'இடி' தர்பார்!
ரா.பேட்டை முனிசி., கவுன்சில் ஒப்புதல் இல்லாமலேயே, புல் மார்க்கெட்டில் முறையற்ற கட்டடங்களை காலி செய்ய நோட்டீஸ் கொடுக்காமலேயே, 'முனி' இடிப்பு வேலையை செய்தாரு.
இடித்து முடித்து ஒரு வாரம் கடந்த பின், கடைசியாக நடந்த கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றாரு. செத்த பிறகு ஆக்சிஜனுக்கு என்ன வேலையோ?
பொறுப்பான முனிசி., தலைவரு, ஆபீசரு இடிப்பு பிரச்னையில் தலையிடலயாம். அந்த சாபம் தனக்கு வேணாமுன்னு கிட்ட கூட வரலயாம். கவுன்சில் ஒப்புதல் பெறாமல் எந்த தைரியத்தில் யாருடைய உத்தரவில் சட்டத்தை ஒரு தனிநபர் தனது கையில் எடுத்து, இடிக்க முடிந்தது என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இவரோட ஆக் ஷனுக்கு அடுத்த தேர்தலில் பரிசு கிடைக்கும்னு சொல்றாங்க.
பினாயில் பினாமி!
வாங்காத பினாயிலுக்கு கணக்கு காட்டியது ஏன் என, முனிசி., கூட்டத்தில் கை கட்சி உறுப்பினரே கணக்கு கேட்டாரு. பினாயில் வாங்கினதா பினாமி பேரில் 'பில்' வாங்கப்பட்டதாம். பில் தொகை வாங்கின நபர் 'ஜெராக்ஸ்' கவுன்சிலராம். பினாயில் ஊழல் ஒருபுறமும், மனித கழிவுகளை அகற்றும் இயந்திர பயன்பாட்டில் முறைகேடும் நடந்ததாகவும் பேசப்பட்டது.
தெருநாய்கள் இனப்பெருக்கம் தடுக்க ஒதுக்கிய பணம் செலவிடப்பட்டதா, தெருநாய்கள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டதா? பதில் சொல்ல வேண்டிய ஆபீசரு மவுனம் காட்டலாமா?
முனிசி.,யில் கல்வி உதவித்தொகைக்கு ஒதுக்கிய பணம் இரண்டு ஆண்டுகளாக வழங்கவே இல்லையாம். அது எந்த கணக்கில் ஒளிந்து கொண்டதோ அல்லது யார் யாருக்கு பங்கு போனதோ என்ற கேள்வி பலரையும் குடையுதாம்.
குழி தோண்டி புதைப்பு
ஒரு மதத்தவரின் மயானத்தில் கால்நடைகள் வெட்டுவதற்காக ஏற்படுத்தின நிலையத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை சமாளிக்க, அங்கு கட்டப்படுவது இறைச்சி கூடம் அல்ல. பிணங்களை கொண்டு வரும் வேளையில் மழையின்போது ஒதுங்குவதற்காக ஏற்படுத்தும் ஒரு கூடாரம் என மழுப்பலான பதிலை, ஒரு முன்னாள் முனிசி., உறுப்பினர் கூறினார்.
அப்படியே இருந்தாலும், முனிசி.,க்கு சொந்தமான இந்த மயானத்தில் கூடாரம் கட்ட அனுமதி கொடுத்தது யார்? 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு எப்போது டெண்டர் விடப்பட்டது? யார் ஒப்பந்ததாரர் என்ற கேள்வி சூறாவளியாக சுழல்கிறது.
ஊரெல்லாம் வெறுப்பு அதிகரித்து, அரசியல் அதிகாரம் படைத்தவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால் அவசர அவசரமாக அந்த திட்டத்தையே குழி தோண்டி அடக்கம் செய்துட்டாங்களாம்.
தண்ணீரே போ...போ...?
பேத்தமங்களா ஏரி நிரம்பியது; இதை அடுத்து, ராம்சாகர் ஏரியும் நிரம்பியது. இதற்கு அர்ப்பணிப்பு பூஜைகள் செய்றாங்களாம். எதுக்காக ஏரி நீருக்கு பூஜை என்ற கேள்வி பல தரப்பில் எழுந்தது. கோல்டு சிட்டிக்கு பயன்படாத தண்ணீரே, ஏரியை விட்டு போ...போ... என்று சொல்லவா பூஜை என்று சிலர் கேட்கிறாங்க.
கோல்டு நகருக்கு அம்ருத் சிட்டி திட்டத்தில் பேத்தமங்களா குடிநீருக்கு ஒதுக்கின 65 'சி' திட்டம் எட்டு ஆண்டுகள் முடிந்தும் கூட ஏரி வரையிலான இணைப்பு குழாய்கள் பதிக்கும் வேலையும் முடியலையே. குடிநீருக்கு நிரந்தர தீர்வு ஏற்பட இன்னும் எத்தனை காலம் தான் காத்திருக்க வேண்டுமோ?

