எரிபொருள் சிக்கன நடவடிக்கை பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம்
எரிபொருள் சிக்கன நடவடிக்கை பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம்
ADDED : மே 16, 2026 11:26 PM

பெங்களூரு: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு, கர்நாடகாவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்தும், ஆதரவு கிடைத்துள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் நடந்த போரின் விளைவாக, இந்தியாவில் வாகன எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் மட்டுமே, நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க முடியும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
பெங்களூரில் பலரும், தங்களின் சொந்த வாகனங்களை விட்டு விட்டு, மெட்ரோ ரயில், பி.எம்.டி.சி., பஸ்களில் பயணிக்கின்றனர். தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ், நேற்று முன்தினம் எலக்ட்ரிக் காரில் தொகுதிக்கு வந்து, பல்வேறு இடங்களுக்கு சென்றார்.
ஷிவமொக்கா, ஹொஸ்பேட் மாநில நெடுஞ்சாலையின், ஹரப்பனஹள்ளி சதுக்கம் அருகில் நடக்கும் பணிகளை பார்வையிட்டார். வாகன பயணியரின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
மைசூரின், கிருஷ்ணராஜ தொகுதி பா.ஜ., - எம்.எல்,ஏ., ஸ்ரீவத்சாவும், தொகுதியில் நடமாட இதுவரை கார் பயன்படுத்தினார்.
இப்போது காரை தவிர்த்துவிட்டு, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்துகிறார். பிரதமர் கூறும்வரை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
மேல்சபை துணைத் தலைவர் பிராணேஷ், தன் மெய்க்காவல் படை வாகனத்தை திரும்ப பெறும்படி, மாவட்ட எஸ்.பி.,யிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கைக்கு, பா.ஜ.,வினர் மட்டுமின்றி, காங்கிரசாரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வரின் சட்ட ஆலோசகரும், விராஜ்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான பொன்னண்ணாவும், தனக்கு அளிக்கப்பட்ட மெய்க்காவல் வாகனங்கள் எண்ணிக்கையை குறைக்கும்படி எஸ்.பி.,யிடம் கூறியுள்ளார்.
