ADDED : ஜூன் 16, 2026 07:47 AM

திருப்பூர்: பஞ்சு விலை குறைந்ததால், ஒசைரி நுால் விலை நேற்று, மீண்டும் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.
நடப்பு பருத்தி ஆண்டில், பஞ்சு வரத்து சீராக இருந்தும், விலை உயர்ந்தது. சர்வதேச சந்தையில் பஞ்சு விலை உயர்ந்ததாலும், பாலியஸ்டர் நுால் விலை உயர்ந்ததாலும், பஞ்சுக்கு கிராக்கி ஏற்பட்டது. இதன் காரணமாக பஞ்சு விலை ஒரு கேண்டி (356 கிலோ) 64,000 ரூபாயாக இருந்து 71,000 ரூபாய் வரை உயர்ந்தது.
பஞ்சு விலை உயர்வால் பின்னலாடை தயாரிக்க பயன்படும் ஒசைரி நுால் விலையும் உயர்ந்தது. தொழில்துறைனயினரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, பஞ்சு இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்தது; இதன் எதிரொலியாக கடந்த 1ம் தேதி நுால் விலை 10 ரூபாய் குறைந்தது.
அதன் பிறகும் சர்வதேச சந்தையில் பஞ்சு விலை குறைந்ததால், நம் நாட்டில் பஞ்சு விலை ஒரு கேண்டி, 66,000 ரூபாயாக குறைந்துள்ளது; இதன் காரணமாக ஒசைரி நுால் விலை நேற்று மேலும் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
