தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

3


PUBLISHED ON : ஜூன் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2026

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு வேலையை விட்டுவிடாதீர்கள்!

ஆறு மாதத்துக்கு முன், என் கல்லுாரித் தோழிக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில், அவள் மத்திய அரசு வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு, கல்யாணம் நடந்து முடிந்ததும், அவள் கணவனின் பெற்றோர், 'எங்கள் மகன் கை நிறைய சம்பாதிக்கிறான். கணவனும், மனைவியும் வேலைக்குப் போவது குடும்ப வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கும்...' என்று சொல்லி, தோழியின் மத்திய அரசு வேலையை ராஜினாமா செய்ய கூறியுள்ளனர்.

வேறு வழியில்லாமல், என் தோழியும், மத்திய அரசு வேலையை ராஜினாமா செய்தாள்.

ஒரு மாதத்துக்கு முன், தோழியின் கணவர் அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மீது மோதி, உயிரிழந்து விட்டார்.

இனி, வாழ்க்கை நடத்துவது எப்படி என்று தெரியாமல் நின்றாள், என் தோழி. மத்திய அரசின், 'பென்ஷன்' கிடைக்க, 10 ஆண்டு சர்வீஸ் தேவை இருக்க, என் தோழிக்கு, ஐந்து ஆண்டு சர்வீஸ் தான் இருந்தது.

'நீ, வீட்டுக்கு மருமகளாக காலெடுத்து வைத்த போதாத வேளை தான் எங்கள் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்தது. எங்களுக்கு எங்கள் மகனை இழக்க வேண்டியாகி விட்டது...' என்று, தோழியின் மாமனாரும், மாமியாரும் அவளைக் கரித்துக் கொட்டுகின்றனர்.

தற்போது, என் தோழி, சொற்பமான வருமானத்துக்கு ஒரு ஜவுளிக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறாள்.

இதிலிருந்து, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நம்மை திருமணம் செய்து கொள்ள வருபவர்கள், வேலையில், உயர் பதவியில் இருந்தாலும், எக்காரணம் கொண்டும், தான் செய்து வரும் அரசு வேலையை விட்டுவிடக் கூடாது என்பது தான்.

ஆர்.கீதா, ஆலுவா, கேரளா.

மாற்றி யோசித்த மாற்றுத்திறனாளி!

எனக்கு தெரிந்த மாற்றுத்திறனாளி ஒருவர், இரு கால்களும் செயலிழந்து, நடக்க இயலாதவர் என்பதால், கைகளை ஊன்றி, தவழ்ந்து தான் செல்வார். அவருக்கு மனைவியும், மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

அரசாங்கத்தின் மூலம் கிடைத்த, மூன்று சக்கர வாகனத்தில் பல இடங்களுக்கு சென்று, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட, வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை பழுது நீக்கும் பணியை செய்து வந்தார்.

அதில், போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால், கூடுதலாக என்ன செய்வதென மாற்றி யோசித்தார்.

பழுது நீக்க போகும்போதே, அவருடைய வாகனத்தில், கோலமாவு, தலையணை உறைகள், பெண்களுக்கான நைட்டி மற்றும் ஆடவருக்கான லுங்கி போன்றவற்றை வைத்து, விற்க ஆரம்பித்தார்.

அவரின் முயற்சி வீண் போகவில்லை. வாடிக்கையாளர்கள் பெருக, நிறைவான வருமானம் ஈட்ட ஆரம்பித்து, இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையலாம் என்பதற்கு உதாரணமாக திகழும் அவரை, அனைவருமே பாராட்டுகின்றனர்.

- மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.

'ராஜாஜி 'என்றே எழுதலாமே!

அண்மையில், மதுரையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என் உறவினரை பார்க்க சென்றிருந்தேன்.

அரசு மருத்துவமனையின் வாசலில் இருந்த பெயர் பலகையை பார்த்ததும், அதிர்ச்சியளித்தது. அதில், 'அரசு ராசாசி மருத்துவமனை' என, பொறிக்கப்பட்டிருந்தது.

மூதறிஞர் ராஜாஜி பெயரைத் தான், தமிழ்ப்படுத்துவதாக நினைத்து, அப்படி எழுதி வைத்துள்ளனர் போலும்.

தமிழகத்தில், அபூர்வமாக ஒரு மருத்துவமனைக்கு, ராஜாஜி என, பெயர் வைத்துள்ளனர். அதையும், 'ராசாசி' என, வைத்தால், அது மொழி அறிவு இல்லாதவர்கள் வாசிப்பது போல, நகைப்பிற்குரியதாகி விடாதா?

'அரசு ராஜாஜி மருத்துவமனை!' என்றே, பெயர் பலகையை மாற்றி வைத்தால், ராஜாஜிக்கு சிறப்பு செய்வது போல் இருக்குமே... செய்வார்களா?

ஜே.கமலம், திருநெல்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us