/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
இந்திய வங்கிகளை குறிவைக்கும் சர்வதேச நிறுவனங்கள்
/
இந்திய வங்கிகளை குறிவைக்கும் சர்வதேச நிறுவனங்கள்
ADDED : அக் 20, 2025 10:34 PM

மும்பை: தனியார் துறையைச் சேர்ந்த ஆர்.பி.எல்., வங்கியின் 60 சதவீத பங்குகளை, வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய வங்கி குழுமமாக திகழும் எமிரேட்ஸ் என்.பி.டி., கையகப்படுத்த உள்ளது.
ஒரு பங்கின் விலை 280 ரூபாய் வீதம், 26,853 கோடி ரூபாயை எமிரேட்ஸ் என்.பி.டி., முதலீடு செய்ய உள்ளது. இத்திட்டம் நிறைவு பெறும்பட்சத்தில், இந்திய வங்கி துறையில் செய்யப்பட்ட மிகப்பெரிய அன்னிய முதலீடு இதுவாக இருக்கும்.
இந்நிலையில், இந்த கையகப்படுத்துதல் மேலும் பல உலகளாவிய வங்கிகள் இந்தியாவில் முதலீடு செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதத்தில் மட்டும், இரண்டு உலகளாவிய நிறுவனங்கள் இது போன்ற முதலீடு களை இந்தியாவில் மேற்கொண்டுள்ளன.
கடந்த 2ம் தேதி, அபுதாபியை சேர்ந்தச் அவெனிர் இன்வெஸ்ட்மென்ட் ஆர்.எஸ்.சி., நிறுவனம், முன்பு இண்டியாபுல்ஸ் கேப்பிடல் என அழைக்கப்பட்ட சம்மான் கேப்பிடல் நிறுவனத்தில் 43.46 சதவீத பங்குகளை 8,800 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புக்கொண்டது.
இதற்கு முன் கடந்த செப்டம்பரில், ரிசர்வ் வங்கியின் அனுமதியைத் தொடர்ந்து, ஜப்பானிய நிறுவனமான சுமிட்டோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப்பரேஷன், எஸ்., பேங்கில் 20 சதவீத பங்கு கையகப்படுத்துதலை முடித்தது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின், இந்திய வங்கித் துறைக்கான கொள்கை கட்டமைப்பு, உலகமயமாக்கலை நோக்கி திரும்புவதாக இத்துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
'ரூ.50,000 கோடி ரெடி
'இந்தியாவின் நிதி மற்றும் வங்கித் துறையில், 50,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்யும் திட்டம் இருப்பதாக அன்னிய முதலீட்டாளர்கள் அறிவித்துள்ளனர்' என, அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்தியா முதலீடுகளுக்கான ஒரு சோலையாக உள்ளது. இன்று முதலீட்டுக்கு ஏற்ற நாடாக உருவாகி வருகிறது. சந்தை நிலையற்ற சூழல் காணப்படும் காலங்களிலும் கூட, அன்னிய நேரடி முதலீடு வலுவாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.