தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/வழிகாட்டி!

வழிகாட்டி!

வழிகாட்டி!

2


PUBLISHED ON : மே 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 10, 2026

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணி, பனிரெண்டை நெருங்க, ஐந்து நிமிடங்களே இருந்தன. கணவன், சேகர் வர தாமதமாகும் போதே தெரிந்தது, அவன் வரும் நிலை?

''அப்பா இன்னும் வரலியா?'' என்று, துாக்கத்தில் கண்கள் சொருக வந்து, நின்றான் மூத்தவன், மாது.

''வேலை இன்னும் முடிஞ்சிருக்காது கண்ணா? இல்லேன்னா வீட்டுக்கு வராம எங்க போகப் போறாரு, உங்க அப்பா. நாளைக்கு ஸ்கூல் போகணும்... நேரத்துல போய் துாங்கு,'' என்றாள், அம்மா மீனா.

''தினமும் அப்பாவுக்கு, 'குட் நைட்' சொல்லாமத் தான் துாங்க போறன்,'' என்றாள், சின்னவள், மாலி சோகத்தோடு.

''அப்பாவுக்கு சொல்லலன்னா என்ன? அம்மாவுக்கு, 'குட்நைட்' சொல்லிட்டு துாங்கப் போங்க. அவர் வந்த உடனே உங்க சார்பா நான் சொல்லிடறேன்,'' என்றாள், மீனா.

பிள்ளைகள் இருவரும் அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டனர். தன் கணவனுக்காக காத்திருந்தாள், மீனா.

மீனா - சேகர் தம்பதியரின் வாரிசுகள் தான், மாது, மாலி. இருவருக்கும் அப்பா என்றால், கொள்ளைப் பிரியம். சேகருக்கு சொந்தமாக பேக்கரி உண்டு. மனைவி இருக்கும் போதே வேறு பெண்ணோடு தொடர்பும் உண்டு. பேக்கரியில் நல்ல வருமானமும் கூட.

கெட்ட சகவாசங்களும் நிறைய உண்டு. இருந்தாலும், தன் குடும்பத்தை எந்தக் குறையும் இல்லாமல் நடத்திச் செல்பவன். எல்லாம் இருந்தும் கொஞ்சம் முன்கோபியும் கூட. அதுவும் குற்றம், குறை சொல்வதில் கை தேர்ந்தவன். கோபத்தில் வார்த்தைகள் வரைமுறை இல்லாமல் வரும். அதுவே கோபம் குறைந்தாலோ அவனைப் போல் நல்லவன் யாருமில்லை என்று தான் மற்றவர்களுக்கு தோன்றும்.

மீனா கூட, கல்யாணம் ஆன புதிதில் கணவனின் ஏச்சுக்களை தாங்க முடியாமல், ஏட்டிக்குப் போட்டி போட்டு, எதிர்த்து நின்றவள் தான். நாட்கள் செல்லச் செல்ல, சேகரின் குணம் அறிந்து, சண்டை போடுவதில் பலன் இல்லை என்று புரிந்து, விட்டுக் கொடுத்து போக காரணம், அவளுக்கு ஆதரவாய் பேச அவள் பக்கம் யாருமில்லை என்பது தான்.

குழந்தைகள் பிறந்த பின் அமைதி காக்கத் துவங்கினாள். குட்ட, குட்டக் குனிந்தால் வாழ்நாள் முழுவதும் குட்டுகள் நிச்சயம் என்று அப்போது, மீனாவிற்கு புரியாமல் போனது. சேகரின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தில் கொஞ்சம் உயர்ந்த குடும்பம் தான். காசு பணத்திற்கு குறைவில்லை. சேகருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அதேப்போல் தன் உயிரின் மீதும், வாழ்வின் மீதும் அதீத அக்கறையும் உண்டு. குடித்து விட்டால் கால் டாக்ஸியில் பத்திரமாக வீடு வந்து சேர்வான்.

'என்னப்பா தினமும் கால் டாக்ஸில வீட்டுக்குப் போற, உன்கிட்ட வண்டி இல்லையா?'

