செப்., 15க்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் உண்டு
செப்., 15க்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் உண்டு
ADDED : செப் 02, 2025 11:47 PM

புதுடில்லி:கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 15ம் தேதி தான் கடைசி நாள். கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடையவிருந்த காலக்கெடுவை, வரி தாக்கல் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால், செப்டம்பர் 15 வரை நீட்டிப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் 15ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்னவாகும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். காலக்கெடுவுக்குள் வரி தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில், டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக அபராதத்துடன் வரி செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அதாவது, காலதாமதமாக வரி செலுத்துவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு.
வருமான வரி சட்டப்பிரிவு 234 எப் படி இதற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோரின் வருமானத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறுவோர், தாமதமாக வரி தாக்கல் செய்வதற்கு 5,000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுவோர் அதிகபட்சமாக 1,000 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.
எனவே, வரும் 15ம் தேதிக்கு முன்னதாகவே வரி தாக்கல் செய்தால், அபராதம் செலுத்துவதை தவிர்க்கலாம்.