முதல்வர் மாற்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ராகுல் திட்டம்
முதல்வர் மாற்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ராகுல் திட்டம்
ADDED : மே 13, 2026 03:18 AM

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் விவாதத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமாரை நேருக்கு நேர் அமர்த்தி, ஆலோசனை நடத்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓராண்டாக, முதல்வர் மாற்றம் விவாதம், கர்நாடகாவை உலுக்கி எடுக்கிறது. அரசுக்கு இரண்டரை ஆண்டு நிறைவடைந்த போதே, முதல்வர் பதவிக்கு சிவகுமார் முயற்சித்து வருகிறார்.
ஆதரவும், எதிர்ப்பும் இதுவரை, இலை மறை காய் போல, 'கட்சிக்காக உழைத்த எனக்கு, அதற்கான கூலி கொடுக்க வேண்டும்' என, மேலிடத்தை வலியுறுத்தினார். ஆனால் இப்போது பகிரங்கமாகவே, முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதை உணர்த்துகிறார்.
முதல்வர் பதவியை விட்டுத்தருவதில், சித்தராமையாவுக்கு விருப்பம் இல்லை. முதல்வர் மாற்றம் விஷயத்தில், கர்நாடக காங்கிரசில் மாற்று கருத்து கொண்ட, இரண்டு கோஷ்டிகள் இருப்பதை போன்று, மேலிட அளவிலும் மாற்று கருத்து உள்ளது.
காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநிலத்தில் முதல்வரை மாற்றி, சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்கிறார். ஆனால் காங்., தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இதற்கிடையே காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரும், தலித் முதல்வர் என, காய் நகர்த்தி முதல்வர் பதவிக்கு துண்டு போடுகின்றனர். இதனால் முடிவு எடுக்க முடியாமல், மேலிடம் தவிக்கிறது.
முதல்வர் பதவியில் அமர்ந்தே தீருவேன் என, சிவகுமார் உறுதியாக இருக்கிறார். மே 16 இவரது பிறந்த நாளாகும். அன்றைய தினம் தனக்கு, மேலிடத்திடம் இருந்து இனிப்பான செய்தி வரும் என, கூறியுள்ளார்.
பாதிப்பு முதல்வர் பதவி விஷயத்தில், தங்களால் முடிவு செய்ய முடியாது. ராகுல் மட்டுமே முடிவு எடுக்க வேண்டும் என, கார்கே உட்பட, மற்ற தலைவர்கள் கூறியுள்ளனர். எனவே சிவகுமார், ராகுலை சந்திக்க காத்திருக்கிறார். பலமுறை டில்லிக்கு சென்றும் இவரை சந்திக்க முடியவில்லை.
ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. எனவே கர்நாடகாவில் நடக்கும், முதல்வர் மாற்றம் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, அமைச்சர்கள், தலைவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில், கர்நாடகாவுக்கு சட்டசபை தேர்தல் நடக்கும். குழப்பத்துக்கு முடிவு கட்டாவிட்டால், கட்சிக்கு தான் பாதிப்பு என, எச்சரித்துள்ளனர்.
இதை தீவிரமாக கருதிய ராகுல், முதல்வர் மாற்றம் தொடர்பாக, சித்தராமையா, சிவகுமாரை நேருக்கு நேர் அமர்த்தி, ஆலோசனை நடத்தி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தில் அரசு அமைந்த பின், சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் ராகுலிடம் இருந்து அழைப்பு வரும் என, கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