'வண்டி வீட்ல இருக்கு. இந்த, 'டிராபிக்'ல நிதானத்துல இருக்கறவனாலயே பத்திரமா வண்டி ஓட்ட முடியாது. சரக்கடிச்சுட்டு ஓட்டுனா பாதுகாப்பா வீடு போய் சேர முடியுமா? அதனால தான், கால் டாக்ஸில போறேன். என் உயிர் எனக்கு முக்கியம். என்ன பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு!'

இதையெல்லாம் நன்றாக பேசுபவன் தான். ஆனால், மனைவியை கண்டால் மட்டும் வார்த்தைக்குப் பதிலாக, தீ தான் வந்து விழும்.

'இங்கப் பாரு வாழ்க்கை துணைய அன்பா பார்த்துக்க தெரிஞ்சவன் தான், பெரிய மனுஷன். சும்மா ஊரெல்லாம் நல்லப் பேரை வாங்கிட்டு, வீட்ல நல்லப் பேர் வாங்க முடியிலன்னா நீ, வாழ்க்கையில தோத்துப் போய்ட்டன்னு அர்த்தம்?' என்னும் தாயின் அறிவுரை வீணாகிப் போனது. தன் குணத்தை அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

மீனா, இன்னும் காத்திருந்தாள் கணவனுக்காக. இரவு வர தாமதமானால் குடித்து விட்டு வரும் பழக்கம் எப்போதும், சேகருக்கு உண்டு என்பது தெரிந்தே காத்திருந்தாள். 12:00 மணிவாக்கில் கால் டாக்ஸியில் இருந்து தள்ளாடிய படி இறங்கியவனை தாங்கிப் பிடித்து, படுக்கையில் கிடத்தினாள்.

''நீ சாப்டியாடி தங்கம். எங்கடி என் புள்ளைங்க?'' என்றான், போதையில்.

''மணி, 12:00 ஆச்சு, துாங்கிட்டாங்க?'' என்றாள்.

''புள்ளைங்கள பார்த்துட்டுத் தான் துாங்குவேன்,'' என்று எழ முயன்றவனை தடுத்தாள்?

''சத்தம் போடாம படுங்க. அவங்க துாங்கிட்டாங்க.''

ஏதேதோ உளறியபடி துாங்கிப்போனான், சேகர்.

தினசரி நடக்கும் வழக்கம் தான். பழகி விட்டது என்றாலும், கல்யாணம் ஆன நாள் தொட்டே, கணவனிடம் இருந்து ஆறுதலான வார்த்தைகளோ, அன்பான அரவணைப்போ அவளுக்கு கிடைத்ததில்லை.

மீனாவின் அப்பா, அவளின் குழந்தை பருவத்திலேயே நோய் கண்டு இறந்து விட, கணவனை இழந்த இளவயது தாய், ஊராரின் ஏச்சையும், பேச்சையும் தாங்கிக் கொண்டு, மீனாவை வளர்த்தாள்.

வரதட்சணை கேட்காத வரனுக்கு சொந்தத்திலேயே, மீனாவை மணம் முடித்து வைத்தாள். அப்பாவின் அன்பை அறியாதவள், மீனா. கணவனின் நிழல் தேடி நின்றவளுக்கு அன்பு கொஞ்சமும், ஏச்சுக்கள் மிஞ்சியும் கிடைத்த போது, உடைந்து தான் போனாள்.

குழந்தைகள் பிறந்த பின், அவர்கள் நலனுக்காக கணவனை சகித்துக் கொண்டு வாழத் துவங்கியவளை யாரும் புரிந்துக் கொள்ளவில்லை. எப்படி புரியவைப்பது என்றும் தெரியாமல் அமைதி காத்தாள்.

