ADDED : மே 09, 2026 11:51 PM

சிறையில் பெண் கைதிகள் தங்களின், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் தங்கியிருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன் படி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள பெண் கைதிகள் சிலர் தங்கள் குழந்தைகளுடன் தங்கியிருக்கின்றனர்.
இந்த குழந்தைகளின் பராமரிப்புக்காகவும், அவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுப்பதற்காகவும் பரப்பன அக்ரஹாரா சிறையில் குழந்தைகள் காப்பகம் சமீபத்தில் திறக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலே முதல் முறையாக சிறையில் குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட்டு உள்ளது.
இதில் கர்நாடக குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகத்தின் பங்கு முக்கியமானது.
சிறையில் இருக்கும் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருப்பதை தடுக்கும் நோக்கில் காப்பம் திறக்கப்பட்டு உள்ளது.
காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதற்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அடிப்படை விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கின்றனர். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், தனிநபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
இங்கு கல்வி மட்டுமின்றி, சமூக மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உணவு உண்ணும் முறை, ஒழுக்கம், பெரியவர்களை மதிப்பது போன்றவை கற்பிக்கப்படுகின்றன.
இவை குழந்தைகளின் வருங்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, இந்த காப்பகத்தில் ஒன்பது குழந்தைகள் உள்ளனர்.
காப்பகத்தில் கழிப்பறை, கை கழுவும் இடம், விளையாட்டு பகுதிகள் உள்ளன.
சிறையில் நிலவும் இந்த சூழல் கைதிகளின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த காப்பகத்தில் பயில்வதற்கு பெண் கைதிகளின் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி.
- நமது நிருபர் -
