PUBLISHED ON : ஜூன் 14, 2026

உ.ஜெயக்குமார், துாத்துக்குடி: நார்வே நாட்டு நாளிதழ் ஒன்று, நம் பிரதமர் மோடியை, பாம்பாட்டி போல சித்தரித்து, கார்ட்டூன் வெளியிட்டுள்ளதே...
ஊடக தர்மத்தை மீறியுள்ளது, அந்நாடு. கொரோனா காலத்தில், உலகுக்கே மருந்து, 'சப்ளை' செய்து, காப்பாற்றியவர், மோடி. இப்படிப்பட்ட உலக தலைவரை தவறாக சித்தரிப்பது, அவர்களின் தரத்தையே வெளிப்படுத்துகிறது!
கா.பசும்பொன், மதுரை: 'விளையாட்டு வீரர்களுக்கு, பொருளாதாரம் தடையாகக் கூடாது...' என, விளையாட்டுத் துறை அமைச்சர், ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளாரே...
நம் மாநில வீரர்கள், ஒலிம்பிக் வரை சென்று சாதனை படைக்கும் திறமை பெற்றவர்கள். ஆனால், பொருளாதார நிலை அவர்களுக்கு சாதகமாக இல்லை. தமிழக அரசே அவர்களுக்கு உதவ முன்வருவது, பாராட்டுக்குரியது!
* ஜே.கமலம், திருநெல்வேலி: 'தி.மு.க., தலைவரின் விமர்சனம், வலியைத் தருகிறது...' என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளாரே...
போலியான, நடைமுறைக்கு ஒத்துவராத கொள்கையால், தி.மு.க.,விடம் சிக்கித் தவித்த திருமாவளவன், தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடியில் இப்போது இருக்கிறார். இதை வசதியாக பயன்படுத்திக் கொள்ளும், தி.மு.க., தலைவர், அம்பை எய்கிறார், தன் முதுகில் விழுந்துள்ள ஏராளமான அம்புகளை மறைத்தபடி!
* ஆர்.ஹரிகோபி, புதுடில்லி: 'மாணவர்கள், பள்ளிக்கு, பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களில் வந்தால், வாகனத்தைப் பறிமுதல் செய்து, பெற்றோரை அழைத்து, தக்க அறிவுரை வழங்கி, மாணவரை ஒப்படைக்க வேண்டும்...' என, பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளாரே...
பதினெட்டு வயது நிரம்பாத மாணவர்களுக்கு, பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் ஓட்ட, 'லைசென்ஸ்' கொடுக்கப்படாது. விபத்துக்களை தவிர்க்கவே, இந்த விதி அமலில் உள்ளது. ஆனால், மாணவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. பள்ளிக் கல்வி இயக்குனர், மிகச் சரியாக உத்தரவிட்டுள்ளார்!
ரா.ராஜ்மோகன், திண்டிவனம்: 'புதிய அரசு பொறுப்பேற்ற, ஆறு மாதங்கள் வரை, வாயைத் திறக்க மாட்டோம் எனக் கூறிய எதிர்க்கட்சியினர், ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், விமர்சனம் செய்வது ஏன்?' எனக் கேட்கிறாரே, த.வெ.க., அமைச்சர் செங்கோட்டையன்?
அமைச்சர் செங்கோட்டையன் கேட்பது சரிதானே! முந்தைய அரசு செய்த குளறுபடிகளை சரிசெய்ய, புதிய அரசுக்கு அவகாசம் கொடுக்க தான் வேண்டும்!
கே.எம்.பாரூக், சென்னை: 'இந்திய அளவில், பா.ஜ.,வின் தொடர் வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் தான்...' என்கிறாரே, தி.மு.க.,வின், உதயநிதி...
காங்கிரஸ் செய்துள்ள ஏகப்பட்ட தவறுகளும், கோமாளித்தனங்களும் தான் காரணம் எனக் கூறியிருந்தால், இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்!
