
வடிவேலு, சந்தானத்தை முந்தினார், சூரி!
காமெடி நடிகர்களான, வடிவேலுவும், சந்தானமும், பிறகு 'ஹீரோ'வாக நடிக்க ஆரம்பித்தைப் போன்று, பல படங்களில் காமெடியனாக நடித்த, சூரியும், தற்போது 'ஹீரோ'வாக நடித்து வருகிறார். அப்படி, அவர் நடித்த படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக, ஆரம்பத்தில், 'ஹீரோ'வாக நடிக்க, சில கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி வந்த, சூரி, அடுத்து, தான் நடிக்க இருக்கும் படத்துக்கு, 25 கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளார். இந்த படமும், 'ஹிட்' அடித்தால், அடுத்து, 100 கோடி ரூபாய், 'மெகா பட்ஜெட்' பட நாயகனாகி விட வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார்.
— சினிமா பொன்னையா
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய, ஸ்ருதிஹாசன்!
ஆரம்பத்தில், தெலுங்கில் சில படங்களில் படு கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்தார் நடிகை, ஸ்ருதிஹாசன். அதுகுறித்த, 'போஸ்டர்'கள் பொதுவெளியில் ஒட்டப்பட்டபோது அதை எதிர்த்து மாதர் சங்கங்கள் அவருக்கு எதிராக, போராட்டத்தில் குதித்தன. இதனால், பின்னர் கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
ஆனால், அதையடுத்து அவரது, 'மார்க்கெட்' வேகமாக சரிந்து விட்டது. பல ஆண்டுகளுக்கு பின், தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் படுகவர்ச்சியாக நடிக்கிறார், ஸ்ருதிஹாசன். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி, தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மீண்டும் தெலுங்கு மாதர் சங்கம் களமிறங்க தயாராகிவிட்டதாக கூறுகின்றனர்.
— எலீசா
நயன்தாராவின், 'ரோல் மாடல்!'
'நான், தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியதிலிருந்தே எனக்கு சினிமா குறித்த பல, 'அட்வைஸ்'களை அவ்வப்போது கொடுத்து வருகிறார் நடிகை, ராதிகா. அவரை பல விஷயங்களில் நான், 'பாலோ' செய்து வருகிறேன். அவரை போன்று ஒரு, 'டெடிகேட்டடான ஆர்டிஸ்ட்'டை பார்ப்பது அரிது. என்னைப் போன்றோருக்கு, அவர், 'ரோல் மாடலாக' இருந்து வருகிறார். தன், 63 வயதுக்கு பிறகும் சினிமாவில் அவர் செய்து வரும் சாதனையை பார்த்து, ஆச்சர்யப்படுவதோடு, அவரை போன்று நானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் ஏற்படுகிறது...' என்கிறார், நயன்தாரா.
— எலீசா
விஜய் சேதுபதி செய்த காரியம்!
தமிழில், தக்லைப் படம் கொடுத்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீண்டு விட வேண்டும் என்பதற்காக, தற்போது ஒரு, 'ஸ்கிரிப்ட்' தயார் செய்துள்ள இயக்குனர், மணிரத்னம், 'தற்போது உடனடியாக எனக்கு ஒரு, 'ஹிட்' படம் தேவைப்படுகிறது. இல்லை என்றால், 'மார்க்கெட்' ஆட்டம் கண்டு விடும்...' என்று, தன் நிலையை நடிகர், விஜய்சேதுபதியிடம் சொல்லி இருக்கிறார். அவரது நிலையை புரிந்து கொண்ட, விஜய் சேதுபதி, தான் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த ஒரு படத்தை தள்ளி வைத்து, அந்த, 'கால்ஷீட்'டை, மணிரத்னம் படத்துக்கு கொடுத்து, அவரது மனதில் மலை போல் உயர்ந்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
மூனுஷா நடிகையிடம், தன் புதிய படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி இருந்த, மணியான இயக்குனர், திடீரென்று அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் நடிக்க, ரவுடி பேபியை, 'புக்' பண்ணி விட்டார். அதுகுறித்து, அவரிடம் நடிகை, மூனுஷா கேட்டபோது, 'தற்போது நீங்கள் அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருவதால், என் படம் திரைக்கு வரும்போதும், 'சோஷியல் மீடியா'வில், 'நெகட்டிவ்' விமர்சனங்களை வெளியிட்டு படத்தையே ஓட விடாமல் செய்து விடுவர்...' என்று கூறி விட்டார், மணியானவர்.
இவர் மட்டுமின்றி, இன்னும் சில இயக்குனர்களும், மூனுஷாவை சத்தமில்லாமல் ஏறக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால், தளபதி நடிகருடனான சர்ச்சை, தன் சினிமா, 'மார்க்கெட்'டுக்கு மொத்தமாக வேட்டு வைத்து விடுமோ என்று விழி பிதுங்கி நிற்கிறார், மூனுஷா.
தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது, பாடகியான அன்பு தோழியுடன் ஐக்கியமாகி இருக்கும், ஜெயமான நடிகர், கூடிய விரைவில், இரண்டு எழுத்து மாநிலத்தில் புதிய வீடு வாங்கி, அன்புத் தோழியுடன், 'செட்டில்' ஆக போகிறார். இந்த சேதியறிந்து நீதிமன்றம் சென்றுள்ள அவரது மனைவி, தற்போது உள்ள சொத்துகளில், இரண்டு மகன்களுக்கும் பங்கு கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் அவர் செல்லட்டும் என்று நீதிமன்றத்தில், 'செக்' வைத்து விட்டார். இதன் காரணமாக, சத்தம் இல்லாமல் அன்பு தோழியுடன், 'எஸ்கேப்' ஆகிவிட திட்டமிட்ட, ஜெயமான நடிகர், வூட்டுக்கார அம்மணியின் கிடுக்கி பிடியால், புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார்.
சினி துளிகள்!
* தக்லைப் படத்தை அடுத்து, இயக்குனர், மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும், த்ரிஷா நடிக்க இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக நடிகை, சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளார்.
* படங்களில், துக்கடா உடை அணிந்து நடித்த போதும், சினிமா நிகழ்ச்சிகளுக்கு புடவை அணிந்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் தெலுங்கு நடிகை, ஸ்ரீ லீலா.
* மலையாளத்தில் வெளியான, திரிஷ்யம் படத்தின், இரண்டு பாகங்களிலும் மலையாள நடிகர், மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்த, மீனா, தற்போது, மூன்றாவது பாகத்திலும் நடித்து வருகிறார்.
* கோவாவில் குடியேறுவதற்காக புதிய வீடு வாங்க திட்டமிட்டுள்ளார் நடிகர், ரவி மோகன்.
அவ்ளோதான்!

