சீன பொருட்கள் குவிப்பை தடுக்க வர்த்தக அமைச்சகம் கண்காணிப்பு
சீன பொருட்கள் குவிப்பை தடுக்க வர்த்தக அமைச்சகம் கண்காணிப்பு
ADDED : அக் 20, 2025 10:37 PM

புதுடில்லி: சீன பொருட்கள் இறக்குமதிக்கு 130 சதவீத வரி விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், பாதிப்பை சமாளிக்க, பொருட்களை இந்தியாவுக்குள் சீனா குவிக்காதவாறு, மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக பிரச்னை அதிகரித்துள்ளது. அரியவகை தாதுப் பொருட்கள் ஏற்றுமதி மீதான கூடுதல் வரிவிதிப்பை கைவிடாததால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
பதில் வரியாக, சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு 130 சதவீதம் வரை விதிக்கப் போவதாக, அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனால், தன் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய சீனா திட்டமிடுவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவுக்குள் எ லக்ட்ரானிக்ஸ், ஜவுளி, ஆடை, பொம்மை, பிளாஸ்டிக் பொருட்களை சீனா அதிக அளவில் குவிக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்துறைகளின் இறக்குமதியை தீவிரமாக கண்காணிக்குமாறு, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான 'பியோ'வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நேரடி சீன ஏற்றுமதி மட்டுமின்றி, மூன்றாவது நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் ஸ்டீல், டயர், சோலார் சாதனங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான பொருட்குவிப்பு தடுப்பு நடவடிக்கைகளிலும், வர்த்தக அமைச்சகம் முழு கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

