ADDED : மே 11, 2026 02:47 AM

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வைப்பு நிதி திட்டங்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி தருகிறார்களே? இவர்களை நம்பி முதலீடு செய்யலாமா?
- ஜி. கல்யாணி, வாட்ஸ் ஆப்
இப்படி பாருங்கள். வங்கி துறையில் ஒருவிதமான தேக்கம் இருக்கிறது. கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், கடன் கொடுப்பதற்கான நிதி ஆதாரம் வங்கிகளிடம் இல்லை. அதனால்தான் கடந்த ஓராண்டாக, ரெப்போ விகிதம் 6.50ல் இருந்து 5.25 சதவீதமாக குறைந்த போதிலும், வங்கிகள் தங்கள் வைப்பு நிதி வட்டி விகிதங்களைப் பெருமளவு குறைக்க முடியவில்லை.
இந்த நிலை அப்படியேதான் தொடர போவதாக வங்கி துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். பொதுத்துறை வங்கிகளிலேயே இதுதான் நிலை எனும் போது, சிறு நிதி வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடமும் போதிய நிதி ஆதாரம் இருக்காது. அவர்கள் கூடுதல் வட்டி கொடுத்தோ, சந்தையில் இருந்து கடன் வாங்கியோதான் தங்கள் தொழில் தேவைக்கான நிதியை திரட்டியாக வேண்டும்.
வங்கியல்லாத நிறுவனங்களிலேயே பல தரமான நிறுவனங்கள் உள்ளன. நல்லவற்றை தேர்வு செய்வதோடு, ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாக பல இடங்களிலும் முதலீடு செய்யுங்கள். கூடுதல் வட்டியின் பலனையும் அதேநேரம் கிரெடிட் ரிஸ்க்கையும் தங்களால் குறைத்து கொள்ள முடியும்.
பட்டியலிடப்படாத பங்குகளை வாங்குவது எப்படி? ஸ்விக்கி, ஓலா போன்ற பங்குகளை வாங்கி, லாபம் பார்த்ததாக சொல்கிறார்களே?
டி. கிருஷ்ணமூர்த்தி, மின்னஞ்சல்.
இத்தகைய பட்டியலிடப்ப டாத பங்குகளை வாங்குவதற்கு என்று ஒரு சில வலைதளங்கள் உள்ளன. இணையத்தில் தேடினால் நீங்களே அவற்றை கண்டுபிடித்து விடலாம். எப்போதுமே வெற்றிக்கதைகள்தான் உரத்து சொல்லப்படும். தோல்விகள் பேசப்படுவதில்லை. பட்டியலிடப்படாத நிலையில் மிக அதிக பிரீமியத்தில் விற்பனை ஆன பல நிறுவன பங்குகள், பட்டியலிடப்பட்டவுடன், அதலபாதாளத்துக்கு வீழ்ந்த சரித்திரம் உண்டு.
இதற்கு அடிப்படை, அந்த நிறுவனங்களைப் பற்றி போதிய விபரங்கள் வெளியே தெரிவதில்லை என்பதுதான். எல்லாமே மூடு மந்திரமாக இருக்கும். அவர் வாங்கியிருக்கிறார், இவர் வாங்கியிருக்கிறார் என்று பெரிய முதலீட்டாளர்களுடைய பெயர்கள் சொல்லப்படும்; 'இவ்வளவு லாபம் கிடைத்ததாம்' என்று சொல்லப்படும் தகவல்கள் யூகங்களின் அடிப்படையிலேயே இருக்கும்.
மேலும், இதில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான செபி விதி ஒன்று உண்டு. பட்டியலிடப்படாத பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்கள், அந்தப் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, அடுத்த ஆறு மாதங்களுக்கு கைவசம் உள்ள பங்குகளை விற்க முடியாது. ஒருவேளை சந்தைக்கு வந்தவுடன் விலை சரிந்தாலும், அவற்றை விற்க முடியாமல் நஷ்டத்தோடு அப்பங்குகளை ஆறு மாதங்கள் நீங்கள் சுமந்தே ஆக வேண்டும்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட, வெளிப்படையான வரவு- - செலவு கணக்குகளை கொண்ட நிறுவனங்களிலேயே ஏராளமான முத்துக்களும், வைரங்களும், வைடூரியங்களும் உள்ளன. அவற்றை தேடிக் கண்டுபிடியுங்கள். அதை விடுத்து எதற்கு தெரியாத புதரில் கையை விடுகிறீர்கள்?
மார்ச் 31 அன்று பொதுத் துறை வங்கியில் இருந்து வீட்டுக்கடன் விடுவிக்கப்பட்டது. ஆனால், ஏப்., 10ம் தேதியே, முதல் இ.எம்.ஐ., பிடிக்கப்பட்டது. பத்து நாட்களில் எப்படி இ.எம்.ஐ., பிடித்தம் செய்ய முடியும்?
