ஒரே பதவிக்கு இரண்டு அதிகாரிகள் போட்டி நிர்வாக மேம்பாட்டு துறையால் குளறுபடி
ஒரே பதவிக்கு இரண்டு அதிகாரிகள் போட்டி நிர்வாக மேம்பாட்டு துறையால் குளறுபடி
ADDED : மே 03, 2026 02:01 AM
ஹாசன்: ஒரே பதவிக்கு, இரண்டு அதிகாரிகள் முட்டி மோதுவதால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் குளறுபடியே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹாசன் மாவட்டத்தில், ஹேமாவதி அணை திட்டத்திற்கான சிறப்பு நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக இருந்தவர் மஞ்சுநாத். இவரை இடம் மாற்ற ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறை ஏப்ரல், 24ம் தேதி உத்தரவிட்டது. இவரது இடத்துக்கு ஜி.பி.ஏ., என்ற, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில் இருந்த மகேஷ் என்பவரை நியமித்தது.
இடமாற்றம் குறித்து கேள்வி எழுப்பிய மஞ்சுநாத், தன் பதவிக்காலம் முடிய ஒரு ஆண்டே இருக்கும் நிலையில், தன்னை இடம் மாற்றியது குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தை நாடினார். தீர்ப்பாயமும் அவரை அதே பதவியில் நீடிக்க அனுமதிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், சிறப்பு நிலம் கையகப்படுத்தும் அதிகாரி பதவியில் அமர்ந்துள்ள மகேஷ், பதவியை விட்டுத்தர மறுக்கிறார்.
ஒரே பதவியில் இரண்டு அதிகாரிகள் அமர்ந்துள்ளனர். இது, அன்றாட பணிகளுக்கு இடையூறாக உள்ளது. தங்களின் பணிகளுக்காக அங்கு வரும் பொது மக்கள், தங்களின் ஆவணங்களில் இரண்டு அதிகாரிகளில் யாரிடம் கையெழுத்து பெறுவது என, குழம்புகின்றனர்.
மஞ்சுநாத் கூறியதாவது:
ஜி.பி.ஏ.,வில் இருந்த மகேஷ், இடைத்தரகர்களின் உதவியுடன், குறுக்கு வழியில் இங்கு இடமாற்றம் பெற்றுள்ளார். எனக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே, பதவிக்காலம் உள்ளது. ஓராண்டு என்னை தற்போதைய பதவியில் நீட்டிக்கும்படி அரசிடம் வேண்டுகோள் விடுத்தேன்; ஆனாலும், அரசு இடமாற்றி விட்டது.
இதை எதிர்த்து நான் கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தை நாடி, என் இடமாற்றத்துக்கு தடையுத்தரவு பெற்றுள்ளேன். நான் இருந்த அதே பதவியில் நீட்டிக்கும்படி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நான் நேற்று முன் தினம்பணிக்கு ஆஜரானதாக அரசுக்கும், வருவாய்த்துறை மற்றும் மாவட்ட கலெக்டருக்கும் நான் தகவல் அறுப்பினேன். ஆனால், மகேஷ், என்னிடம் பொறுப்பை ஒப்படைக்காமல் அமர்ந்துள்ளார். இது, நீதிமன்ற அவமதிப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகேஷ் கூறியதாவது:
இதற்கு முன் இருந்த அதிகாரி, தீர்ப்பாயம் மூலம், இதே பதவிக்கு திரும்பியது, எனக்கு தெரியாது. எனக்கு கொடுத்த பொறுப்பை நிர்வகிக்க வந்துள்ளேன்.
நான் ஜி.பி.ஏ.,வில் உதவி இயக்குநராக இருந்தேன். என்னை ஹேமாவதி அணை திட்டத்தின் சிறப்பு நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக, ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறை இடமாற்றியது.
நான் மாவட்ட கலெக்டரிடம், ரிபோர்ட் செய்து பணிக்கு வந்துள்ளேன். பணியை துவக்கினேன். ஆனால், தீர்ப்பாய உத்தரவுடன் மஞ்சுநாத், பணிக்கு வந்துள்ளார். இந்த பதவியில் யார் இருக்க வேண்டும் என்பதை, அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
