ADDED : செப் 15, 2025 11:59 PM

புதுடில்லி : இந்தியாவில் இளம் வயதினருக்கான வேலையின்மை விகிதம், கடந்த ஆகஸ்டில் 5.10 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் 5.20 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.
நடப்பாண்டு ஏப்ரல் முதல், மாதந்தோறும் வேலையின்மை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. வேலையின்மை கடந்த ஏப்ரலில் 5.10 சதவீதமாகவும்; மே, ஜூனில் 5.60 சதவீதமாகவும்; ஜூலையில் 5.20 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த மாதம் ஆண்கள் பிரிவில் வேலையின்மை 5 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூலையில் இது 5.30 சதவீதமாக இருந்தது. பணி செய்யும் பெண்களின் விகிதம் ஜூலையில் 31.60 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 32.00 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் கிராமப்புறங்களில் வேலையின்மை 4.30 சதவீதமாகவும்; நகர்ப்புறங்களில் 6.70 சதவீதமாகவும் இருந்தது.