ADDED : மே 03, 2026 02:34 AM
பெங்களூரு: மறைந்த நடிகர் ராஜ்குமார் சமாதிக்கு மாநில அரசு இடம் கொடுத்தது தொடர்பாக, நடிகர் சேத்தன் அஹிம்சா விமர்சித்திருந்தார். இதற்கு ராஜ்குமார் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், பசவேஸ்வர நகர் போலீசில் புகாரும் அளித்தனர்.
அத்துடன், சேத்தன் வீட்டு முன் கன்னட அமைப்பினர், சாரா கோவிந்த் ஆகியோர் போராட்டமும் நடத்தினர். போராட்டத்தின் போது, சேத்தனை விமர்சித்து சாரா கோவிந்த் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்திற்கு, பல்வேறு தலித் அமைப்புகளின் பிரமுகர்கள் மற்றும் மக்கள் நல சங்கத்திருனருடன் நேற்று சேத்தன் சென்றார்.
அங்கு அளித்த புகார் மனுவில், 'சாரா கோவிந்த் என் வீட்டின் முன் போராட்டம் நடத்தியதுடன், ஆபாசமாக திட்டி, என் உயிருக்கு அச்சுறுத்தலும் விடுத்தார். ராஜ்குமாரின் ரசிகர் என்று கூறிக்கொள்வதில் கோவிந்துக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
