ஜி.எஸ்.டி.,யால் ரூ.2,500 கோடி இழப்பு மத்திய அரசுக்கு வாகனத்துறை கடிதம்
ஜி.எஸ்.டி.,யால் ரூ.2,500 கோடி இழப்பு மத்திய அரசுக்கு வாகனத்துறை கடிதம்
ADDED : செப் 14, 2025 11:15 PM

புதுடில்லி:வரும் செப்டம்பர் 22ம் தேதி ஜி.எஸ்.டி., 2.0 அமலுக்கு வர உள்ளது.
இதில், வாகனங்களுக்கான செஸ் வரி கிடையாது என்பதால், முகவர்களிடம் உள்ள இழப்பீடு செஸ் இருப்பை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.
இதனால், பண்டிகை காலத்திற்கு முன் 2,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி., விதிமுறைகளின் படி, செஸ் இருப்பு ஜி.எஸ்.டி., செலுத்துவதற்காக பயன்படுத்த முடியாது. எனவே, இந்த செஸ் இருப்பு காலாவதியாகிவிடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர்களுக்கு, தற்போது உள்ள இழப்பீடு செஸ் இருப்பை வாகனத் துறை பயன்படுத்த பிரத்யேக வழிமுறைகளை ஏற்படுத்த, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
வாகன முகவர்கள், உற்பத்தியாளர்களிடம் இருந்து வாகனங்களை வாங்க, 95 சதவீதம் அளவுக்கு வங்கிக் கடன் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, பணப்புழக்கம் குறைவாக இருப்பதால், வாகன முகவர்கள் மத்திய அரசிடம் இழப்பை தடுக்க வலியுறுத்தி உள்ளனர்.