
காலை நேர பரபரப்பு. சமையல் வேலையில், 'பிஸி'யாக இருந்தாள், மாலதி.
அலுவலகம் போகும் கணவன் பரமுவுக்கு தேவையானதை எடுத்து வைக்கும் அவசரம்; லேசான ஒப்பனையோடு கல்லுாரிக்கு போக தயாராக நின்ற மகள் கவிதாவிடம், டிபன் தட்டை தந்து விட்டுச் சென்றாள்.
''தினமும் இட்லியா... ஒரு நாளைக்காவது தோசை தரலாமில்ல,'' என, செல்லமாய் சிணுங்கினாள், கவிதா.
''தோசை குடுத்தா ஒண்ணு தான் சாப்பிடுவ. இட்லின்னா, மூணு வயித்துக்குள்ளப் போகும். மூணு தோசை சாப்டறதா இருந்தா சொல்லு செஞ்சுத் தரேன்?''
''அய்யய்யோ என்னால முடியாதுப்பா?'' அவசரமாய் இட்லியை முழுங்கி விட்டு, அம்மா கொடுத்த காபியை ருசித்தப்படி ஹாலுக்கு வந்தாள், கவிதா.
பரமசிவம் போனில் பேசுவது காதில் விழுந்தது...
''மாப்பிள்ளை போட்டோவ அனுப்பி இருந்தனே பாத்தியாக்கா. ஆமா, நம்ம துாரத்து சொந்தம் தான். பையன் பேரு, நவீன். சொந்த வீடு. அதோட, நல்ல வேலை. நம்ம பொண்ணக் குடுத்தா நல்லா பாத்துப்பாங்க.
''நம்ம, கவிதாவோட ஜாதகம், உன் கையில தானே இருக்கு. சரி, இப்போதைக்கு பேர் பொருத்தம் மட்டும் பாத்துட்டு சொன்னா, மாப்பிள்ளை வீட்டார வரச் சொல்லிடலாம். தங்கச்சிகிட்டயும் விஷயத்தை சொல்லிட்டேன்.
''அம்மாக்கிட்ட காலைலயே பேசிட்டேன். அவங்க வந்த பிறகு தான் மத்ததை பேசணும்...'' எனச் சொல்லி, மொபைலை வைத்தார், பரமு; தன் எதிரே நின்ற கவிதாவை பார்த்து சிரித்தார்.
''காலேஜ்க்கு கிளம்பிட்டியா, கவிதா? உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.''
''எந்த விஷயமா இருந்தாலும், அம்மாகிட்டேப் பேசுங்க. எனக்கு நேரமாச்சு.''
''உங்க அம்மாகிட்டேயா? அவக்கிட்ட விஷயத்தை சொல்லி புரிய வெக்கறதுக்குள்ள விடிஞ்சிடும். சாயந்திரம் சீக்கிரம் வந்துடு. உங்க அத்தை வந்து விஷயத்தை சொல்வாங்க.''
''அத்தையிடம் சொல்றதை, அம்மாவிடம் சொல்ல முடியாதா. அத்தை யோசிச்சு சொல்லி முடிக்கிறதுக்குள்ள எனக்கு விடிஞ்சிடும்,'' என்றாள், அலட்சியத்தோடு.
''கவிதா, வர வர பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கறதயே மறந்து போயிட்டே. உனக்கு தலைல கனம் ஏறிப் போச்சு, உங்க அம்மா மாதிரி.''
''சாரிப்பா. உங்களுக்கு உங்க பக்க ஆளுங்க எவ்வளவு முக்கியமோ, எனக்கும் அதே மாதிரி அம்மா முக்கியம். எதுவா இருந்தாலும் அம்மாவிடம் சொல்லுங்க. நான் அவங்ககிட்டேயே கேட்டு தெரிஞ்சிக்கிறேன். காலேஜ்க்கு நேரமாச்சு.''
சொல்லி விட்டு சென்ற கவிதாவை புரியாமல் பார்த்தார், பரமசிவம்.
'வர வர இவ பேச்சு சரியில்ல...' என, மெல்ல முணுமுணுத்தார், பரமு.
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த, மாலதியின் கண்கள் நிறைந்தன, அன்பான மகளை நினைத்து.
கல்யாணம் ஆன புதிதில், பரமு இப்படியில்லை. தன் மனைவியை, பரமு கொண்டாடியது, பார்ப்பவர்கள் கண்களுக்கு பிடிக்காமல் போனது. முக்கியமாய் அவரோடு பிறந்தவர்களுக்கு.
'புருஷன் முகத்த முழுசா பாக்கறதுக்கே வருஷம் ஓடிடும்...' எனும் அக்கம் பக்கத்தினரும்...
