கார்கேவுக்கு எதிராக பெங்களூரில் பா.ஜ., போராட்டம்
கார்கேவுக்கு எதிராக பெங்களூரில் பா.ஜ., போராட்டம்
ADDED : ஏப் 24, 2026 04:17 AM

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியை, சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் விமர்சித்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி, பெங்களூரின் விதான்சவுதா - விகாஸ்சவுதா இடையே உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே, பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், மத்திய அமைச்சர் ஷோபா, எம்.பி., கோவிந்த் கார்ஜோள், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி மற்றும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், தலைவர்கள், தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியை விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக கோஷமிட்டனர். காங்கிரஸ் தேசிய தலைவராக இருக்கவே, கார்கேக்கு தகுதியில்லை. நாட்டின் பிரதமரையே, கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். கார்கே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
மத்திய அமைச்சர் ஷோபா: மல்லிகார்ஜுன கார்கே, நாட்டுக்கு எதிரான மனநிலையை காட்டியுள்ளார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை தேசிய தலைவர் பதவியில் இருந்து சோனியா நீக்க வேண்டும்.
கார்கே உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளார். அவருக்கு தானும், தன் மகனும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற, ஒரே குறிக்கோள் தான் உள்ளது. எனவே, ராகுலை புகழ்கிறார்.
கார்கே வெளிநாட்டு ஏஜென்ட் போன்று செயல்படுகிறார். நம் நாட்டை விட, பாகிஸ்தான் மீது அதிக பாசம் காட்டுகிறார். தொழுகை நடத்தும் போது, விஷப்பாம்பு தென்பட்டால், அதை கொல்லுங்கள் என்கிறார். அதேபோன்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரை கொல்லும்படி துாண்டுகிறார்.
நாட்டுக்கு நடந்த அவமானம், அனைவருக்கும் நடந்த அவமானம். இதுபற்றி காங்கிரஸ் யோசிப்பது இல்லை. மல்லிகார்ஜுன கார்கே அவ்வப்போது நாட்டை அவமதிக்கும் வகையில் பேசுகிறார். நாட்டின் பிரதமரை பயங்கரவாதி என்பது, நாட்டுக்கே நடந்த அவமதிப்பாகும். கார்கேயை உடனடியாக தேசிய தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
எம்.பி., கோவிந்த் கார்ஜோள்: பிரதமர் நரேந்திர மோடி, உலகமே மதிக்கக்கூடிய நபர். அவரை பயங்கரவாதி என, மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
அனுபவமிக்க மூத்த தலைவர் என்பதை மறந்து தவறு செய்கிறார். தொழுகையை நிறுத்தி, பாம்பை கொல்லுங்கள் என்கிறார். மத ஒற்றுமையை குலைக்கும் வேலையை செய்தால், நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
கார்கே மகன் பிரியங்க் கார்கே, அனுபவம் இல்லாதவர். அவர் பிரதமரை பற்றி விமர்சிக்கிறார். இப்போது மல்லிகார்ஜுன கார்கேவும், அப்படியே பேசுகிறார். இவரது செயலால் காங்கிரஸ் அழியும்.