கே. ராஜசேகரன், வாட்ஸ் ஆப்
முழு இ.எம்.ஐ., தொகை பிடித்தம் செய்யப்பட்டதா, அல்லது அந்த முதல் 10 நாட்களுக்கான வட்டித் தொகை மட்டும் பிடித்தம் செய்யப்பட்டதா என்று வீட்டுக்கடன் கணக்கில் போய் சரி பாருங்கள். வழக்கமாக வங்கியின் இ.எம்.ஐ., தேதி ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி என்று வங்கியின் சிஸ்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தால், கணக்கு சுழற்சியை சரிசெய்வதற்காக இந்த 10 நாட் களுக்கான வட்டியை மட்டும் முதலில் பிடித்திருப்பார்கள். அடுத்த மாதம் முதல் வழக்க மான 30 நாட்களுக்கான முழு இ.எம்.ஐ., சுழற்சி தொடங்கி விடும்.
இரண்டு, எந்த தேதியில் இருந்து முதல் தவணை தொகை பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல், உங்கள் வீட்டுக்கடன் அனுமதி கடிதத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருவேளை உங்களுக்கு இந்த தகவல் கொடுக்கப்படாமல், இ.எம்.ஐ., பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால், அந்த வங்கியின் நோடல் அலுவலரிடம் புகார் அளிக்கலாம்.
இப்படி பாருங்கள், இ.எம்.ஐ., எவ்வளவு விரைவாக தொடங்கி, கடன் அடைகிறதோ அவ்வளவு நல்லது. கூடுதலாக பணம் பிடித்தால், அது அசல் தொகையில்தானே போய் கழியும்?
அரசு ஓய்வூதியர்களுக்கும், வங்கி ஓய்வூதியர்களுக்கும் வருமான வரிச் சட்டம் ஒன்றுதான். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஏற்றபடி அரசு ஓய்வூதியர்களுக்கும் பென்சன் உயர்கிறது. வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஏற்ப வங்கி ஓய்வூதியர்களுக்கும் பென்சன் ஏன் உயர்த்தப்படுவதில்லை? இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதி எண் 14 கீழ் அனைவரும் சமம் என்பதற்கு மாறான சட்ட மீறல் ஆகாதா?
என். சம்பத் , வாட்ஸ் ஆப்
அரசு மற்றும் வங்கிகள் முன்வைக்கும் சட்டப்பூர்வமான வாதம் என்னவென்றால், வங்கி ஓய்வூதிய திட்டம் என்பது 'வங்கி ஓய்வூதிய விதிகள், 1995' என்ற ஒப்பந்தத்தின்கீழ் உருவானது. இது வங்கிகளின் லாபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பால் நிர்வகிக்கப்படும் 'நிதி' சார்ந்த திட்டம்.
எனவே, மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசு கருவூலத்திலிருந்து வழங்கப்படும் ஓய்வூதியத்தையும் இதையும் சட்டத்தின் முன் சமமாக ஒப்பிட முடியாது என்கின்றனர். இதனால்தான், இது அரசியல் அமைப்புச் சட்ட விதி 14ன் கீழ் சட்ட மீறலாக கருதப்படுவதில்லை.
இந்த விஷயம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. 'சமமான வேலைக்கு சமமான ஓய்வூதியம்' மற்றும் 'பணவீக்கத்துக்கு ஏற்ப அடிப்படை ஓய்வூதியத்தை உயர்த்துதல்' ஆகிய அம்சங்கள் குறித்து நீதிமன்றம்தான் இறுதித் தீர்ப்பு வழங்க வேண்டும்.
மனை, பிளாட் போன்றவற்றில் முதலீடு செய்வதை விட, ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் பண்டுகளில் முதலீடு செய்வது நல்ல லாபம் தரும் என்கிறார்களே, உண்மையா?
பி. ராம்குமார், சே லம்
தங்கத்தை அடிப்படையாக வைத்து எப்படி தங்க மியூச்சுவல் பண்டுகள் உள்ளனவோ, அதேபோல், ரியல் எஸ்டேட் முதலீடுகளை அடிப்படையாக கொண்டு இந்த முதலீட்டு பண்டுகள் இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல பண்டுகள் உருவாகியுள்ளன. கையில் சொத்துக்கள் வாங்காமலேயே, இந்தியாவின் பெரிய பெரிய ஐடி பார்க்குகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் ஒரு துளி உரிமையாளராக மாறும் வாய்ப்பு இது.
அதேநேரம், வணிக வளாகங்கள் வாயிலாக கிடைக்கும் வாடகை வருவாயில் குறைந்தபட்சம் 90 சதவீதத்தை முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக பிரித்து கொடுக்க வேண்டும் என்பது செபியின் கடுமையான விதி. இதனால், முதலீட்டாளர்களுக்கு வங்கி வட்டியைவிட நல்ல வருமானமும் கிடைக்கிறது. இதுபோல் உள்கட்டுமான முதலீட்டு ட்ரஸ்டுகளும் நல்ல வருவாயை ஈட்டி தருகின்றன.