'என்னம்மா இது விளக்கு வெக்கிற நேரத்துல, ரெண்டுப் பேரும் கையப் பிடிச்சி விளையாடிட்டு இருக்காங்க. இதையெல்லாம் என்னான்னு கேட்க மாட்டீங்களா? கல்யாணம் ஆகாத பொம்பளப் புள்ளைங்க இருக்கற வீட்ல. இதெல்லாம் நல்லாவா இருக்கு...' என்றாள், நாத்தனார் கிரிஜா.
'நான் ஏதாவது கேட்கப் போய் சண்டை வர்றதுக்கா?' என்றார், மாமியார்.
'கேட்காமலே இருந்தா, பேசி மயக்கி தனியா கூட்டிட்டுப் போயிடுவா. 10 பவுன் போடறன்னு சொல்லி, ஏழுப் பவுன் போட்டவங்க தானே. வீட்ல அதிகாரத்தை காட்டத்தான் செய்வாங்க. மூணு பவுன மறு வீட்டுக்கு வர்றப்ப தர்றதா சொன்னாங்க.
'இவங்க பேச்செல்லாம் தண்ணியில போட்ட கோலம் தான். ராஜாவாட்டம் இருக்கற நம்ப தம்பிக்கு இப்படி தான் கிடைக்கணும்ன்னு தலையெழுத்து...' என, மாலதியின் காதில் படும்படி உரக்க கத்தினாள், நாத்தனார் கிரிஜா.
அடிக்க, அடிக்க அம்மியும் நகர்ந்தது. பரமு அவளை விட்டு விலகத் துவங்கினான்.
'சாப்பிட வாங்க. தோசை ஊத்தி தர்றேன்...'
'தோசை ஊத்தி வெச்சா வந்து சாப்டுக்க போறான். அவனை உரசிக்கிட்டே நின்னு ஊத்துனா தான் ஆச்சி இவளுக்கு. வெந்நீரை பக்கெட்ல ஊத்திட்டு வந்து, அடுப்படியை கவனி. இருக்கற வேலைய விட்டுட்டு அவன் பின்னாடி நடந்தா எல்லாம் சரியாயிடுமா?' என, மாமியாரின் பேச்சுக்களும், அதை குத்தி விடும் நாத்தனாரின் பேச்சும் வெறுப்பை தான் தந்தன. அவர்களின் பேச்சைக் கேட்டு ஆடத் துவங்கினான், பரமு.
கவிதா பிறந்த பிறகும் இதே நிலை தான் நீடித்தது. அந்த பெரிய குடும்பத்தில் தனியாகி போனாள், மாலதி. தாய், நான்கு சகோதரிகள் என, ஐந்து பெண்கள் கொண்ட குடும்பத்தில், ஆண் பிள்ளையின் பேச்சு, அவர்களுக்கு, 'ஆமாம்...' போட்டே போனது.
மூணு பவுன் போடாத, மாலதி குடும்பத்தோடு பேச்சை நிறுத்தியிருந்தனர், சம்பந்தி வீட்டார். மாலதி, தன் பெற்றோர் வீட்டுக்குப் போவதையும் அவர்கள் விரும்பவில்லை.
கோவிலுக்கு போகும் போது, புகுந்த வீட்டுக்குத் தெரியாமல் அம்மா மற்றும் அண்ணனை பார்த்து பேசுவதை வழக்கமாக்கி கொண்டிருந்தாள், மாலதி. 20 ஆண்டுகளாக இது தான் அவள் நிலை. ஒரு குழந்தையை பெற்ற பின், கணவனை பிரியாமல் வாழ்வதே சரி என, அப்பாவை பிரிந்த அம்மாவின் வாழ்க்கை மாலதிக்கு கற்றுத் தந்தது.
பரமு கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நின்றாள், மாலதி.
''இந்தா நம்ம, கவிதாவுக்கு பாத்திருக்கற மாப்பிள்ளையோட போட்டோ. அடுத்த வாரம் மாப்பிள்ளை வீட்டார பொண்ணு பார்க்க வரச் சொல்லி இருக்கேன். போட்டோவ கவிதாக்கிட்ட காமிச்சிடு.''
''கல்யாணத்துக்கு இப்ப என்னங்க அவசரம். படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கே. டிகிரி வாங்கின பின்னாடி கல்யாணத்த வெச்சுக்கலாங்க.''
''சரி தான். அதுக்கு முன், உன் பொண்ணு காதலிக்கிறேன், கத்திரிக்காய் விக்கிறேன்னு, ஊர் பேர் தெரியாத எவனையாவது கூட்டிட்டு வந்து நின்னான்னு வையி, கண்டிப்பா நான் சம்மதிக்க மாட்டேன்.
''என் பேச்சை கேட்காம, அவளா ஒரு முடிவெடுத்து ஓடிப் போறதுக்கு பதில், கல்யாணம் செஞ்சு வெக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன். அக்காகிட்ட பேர் பொருத்தம் பாத்துட்டு வர சொல்லியிருக்கேன். கவிதா வந்தா சொல்லிடு,'' என்றார், பரமு.
கவிதா இன்னும் வரவில்லை. மொபைல்போனில், அவளின் நம்பரைத் தட்டினாள், மாலதி.
