PUBLISHED ON : ஏப் 08, 2026

சத்தான தானியங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சிறுதானிய பயிர் காடைக்கண்ணி. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் காடைக்கண்ணி பயிரில் அதிக மகசூல் பெறலாம்.
'பிரவுன் டாப் மில்லட்' எனப்படும் இத்தானியம் தமிழில் கடை கம்பு, குலசாமை என்றும் அழைக்கப்படுகிறது. எச்.பி.ஆர். 2 ரகமானது குறைந்த செலவில் வறட்சியை தாங்கி அதிக வருமானம் தரும். 12.5 சதவீத நார்ச்சத்து உட்பட அதிக சத்துகளுடன் 'குளூட்டான்' இல்லாத சிறுதானியமாகும். செரிமானத்திற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவுகிறது. காடைக்கண்ணி விரைவாக முதிர்ச்சியடையும் குறுகிய காலப் பயிர். விதைத்த 70 முதல் 80 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகும்.
காடைக்கண்ணி சாகுபடிக்கு வெப்ப, உலர் கால நிலை ஏற்றது. சிவப்பு, மணற்பாங்கான கரிசல் மண்ணில் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 4 முதல் 5 கிலோ அளவு சான்றளிக்கப்பட்ட விதைகள் தேவை. விதைப்பதற்கு முன்பாக, ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஆடி, ஆவணி அல்லது மாசி, பங்குனி பட்டங்கள் சாகுபடி செய்ய ஏற்றது.
விதைப்பு இடைவெளி
விதைகளை 45க்கு 10 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த 20 முதல் 25 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். 40 நாட்களில் இரண்டாவது களை எடுக்க வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடவேண்டும்அல்லது தழைச்சத்து 20 கிலோ, மணிச்சத்து 10 கிலோ, சாம்பல் சத்து 10 கிலோ அளவு அடியுரமாக இட வேண்டும். 70 முதல் 80 நாட்களில் தானியம் பழுப்பு நிறமாகும் போது அறுவடை செய்யலாம். முறையான சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடித்தால் ஏக்கருக்கு 8 முதல் 10 குவிண்டால் அளவு மகசூல் கிடைக்கும்.
மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விதை அறிவியல் துறையில், காடைக்கண்ணி விதை முளைப்பு திறனை அதிகரித்தல், கூடுதல் மகசூல், சேமிப்புத்திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி நடக்கிறது.
-சுஜாதா, தலைவர் வேணுதேவன், உதவிப்பேராசிரியர்விதை அறிவியல் துறை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்மதுரை
