தொழில் செய்வதை எளிதாக்க ' இ- - பைலிங்' செய்முறை விளக்கம்
தொழில் செய்வதை எளிதாக்க ' இ- - பைலிங்' செய்முறை விளக்கம்
ADDED : மே 07, 2026 01:08 AM

சென்னை: நிறுவன பதிவுகள் தொடர்பான கலந்துரையாடலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கம்பெனி செகரட்டரிகள் பயிற்சி மையத்தின் மண்டல அலுவலகத்தில் கம்பெனிகள் விவகார அமைச்சகம் நேற்று நடத்தியது.
அரசு நடைமுறைகளை இணையத்தில் எளிமைப்படுத்தி, 'தொழில் நடத்துவதற்கான நடைமுறைகளை எளிதாக்குவது' இதன் நோக்கம் ஆகும்.
புதிய நிறுவனங்களை கம்பெனிகள் பதிவாளரிடம் பதிவு செய்வது, இதர சட்ட நடைமுறைகளை இணையம் வழியாக மேற்கொள்ளும்போது சந்திக்கும் பிரச்னைகள் குறித்து செய்முறை பயிற்சியுடன் விவாதம் நடத்தப்பட்டது.
கம்பெனிகளின் பதிவாளர் ஸ்ரீகுமார் (தமிழகம்) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்ப்பரேட் அபேர்ஸ் நிறுவனத்தின் பொது இயக்குநர் ஞானேஸ்வர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பட்டயக் கணக்காளர்கள், அடக்க விலை கணக்காளர்கள், கம்பெனி செகரட்டரிகள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.
'மத்திய அரசு, 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் தொழில் வர்த்தக துறைகளில் பல்வேறு படிவங்களை தாக்கல் செய்வது, திருத்தம் செய்வது ஆகியவற்றை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
'அவ்வகையில், எம்.சி.ஏ., 21-வி 3 என்ற பைலிங் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. தற்போது நடைபெற்ற கலந்துரையாடலில் பெற்ற அனுபவக் கருத்துகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்' என்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
