ADDED : ஏப் 24, 2026 04:17 AM
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரு தாலுகாவின் உடுதொரே கிராமத்தின் ஏரி பகுதிக்கு, சில நாட்களுக்கு முன் மூன்று காட்டு யானைகள் வந்தன.
வெப்பத்தை தணித்து கொள்ளவும், தண்ணீர் குடிக்கவும் நீரில் இறங்கின. அப்போது, சேற்றில் சிக்கிக்கொண்டன. வெளியே வர முடியாமல் பரிதவித்தன.
அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், யானைகள் சேற்றில் சிக்கியிருப்பதை கண்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் யானைகளை மீட்பதில் ஈடுபட்டனர். 17 மணி நேரம் போராடி, யானைகளை நீரில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
சிகிச்சைக்கு பின் இரண்டு யானைகள் காட்டுக்குள் சென்றன. ஒரு பெண் யானை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை யானை உயிரிழந்தது.
