல்வதற்கான வாய்ப்பு குறைவு.
24,400 - 24,500 என்கிற நிலையை தாண்டி முன்னேறினால், நிப்டி 26,300 புள்ளிகள் அல்லது புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது. புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய சரிவை கண்டு கவலைப்பட தேவையில்லை. 5 ஆண்டுகள் என்ற நீண்ட கால நோக்கில் இது முதலீட்டிற்கு ஏற்ற தருணம். குறுகிய கால முதலீட்டாளர்கள் இப்போதுள்ள சூழலில் முதலீட்டு தொகையில் 10 முதல் 25 சதவீதம் வரை மட்டும் பயன்படுத்தி பங்குகளை வாங்கலாம்.
தின வர்த்தகம் செய்பவர்கள் செய்திகளின் அடிப்படையிலும், அன்றைய ட்ரெண்டுக்கு ஏற்பவும் செயல்படுவது அவசியம்.
கவனிக்க வேண்டிய துறைகள்
1. எனர்ஜி
2. செமிகண்டக்டர்
3. மின்சாரம்
4.உலோகம்
'நிலையற்ற தன்மை ஓராண்டு நீடிக்க வாய்ப்பு'
எஸ்.கார்த்திகேயன் சி.இ.ஓ., வின்வொர்த் வெல்த் சொல்யூஷன்ஸ்
தற்போதைய நிச்சயமற்ற சூழல் இன்னும் ஓராண்டுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதால், முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை தவிர்த்து, பணத்தை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சீன நிறுவனங்கள் மூடப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்தியாவிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிப்பது அவசியமாகிறது.
எரிபொருள் தேவைகளுக்கான செலவு அதிகரித்தாலும், பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு சார்ந்த துறைகள் லாபகரமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எனவே, வதந்திகளை நம்பாமல், நிறுவனத்தின் லாப வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்களை ஆராய்ந்து, தரமான பங்குகளை மட்டும் தேர்வு செய்து, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யுங்கள்.
வங்கி, ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் மற்றும் ஐ.டி., துறை சார்ந்த பங்குகளில் ஊசலாட்டம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய சூழலில் அவசரப்படாமல் சந்தை நிலவரத்தை கண்காணித்து காத்திருப்பதே புத்திசாலித்தனம். போர் பதற்றம் தணிந்து, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை துளிர்விடும் போது தான் சந்தைகள் தனது பழைய நிலைக்கு திரும்பும்.
கவனிக்க வேண்டிய துறைகள்
1. இன்ப்ரா
2. பாதுகாப்பு
3. செமிகண்டக்டர்


