பாட புத்தகங்கள் அச்சிடும் பணி மாணவர்கள், பெற்றோர் நிம்மதி
பாட புத்தகங்கள் அச்சிடும் பணி மாணவர்கள், பெற்றோர் நிம்மதி
ADDED : மே 22, 2026 05:16 AM
பெங்களூரு: இம்முறை கல்வியாண்டுக்கு தேவையான, பாட புத்தகங்கள் அச்சிடும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பள்ளி திறக்கும் நேரத்தில், பாட புத்தகங்கள் கிடைப்பதால் பெற்றோருக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, கர்நாடக பாட புத்தகங்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் மாதே கவுடா கூறியதாவது:
பாட புத்தகங்கள் அச்சிட, டெண்டர் முடிவு செய்வது தாமதமானாலும், அச்சிடும் பணி தீவிரமாக நடந்ததன் பயனாக, பாட புத்தகங்கள் விரைவில் தயாராகின்றன. ஏற்கனவே, 85 சதவீதத்துக்கும் அதிகமான பணி முடிந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், அனைத்து பணியும் முடியும் என, எதிர்பார்க்கிறோம்.
அச்சிடப்பட்ட, 85 சதவீத்துக்கும் மேற்பட்ட பாட புத்தகங்கள், தாலுகா குடோன்களுக்கு அனுப்பப்பட்டன. இவற்றை பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணி, மே 18 முதல் துவங்கியது.
ஆண்டு தோறும் ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவசமாக மாநில அரசு இலவசமாக பாடபுத்தகங்கள் வழங்குகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகமாக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில், இதுவும் ஒன்றாகும்.
ஆனால், 2026 - 27ம் கல்வியாண்டு முதல், அரசு பி.யு.சி., கல்லுாரி மாணவர்கள், எந்தெந்த அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டனவோ, அங்கு பயிலும் சிறார்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும். பாடபுத்தகங்களுடன், பயிற்சி புத்தகம், டைரிகளும் வழங்கப்படும்.
கர்நாடகாவின், 46,000 அரசு பள்ளிகள், 1,320க்கும் மேற்பட்ட பி.யு.சி., கல்லுாரிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி, பி.யு.சி., கல்லுாரிகளில் இருந்தும், பாட புத்தகங்களுக்கு கோரிக்கை வந்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு வரை, 12ம் வகுப்பு வரை, இம்முறை மொத்தமாக, ஆறு கோடியே 74 லட்சத்து 58,588 பாட புத்தகங்களுக்கு வேண்டுகோள் வந்தது.
கடந்தாண்டு அச்சிடப்பட்டு, மிச்சமான 9.78 லட்சம் பாட புத்தகங்கள் உள்ளன. இந்த புத்தகங்களை தவிர, மற்ற பாட புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதற்காக அரசு 264.62 கோடி ரூபாய் நிதி வழங்கியது
ஒவ்வொரு ஆண்டும் பாட புத்தகங்கள் கிடைப்பது தாமதமாவதால், மாணவ, மாணவியர் பாதிப்படைந்தனர். ஆனால், இம்முறை கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் வேளையில் பாட புத்தகங்கள் அவர்களின் கையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