சேகருக்கு அன்பான மனைவி, அழகான குடும்பம், அமைதியான வாழ்வை கடவுள் கொடுத்தும், புரிந்து கொள்ளும் நிதானத்தில் அவன் இல்லை என்பதே பிரச்னையாக இருந்தது. எப்போதும் அவன் மனதில் ஒரு வெறுமை. அவன் தலைக்குள் 'கூட்ஸ்' வண்டி ஓடிக்கொண்டிருக்கும்.

வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த உடன், மனைவியைக் கண்டாலே கோபம் தலைக்கேறி மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்த, 'கூட்ஸ்' வண்டி வாய்க்குள் வந்து 'தடதட'வென்று தகாத வார்த்தைகளை கொட்டி விட்டு, 'பிரேக்' அடித்து நிற்கும். கோபத்தில் தன்னை மறந்து கத்துவான். உறவினர்கள், பொது இடம், பக்கத்து வீடு, எதிர் வீடு என, யார் முன்பும் தன் கோபத்தை காட்ட மறந்ததில்லை, சேகர்.

கழுத்து நரம்புகள் புடைக்க, சிவப்பேறிப்போன முகத்தோடு கடினமான வார்த்தைகளை கொட்ட, சேகரால் மட்டுமே முடிந்தது. அவமானத்தில் தலைகுனிந்து கண்ணீர் விடுவாள், மீனா. எதிர்க்க முடியாத தன் பலவீனத்தை, யாரிடம் சொல்லி முறையிடுவது? நாளை எல்லாம் மாறிவிடும் என்பது மனித குணத்திற்கு மட்டும் பொருந்தாது என்பது தான் உண்மை!

இப்படியே காலம் கடந்து குழந்தைகள் இருவரும் பெரியவர்கள் ஆனார்கள்.

''எதுக்கு அப்பா கோபப்படற மாதிரி நடந்துக்கறீங்க?'' என்று கேட்டாள், மகள் மாலி.

''யார் நானா?'' என்றாள், மீனா.

''ஆமா, அவருக்கு எது புடிக்கலையோ அதை செய்யாதீங்க. அப்பாவுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கோங்க. இப்படி அவர ஓவரா, 'டென்ஷன்' பண்ணப் போய், அவருக்கு ஏதாவது ஆகிடப்போகுது. வேலையில இருந்து வர்றவர்கிட்ட நீங்க கொஞ்சம், 'அட்ஜஸ்' பண்ணிப் போறது நல்லது,'' என்றாள், மாலி.

''உங்க அப்பாவ நான், 'டென்ஷன்' பண்றன்னு சொல்ல வர்றியா?'' என்றாள், மீனா.

''ஆமா, உங்களை பார்த்து தானே கத்தறாரு... வீட்ல வேற யார் கிட்டயும் அவர் இந்தக் கோபத்தை காட்டலியே.''

''ஓஹோ அவருக்கு புடிச்ச மாதிரி நான் நடந்துக்கணும்ன்னா. நான் இங்க இருந்து போகணும்.''

''இப்படி ஏதாவது அநாவசியமா பேசப் போய் தான் அப்பாவ கோபப்படுத்தறீங்கன்னு நினைக்கிறேன்,'' என்ற மகள், மாலியிடம், பதில் சொல்ல முடியாமல் நின்றாள், மீனா.

தன் பிரச்னையை, அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது? திகைப்பாய் இருந்தது வாழ்க்கை.

காலம் வேகமாய் ஓடியது. தன் தேவைக்காக சிரித்துப் பேசினாலும், மாலியும், மாதுவும் அம்மா அருகில் உட்காருவதை கூட விரும்புவதில்லை. அம்மாவின் முகம் பார்த்து சிரித்துப் பேச ஆசைப்படவில்லை. இப்போதெல்லாம் அப்பாவின் கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது. அப்பா ஏதோ ஒரு விதத்தில் அம்மாவை குற்றம் சொல்வதை மனதுக்குள் ரசித்தனர். அப்பா திட்டும் போதும், அம்மாவின் முகம் வாடும் போதும், இவர்கள் மனம் மெல்ல சிரிக்கும். சின்னதாய் முள் குத்தினாலும் புலம்பி தீர்க்கும் அப்பா பாவமாகிப் போனார்.

