
ஓய்வு என்பது முடிவல்ல!
வாழ்க்கையில், 60 வயதானாலே, பலருக்கும் ஓய்வெடுக்கும் காலம் என்ற நினைப்பு வந்து விடும். வங்கியில் பல ஆண்டுகள் தலைமை மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கு, அந்த ஓய்வு, ஒரு புதிய தேடலுக்கான வாசலாக அமைந்தது.
விளைவு, இப்போது, வாடகை கார் ஓட்டுனராக மாறிவிட்டேன்.
ஆரம்பத்தில், 'வங்கியின் உயர் அதிகாரியாக இருந்தவர், இப்படி கார் ஓட்டலாமா?' என, சிலர் கேட்டனர். ஆனால், உழைப்பில் என்ன உயர்வு, தாழ்வு இருக்கிறது? பயணியரை விமான நிலையத்திற்கோ அல்லது மருத்துவமனைக்கோ சரியான நேரத்தில் அழைத்து சென்று விடும்போது, அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதி இருக்கிறதே... அது, நான் வங்கியில் பல லட்சம் ரூபாய் லோன், 'அப்ரூவல்' செய்த போது கிடைத்த மகிழ்ச்சியை விட, பெரியதாக தெரிகிறது.
குறிப்பாக, அவசரத் தேவைகளுக்காக, அதிகாலையிலோ அல்லது நள்ளிரவிலோ யாராவது அழைக்கும் போது, ஒரு வங்கி அதிகாரிக்கே உரிய பொறுப்புணர்வுடன் செயல்படுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது வெறும் தொழில் மட்டுமல்ல, சேவையாகவே இதைக் கருதுகிறேன்.
பதவியும், பட்டமும் ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு மறைந்து விடும். ஆனால், நாம் செய்யும் வேலையின் மீதான காதலும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் என்றும் மாறாது.
வெ.நாராயணன், மாம்பாக்கம், சென்னை.
வேலை ஒன்று, பயன்களோ பல!
நண்பர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், 'செக்யூரிட்டி' மற்றும் 'கேர் டேக்கர்'ஆக ஒரு படித்த இளைஞனை வேலைக்கு வைத்திருக்கின்றனர். பொதுவாக, இது மாதிரி வேலைகளுக்கு வயதான மற்றும் குறைவாக படித்த நபர்களையே, குறைந்த சம்பளத்திற்கு வைத்துக் கொள்வது வழக்கம். அப்படியிருக்க, படித்த இளைஞனை நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு வைத்திருப்பது ஏன் எனக் கேட்டேன்.
'அந்த இளைஞனுக்கு, 'ஏசி' செய்யப்பட்ட ஒரு அறையும், கம்ப்யூட்டர் உபகரணங்களும் கொடுத்துள்ளோம். இவற்றின் மூலம் அவன் குடியிருப்புவாசிகளுக்கு தேவையான மின் கட்டணம் கட்டுவது, சொத்துவரி கட்டுவது, இன்சூரன்ஸ் பணம் கட்டுவது, ஆவணங்களை பிரின்ட் மற்றும் ஜெராக்ஸ் எடுப்பது, ஆன்லைன் மூலம், பஸ், ரயில், விமான டிக்கெட்டுகள், 'புக்' செய்து தருவது என, பல வேலைகளை செய்து தருவான். இதன் மூலம் இங்குள்ளவர்களுக்கு நேரமும், அலைச்சலும் மிச்சமாகிறது...' என்றார், நண்பர்.
படித்த இளைஞனுக்கு, செக்யூரிட்டி வேலை தானா என்ற தன்மான பிரச்னை வந்து விடாமல், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை மற்றும் நல்ல சம்பளத்துடன், அவனை கவுரவமாக நடத்தும் குடியிருப்புவாசிகளை மனதார பாராட்டி வந்தேன்.
பெ.பாண்டியன், காரைக்குடி.
சிறிய முயற்சி பெரிய மாற்றம்!
எங்கள் தெருவில் புதிதாக குடியேறிய, இளைஞர் ஒருவர், தினமும் காலை நேரத்தில், சாலையோரத்தில் விழுந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கொண்டிருந்தார். 'ஏன் இப்படி செய்கிறார்...' என, ஆச்சரியப்பட்டேன்.
ஒருநாள், அவரிடம் இதுகுறித்து கேட்டேன்.
அதற்கு, 'நான் தினமும் நடந்து செல்லும் வழி சுத்தமாக இருந்தால், அது எனக்கு மகிழ்ச்சி தரும். மேலும், ஆரோக்கியமாகவும், மனநிம்மதியுடனும் நாளை துவங்க முடிகிறது...' என்றார்.
அந்த வார்த்தைகள், என் மனதில் பதிந்தது.
அவர் யாருக்காகவும், அரசு நடவடிக்கைக்காகவும் காத்திருக்கவில்லை. தொடர்ந்து அச்செயலில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களில் எங்கள் தெரு முழுவதுமே மாறிப் போனது.
ஆரம்பத்தில், கவனிக்காமல் சென்ற தெருவாசிகள், நாளடைவில் அவருடன் சேர்ந்து சுத்தம் செய்ய துவங்கினர். அந்த இளைஞரின் சிறிய செயல், பலரின் மனதில் பெரிய விழிப்புணர்வை உருவாக்கியது. நானும் அந்த குழுவில் இணைந்தேன்.
இப்போது, எங்கள் தெருவை பார்ப்போர், 'இந்த தெரு மட்டும் எப்படி இவ்வளவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறது...' என்று, வியப்புடன் பாராட்டுகின்றனர்.
பிறரை எதிர்பார்க்காமல், நீங்களும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருந்தால், ஆரோக்கியமாகவும், மனம் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.
அ.துரைமணி, நாகர்கோவில்.

