UPDATED : ஏப் 26, 2026 12:43 AM
ADDED : ஏப் 26, 2026 12:39 AM

பசவண்ணரின் செய்யுள்கள் என்ற வசனங்களை படித்து, அவற்றை மனதில் பதிய வைத்திருப்பது எளிதல்ல. இருப்பினும், அவற்றை ஓவியங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தால், அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடும் என்ற எண்ணத்தில், சிந்தனையாளரும், ஓவியருமான சிவலிங்கப்பா, பசவண்ணரின் செய்யுள்கள் அனைத்தையும் ஓவியமாக வரைந்து, அதன் விளக்கங்கள் இடம் பெற்ற புத்தகங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்.பசவண்ணர், 1131 - 1196 வரை, 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த கன்னட கவிஞர், தத்துவஞானி, சமூக சீர்திருத்தவாதி. இவர், கர்நாடகாவில் ஜாதி பாகுபாடு, மூட நம்பிக்கை, சடங்குகளுக்கு எதிராக போராடி, சிவனை மட்டுமே கடவுளாக கருதும் லிங்காயத் மரபை பரப்பியவர். இவரின் தன் வசனங்கள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
இத்தகையவர் மீது கொண்ட பற்று காரணமாக, மைசூரை சேர்ந்த சிந்தனையாளரும், ஓவியருமான சிவலிங்கப்பா, ஓவியங்கள் மூலம் மக்களின் மனதில் ஆழமாக பதிவு செய்ய முடியும் என்று நம்பினார். அதன்படி, பசவண்ணரின் வசனங்களை ஓவியமாகவும், அதற்கு விளக்கங்களையும் அளித்து உள்ளார்.
யார் இவர்? இதுகுறித்து சிவலிங்கப்பா கூறியதாவது:
எனக்கு, 10 வயதான போது, பசவண்ணரின் வசனங்கள் மீது பற்று ஏற்பட்டது. அவரின் வசனங்களை பற்றி மேலும் அறிய தொடங்கினேன். என் படிப்பு முடிந்ததும், பெங்களூரு பி.இ.எம்.எல்., தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தேன். ஆனாலும், பசவண்ணரின் வசனங்களை பாராயணம் செய்வதில், ஆர்வம் குறையவில்லை. ஓய்வு பெற்று, 15 ஆண்டுகளான பின்னரும், அவரின் வசனங்களை பாராயணம் செய்து வருகிறேன்.
பசவண்ணரின் வசனங்கள் கேட்பதற்கு இனிமையானவை. இருப்பினும், படிக்க துவங்கினால் விளக்கங்கள் சரியாக புரிவதில்லை. எனவே, இதை உணர்ந்த நான், வசனங்களை விளக்க படங்கள் மூலம் மக்களுக்கு புரிய வைக்க நினைத்தேன். அதில், சாதித்தும் விட்டேன்.
பசவண்ணரின் வசனங்களின் ஓவியங்கள் அடங்கிய ஒரு தொகுப்பை, தார்வாட் பல்கலை கழகத்தின் பசவ ஆய்வுகள் துறைக்கு நன்கொடையாக வழங்கி உள்ளேன். இவை ஓவியம், சிற்பம், இலக்கிய படைப்புகளுக்கு உத்வேகம் அளித்துள்ளன.
மைசூரு மாவட்ட நிர்வாகம், பசவ பாலகா சங்கம், அகில இந்திய வீரசைவ லிங்காயத் மகாசபை, வீரசைவ லிங்காயத் சங்கம் போன்றவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த பசவண்ணர் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக, மைசூரு கலாமந்திரா வளாகத்தில் உள்ள சுசித்ரா கலைக்கூடத்தில், விளக்க படமாக வரையப்பட்ட பசவண்ணர் வசனங்கள் மக்களிடம் பாராட்டை பெற்றன.
இது தவிர, வசன இலக்கியம் தொடர்பாக ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு தேர்ந்த கலைஞரால் மட்டுமே, அத்தகைய திரைப்படத்தை உருவாக்க முடியும்.
எனவே, இது தொடர்பாக நான் நிறைய பயிற்சி செய்தேன். பி.இ.எம்.எல்., தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணிபுரிந்தேன். மற்ற நேரங்களில் ஓவியம் வரைவதில் பயிற்சி செய்தேன்.
பின், வசன இலக்கியத்தை படிக்கும் போது, இதையே ஏன் திரைப்படமாக உருவாக்கக் கூடாது என்று தோன்றியது. அதனால், 10 ஆண்டுகளாக தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்கி வருகிறேன். பல புத்தகங்கள் எழுதி உள்ளேன்.
பசவண்ணரின் வசனங்களை குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளில் திரைப்பட தொடரை துவங்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
