ADDED : ஜூன் 03, 2026 02:07 AM

பெட்ரோலை விஞ்சியது டீசல் விற்பனை
புதுடில்லி: நாட்டில் மே மாதத்தில் டீசல் விற்பனை 6.40 சதவீதம் உயர்ந்து, பெட்ரோல் விற்பனை வளர்ச்சியை விஞ்சியுள்ளது. அதேநேரம், பெட்ரோல் விற்பனை 4.80 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில்,எல்.பி.ஜி., விற்பனை 24 சதவீதம் சரிந்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் விற்பனை தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் எல்.பி.ஜி., விற்பனை மேலும் சரிந்துள்ளது.
ஏப்ரலில் 16 சதவீதமாக இருந்த சரிவு, மே மாதத்தில் 24 சதவீதமாக மேலும் சரிந்தது.
மேற்காசிய போர் பதற்றம் தணிந்ததால், எல்.பி.ஜி., முன்பதிவில் வாடிக்கையாளர்கள் அவசரம் காட்டாதது இதற்கு காரணமானது. அதேநேரத்தில், விமான எரிபொருள் விற்பனை 1.80 சதவீதம் அதிகரித்துள்ளது.
டீசல் விற்பனை அதிகரிப்பு
மேற்காசிய போர் எதிரொலியால் மே மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டன. இருப்பினும், தனியார் நிறுவனங்களை விட பொதுத்துறை நிறுவனங்களின் எரிபொருள் நிலையங்களில் டீசல் விலை குறைவாக இருந்ததால், அதை அதிக அளவில் பயன்படுத்துவோர் அந்நிலையங்களுக்கு மாறினர். இதுவும் டீசல் விற்பனை உயர்வுக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
