சித்தராமையா தலைமையில் பணியாற்றியது பாக்கியம் சிவகுமார் பெருமிதம்
சித்தராமையா தலைமையில் பணியாற்றியது பாக்கியம் சிவகுமார் பெருமிதம்
ADDED : மே 30, 2026 02:26 AM

பெங்களூரு: முதல்வராக இருந்த போது சித்தராமையா கொண்டு வந்த திட்டங்கள், மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்றும், அவரது தலைமையின் கீழ் அமைச்சர், துணை முதல்வராக பணியாற்றியது எனது பாக்கியம் என்றும், சிவகுமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவரது 'எக்ஸ்' வலைதள பதிவு:
கடவுள் மனிதர்களுக்கு வரங்களையும், சாபங்களையும் கொடுப்பது இல்லை. வாய்ப்புகளை கொடுக்கிறார். அந்த வாய்ப்பில் நாம் என்ன சாதிக்கிறோம் என்பதே முக்கியம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சித்தராமையா தான்.
மைசூரில் குக்கிராமத்தில் பிறந்த அவர் அரசியலுக்கு வந்து, சமூக நீதியின் முன்னோடியாகவும், ஏழைகளின் சகோதரனாகவும் பணியாற்றி உள்ளார்.
தற்போது அவர் பதவியில் இருந்து விலகினாலும், கர்நாடக அரசியல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான, செல்வாக்கு மிக்க, நீண்ட காலம் முதல்வராக பணியாற்றியவர் என்றும், இந்திய அரசியலில் துாண் போன்ற தலைவர் என்றும் மக்களால் எப்போதும் நினைவுகூரப்படும் நபராக இருப்பார்.
அவர் கொண்டு வந்த திட்டங்கள், மக்கள் மனதில் எப்போதும் நிலைத்து நிற்கும். பல துறைகளின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது. கடந்த 2022ல் நான் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஆனதில் இருந்து தற்போது வரை, என்னுடன் தோளோடு தோளாக நின்று, அனைத்து உதவிகளையும் செய்து உள்ளார்.
அவரது தலைமையின் கீழ் அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியது நான் செய்த பாக்கியம். அவரது வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து பயணம் செய்து, கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
