இரண்டாம் தலைமுறை எத்தனால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
இரண்டாம் தலைமுறை எத்தனால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
ADDED : செப் 25, 2025 02:32 AM

புதுடில்லி:இரண்டாம் தலைமுறை எத்தனால் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து, சில புதிய நிபந்தனைகளுடன் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இரண்டாம் தலைமுறை எத்தனால் என்பது, உணவுக்காக பயன்படாத அல்லது உணவு அல்லாத விவசாய பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை உயிரி எரிபொருளாகும். இது, கரும்பு சக்கை, மரக்கழிவுகள், விவசாய கழிவுகள், உதாரணமாக அரிசி மற்றும் கோதுமை வைக்கோல் மற்றும் ஆலைகளில் இருந்து வரும் கழிவுகள் போன்ற செல்லுலோஸ் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த இரண்டாம் தலைமுறை எத்தனால், உற்பத்தியின்போது குறைந்த கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுவதால், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க உதவுகிறது.
இதுநாள் வரை உள்நாட்டு எரிபொருள் கலப்பில் மட்டுமே எத்தனாலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்த நிலையில், உற்பத்தி அதிகரிப்பால் எத்தனால் ஏற்றுமதியின் பக்கம் அரசு கவனத்தை திருப்பியுள்ளது. முதற்கட்டமாக, ஏற்றுமதிக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்து, அதற்கான நிபந்தனைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள், அதிகாரிகளிடம் இருந்து அனுமதி மற்றும் எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் குறித்த சான்றிதழை கட்டாயம் பெற வேண்டும்.
விதிமுறைகளின் படி உற்பத்தி நடந்ததா என்பதை உறுதி செய்ய, அதிகாரிகளால் சோதனை நடத்தப்படும். இந்த புதிய எத்தனால் கொள்கை, உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.