தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும்

 நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும்

 நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும்


UPDATED : பிப் 02, 2026 04:56 AM

ADDED : பிப் 02, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2026 04:56 AM ADDED : பிப் 02, 2026 04:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, அதற்கான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. அரசு செய்யும் முதலீடு தொடர்ந்து வளர வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்து, அதை கணிசமாக உயர்த்தியதே இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சம்.

அரசின் முதலீட்டு வளர்ச்சியை, 11 லட்சம் கோடியிலிருந்து 12.20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியது இந்த பட்ஜெட்டில் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு, இந்த முதலீட்டு ஒதுக்கீடு நேரடியாக உதவும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

டிஜிட்டல் இந்தியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, 'கிளவுட் ஸ்டோரேஜ்' துறைக்கு 2047ம் ஆண்டு வரை வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Image 1529921


அரசின் அர்ப்பணிப்பு இது, உலகளாவிய நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யத் துாண்டுவதுடன், நம் நாட்டின் தரவு பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு பாதுகாப்பு அரணாகவும் அமையும். பாதுகாப்பு, செமி கண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய முக்கியத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையும், ஒதுக்கீடுகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அரசின் நீண்டகால அர்ப்பணிப்பைத் தெளிவாக காட்டுகின்றன.

நாம், இந்த பட்ஜெட்டில் ஐ.டி., துறைக்கு வழங்கிய சலுகைகளை தனித்து பார்க்க வேண்டும். இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் அமைக்க பல சர்வதேச நிறுவனங்கள் ஏற்கெனவே ஆர்வம் காட்டி வருகின்றன.

அதற்கான முதலீடுகளும் கணிசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நிறுவனங்களின் செயல்பாடு சார்ந்த வரிச் சிக்கல்கள் தொடர்ந்து இருந்து வந்தன.

இந்தியாவில் இந்த நிறுவனங்கள் காட்டும் லாபம் போதுமானதாக இல்லை என வரித்துறை நிலைப்பாடு எடுத்து, அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டன. தற்போது இந்தச் சிக்கலை தீர்க்கும் வகையில் 'சேப் ஹார்பர் மார்ஜின்' என்ற புதிய வழிமுறையை அரசு உருவாக்கியுள்ளது.

அதாவது, இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் 15.50 சதவீதம் லாப அளவை எட்டினால், எந்த கேள்வியும் கேட்கப்படாது என்று அரசு உறுதியளித்துள்ளது. இது, பல அன்னிய நிறுவனங்களை இந்தியாவில் தொழில் துவங்க ஊக்கப்படுத்தும். மேலும், பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

எந்த பட்ஜெட்டிலுமே, தனிநபர்களுக்கு வரி விலக்கு இருக்கிறதா என்ற ஆர்வமே பொதுவாக வெளிப்படும். ஆனால், இந்த பட்ஜெட்டில் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இது பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது உண்மை.

அதேசமயம், தனிநபர் வரி விதிப்பில் சென்ற ஆண்டே கணிசமான வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜி.எஸ்.டி., வருவாயும் நடப்பு நிதியாண்டை விட வரும் நிதியாண்டில் குறைவாக இருக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது. இதற்கு, நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி., வரிக் குறைப்பு சீர்திருந்தங்களே காரணம். நேரடி மற்றும் மறைமுக வரிகளை அரசு தொடர்ச்சியாக குறைத்து வரும் இந்தச் சூழலில், மேலும் வரிகளை குறைக்க அரசுக்கு இடமில்லை என்பது தெளிவாகிறது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுக்கும் நிதிப் பகிர்வை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 41 சதவீதம் என்பதை இந்த பட்ஜெட்டில் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இது, மாநிலங்களுக்கு தெளிவையும் நீட்சியையும் தரும் வகையில் அமைகிறது. இதுதான் நம் நாட்டின் வரலாற்றிலேயே மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிக நிதிப் பகிர்வு.

இந்த பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கு பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, 'பை பேக்' சட்டத்திருத்தமும், 'எப் அண்டு ஓ'விற்கான வரி உயர்வும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், 'பை பேக்-'கிற்கு வசூலிக்கப்பட்ட வரி மிகவும் அதிகமாக இருந்ததால், நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை.

வரும் நிதியாண்டில் நீண்டகால முதலீட்டு ஆதாய வரி மற்றும் குறுகியகால முதலீட்டு ஆதாய வரியே, 'பை- பேக்'கிற்கு பொருந்தும் என அரசு அறிவித்துள்ளதால், இந்த ஆண்டு 'பை -பேக்' அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். சந்தை சரிவை சந்திக்கும்போது அதை சரிசெய்ய முதலீட்டாளர்களுக்கு 'பை பேக்' பெரிதும் உதவும்.

முக்கியத்துவம் குறைந்தபட்ச கார்ப்பரேட் வரி, 15லிருந்து 14 சதவீதமாக இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டாலும், இது சலுகை அல்ல. இதற்கு முன், நிறுவனங்கள் செலுத்தும் இந்த குறைந்தபட்ச வரி, எதிர்காலங்களில் வரும் லாபத்துடன் சரிசெய்யப்படும் வாய்ப்பு இருந்தது.

தங்களுக்கு வரி கட்ட அவசியமில்லாத ஆண்டுகளில் செலுத்தப்படும் இந்த குறைந்தபட்ச வரி, அதற்கு பின் வரும் வரி தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத வகையில் இந்த மாற்றம் அமைகிறது. கார்ப்பரேட் வரி வசூலை அதிகப்படுத்தும் வகையில் இந்த மாற்றம் அமையும்.

ஒட்டுமொத்தமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கவனம் செலுத்த வேண்டிய துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிதிப் பற்றாக்குறையை குறைக்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும், அரசு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

வரிகளில் அதிக மாற்றங்கள் கொண்டு வராமல், வருவாய், -செலவு, -முதலீடு ஆகியவற்றுக்கு இடையே ஒருவித சமநிலையை பேணும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதே அதன் சாதனை.

வருவாய், செலவு, முதலீடு ஆகியவற்றுக்கு இடையே ஒருவித சமநிலையை பேணும் வகையில் அமைந்துள்ளதே இந்த பட்ஜெட்டின் சாதனை

ஷியாம் சேகர்

நிறுவனர், ஐதாட் பி.எம்.எஸ்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us