'எப்படியோ ஒண்ணுமில்லாம வந்தாலும், என் தயவால சொந்த வீடு, வாசல்ன்னு நிம்மதியா இருக்கே...' என்று கூறி, சிரிப்பவனுக்கு பதில் சொல்ல மாட்டாள், மீனா.

'உங்க அம்மா வாழ்க்கையில அரிசி சோறுன்னு ஒன்னு சாப்பிட்டு இருக்கான்னா, அது என்னை கட்டின பின்னாடி தான். ஒத்த ரூம்ல அவங்க ஆத்தா வீடு. பாத்ரூம் கூட இல்ல. உங்க அம்மாவ கட்டின பாவத்துக்கு, ரெண்டு நாள் அங்கப் போய் இருந்தேன்.

'டீன்னு ஒண்ணு போட்டுத் தந்தாங்க. டீ நல்லாருக்குன்னு சொன்னேன். அப்புறம் தான் சொன்னாங்க அது காபியாமா? அவங்க வீட்ல கழனித் தண்ணிக்கு டீன்னுப் பேரு. ஏதோ ஆள் பார்க்க நல்லாருக்கான்னு கட்டிக்க சம்மதிச்சேன், அவ்வளவு தான்...' என சொல்லி, குரூரமாய் சிரிக்கும், கணவனை ஒன்றும் சொல்லத் தோன்றாமல் பார்ப்பாள், மீனா.

பிள்ளைகள் மனதில், அம்மா என்னும் பிம்பம் அரத பழசாய், கிழிந்து தொங்கியது. அப்பா மட்டும் உயர்ந்த இடத்தில்.

மதுவும், மாலியும் கல்லுாரிக்கு அவசரமாய் கிளம்பி கொண்டிருந்தனர். தலையில் ஒட்டடை இருக்கு என்றபடி நெருங்கிய அம்மாவின் கையை தட்டி விட்டாள், மாலி. அம்மாவின் தொடுதல் அவளுக்கு அருவருப்பாய் இருந்தது.

''நீ இரு. நானே தட்டி விடுறேன். நீ கைய எடு,'' என்ற சேகரின் கைகள், மகளின் தலையில் ஒட்டிய துாசியை தட்டி விட்டன.

''என்னடி, உன்னக் கண்டா புள்ளைங்களுக்கு கூட புடிக்க மாட்டேங்குது. மாலி தட்டி விடறா. மாது வெறுப்பைக் காட்டறான். நீ எவ்வளவு தாங்கினாலும், அவங்க அப்பா புள்ளைங்க தான்,'' என்று கேலியாக சிரித்தான், சேகர்.

''அது ஒண்ணுமில்ல புள்ளைங்க முன்னாடி நீங்க குடிச்சிட்டு வர்றதையோ, நீங்க ஒரு பொண்ணோட தொடர்புல இருக்கறதையோ, உங்க கெட்ட சகவாசத்தால, நீங்க ஜெயிலுக்குப் போனதையோ, நான் அவங்களுக்கு சொன்னதே இல்ல. எப்பவும், அவங்க மனசுல நீங்க உயர்ந்த இடத்துல இருக்கணும்ன்னு தான் எல்லாத்தையும் மறைச்சு, உங்களைப் பத்தின நல்லதை மட்டும் தான் அவங்களுக்கு சொல்லிக் குடுத்திருக்கேன்.

''யார் மனசுல எதை விதைக்கிறமோ அது தான் மரமா வளரும். அதனால தான், உங்கள கொண்டாடுறாங்க. நல்லதை அவங்க மனசுல விதைச்சது தான் என்னோட குணம். இந்த இயல்பை உங்ககிட்ட நான் எதிர்பார்க்க முடியாததால தான், நான் அவங்களுக்கு வேண்டாதவளா இருக்கேன்,'' என்றாள் அமைதியோடு.

மாதுவும், மாலியும் அம்மா சொல்வதை கண்ணீரோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.

சுதாராணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us