''கவிதா எங்கேடா இருக்க?''
''லைப்ரரில இருக்கேன். என்னம்மா விஷயம்?''
''வீட்டுக்கு வாடா. அப்பா உன்கிட்ட ஒரு விஷயத்தை கேட்க சொன்னாரு?''
''சரிம்மா வர்றேன். 'வெயிட்' பண்ணுங்க?''
மாலதிக்கு மகள் என்ன சொல்வாளோ என, கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. நல்லதாக இருந்தால், 'என் மகளாச்சே...' என்று பெருமை கொண்டாடும் அப்பா, தவறாக இருந்தாலோ, 'என்னப் பண்றது உன் வளர்ப்பு அப்படி. உன் மக, உன்னை மாதிரி தானே இருப்பா...' என, சொல்வார் என்பது, அவள் அறிந்தது தான்.
பரமுவின் அக்கா, தங்கைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். ஊருக்குப் போன, பரமுவின் தாயும் வீடு திரும்பியிருந்தார். அவர்களுக்கு காபி தந்து விட்டு, மகளுக்காக காத்திருந்தாள், மாலதி.
கவிதா வீட்டுக்குள் வந்த உடன், போட்டோவை எடுத்து நீட்டினாள், மாலதி.
''யாரும்மா இது?''
''உனக்காக அப்பா பாத்திருக்கற மாப்பிள்ளை.''
எதுவும் சொல்லாமல் போட்டோவை பார்த்தாள், கவிதா. அவள் முகத்தில் பதிலைத் தேடினாள், மாலதி.
''பிடிச்சிருக்கு. சரி இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்?''
''பிடிச்சிருக்கா. என்ன கவிதா சொல்ற. அன்னைக்கு ஒரு பையனை எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சப்ப, அவனை விரும்பறதா நீ என்கிட்ட சொன்னது என்னாச்சு, கவிதா?''
''அம்மா எந்த காலத்துல இருக்கீங்க. அவனை நான் அப்ப காதலிச்சேன். இப்ப இல்ல. 'ப்ரேக்-அப்' ஆகிடுச்சு.''
இவர்கள் பேசுவதை, அறைக்கு வெளியே இருந்து ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த பரமு, அத்தைகள் மற்றும் பாட்டி ஆகியோர் முகத்தை சுளித்தனர்.
''என்ன கவிதா சொல்ற. அந்த பையன் நல்லா தானே இருக்கான். நல்ல குடும்பம், நல்ல வேலைன்னு நீ தானே சொன்னே...''
''சொன்னேன் தான். ஆனா, நான் விரும்பற ஒரு தகுதி மட்டும் அவன் கிட்ட இல்ல. அதனால, 'ப்ரேக்-அப்' பண்ணிட்டேன்.''
''அப்படி என்ன நீ விரும்புற தகுதி?'' என்றாள், மாலதி.
''சின்ன வயசுல இருந்து, ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறதா சொன்னான். நானும், யாரும் இல்லாதவன்னு தான் நினைச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது, அவனுக்கு அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கச்சின்னு பெரிய குடும்பமே இருக்காங்க. இதெல்லாம் தெரிஞ்சி, அவனை கட்டிக்க நான் என்ன பைத்தியமா?''
''என்னடி தங்கம் இப்படி சொல்ற. அவங்க எல்லாம் இருந்தா தான் குடும்பம். யாரும் இல்லாதவங்களை என்ன சொல்வாங்க தெரியுமா?''
''வாழ்க்கைய கத்துக் கொடுக்கற முதல் ஆசான், அம்மா தான். அடுத்து, அப்பா. அப்புறம் நீங்க வாழ்ந்த வாழ்க்கை. அப்புறம், உங்க குடும்பம். இந்த வாழ்க்கையில நான் படிச்சது அம்மா நல்லவங்க தான்; ஆனா, கோழை. அப்பா, அவங்க குடும்பத்து பேச்சைக் கேட்டு ஆடுற, தலையாட்டி பொம்மை.
''அத்தைகளும், பாட்டியும் தன் குடும்பத்துக்கு மருமகளா வந்தவள், சந்தோஷமா இருக்கறதை பார்க்க பிடிக்காதவங்க. நான் புரிஞ்சிக்கிட்ட வரை, இந்த மாதிரி, 'டார்ச்சர்' குடும்பத்துல வாழறதுல எனக்கு விருப்பம் இல்லை. வாழ்க்கையை சுயமரியாதையோட நிம்மதியா வாழ நினைக்கிறேன்.
''அதனால தான் பெத்தவங்க, கூடப் பிறந்தவங்கன்னு யாருமில்லாத பையனை கட்டிக் கிட்டு நிம்மதியா வாழ ஆசைப்படுறேன். புரியுதா...'' எனக் கூறி முடித்தாள், கவிதா.
அறைக்கு வெளியே காதை தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
கண்மணி