* ஆனந்த் ஸ்ரீனிவாசன், சென்னை: முக்கியமான விபரங்கள் அடங்கிய, 10 'ஹார்டு டிஸ்க்'குகள், தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் காணாமல் போனது பற்றி...
அவற்றை, 'அணில்' தின்று விட்டதோ... ஆனந்துக்கு புரிந்திருக்குமே!
எம்.பாஸ்கர், தஞ்சாவூர்: 'தி.மு.க.,வை, எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. தி.மு.க.,வைப் பார்த்தால் சிலருக்கு பயம் இருந்துக்கிட்டே இருக்கும்...' என, அக்கட்சியின், டி.ஆர்.பி.ராஜா கூறியது பற்றி...
ஓ... அந்த பயத்தில் தான், கூட்டணி கட்சியினர் அனைவரும், த.வெ.க., பக்கம் ஓடி விட்டனரோ!
என்.சாந்தினி, மதுரை: எல்லா கட்சியினரும் குடைச்சல் கொடுக்கின்றனரே... சமாளித்து விடுவாரா, விஜய்?
ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தி, விமர்சனங்களை புறந்தள்ளி செயல்பட்டால், சமாளித்து விடலாம். விஜய் செய்வார் என நம்புவோம்!
* செ.சவுமியா, தருமபுரி: அமைச்சர் கீர்த்தனா, தமிழகத்தில் முதலீடு செய்ய, 'டிப்டாப்' உடையுடன் வீடியோ வெளியிட்டுள்ளாரே...
அதிலென்ன தப்பு? 'டிப்டாப்' உடையில், படாடோபமாக செலவழித்து, குடும்பத்துடன் வெளி நாடுகளுக்கு சென்று, 'போட்டோ'க்களுக்கு போஸ் கொடுத்து... இப்படி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கு பதில், 'டிப்டாப்' உடையணிந்து, ஒரே ஒரு, 'வீடியோ' மூலம் முதலீடுகளை திரட்டுவதில் தவறில்லையே, சவுமியா!
ஜி.சுந்தரமூர்த்தி, முசிறி: 'உதயசூரியனில் நின்றதால், விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை...' என்று, ஆதங்கப்படுகிறாரே, ம.தி.மு.க., துரை வைகோ?
இதற்குப் பெயர் தான், 'கண்கெட்ட பின்னே, சூரிய நமஸ்காரம்...' என்பது!
பாரதி முருகன், கள்ளக்குறிச்சி: 'விஜயே என்னைத் தேடி வந்து, துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்: ஆனால், பணத்திற்கோ, பதவிக்கோ ஆசைப்படாத கட்சி எங்களுடையது...' என, தே.மு.தி.க., பிரேமலதா கூறியுள்ளாரே...
இவர் முன்பிருந்த, அ.தி.மு.க., கூட்டணியில், என்னென்ன, 'டிமாண்ட்' வைத்தார் என்பதையும், தற்போது, தி.மு.க.,வில் சேர, என்னென்ன, 'டிமாண்ட்' வைத்தார் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கி விட்டால், அவரின் கதி, 'அதோகதி'யாகி விடும். அதெல்லாம் யாருக்கும் தெரியாது என்று நினைத்து அடித்து விடுகிறார், பிரேமலதா! சிரிப்பு தான் வருகிறது!
* டி.ரவீந்திரன், சென்னை: அரசின் அனைத்து துறைகளிலும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு அமலாக்கப்பட உள்ளதாமே?
வருகையை மட்டும் பதிவு செய்யாமல், அலுவலகத்தை விட்டு, வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் பதிவு செய்வது அவசியம். முக அடையாளத்தை வைத்து பதிவு செய்யும் முறையை அமல்படுத்தினால், இன்னும் சிறப்பாக இருக்கும்.
இ.கஸ்துாரி, தென்காசி: விஜய், வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?
இந்த வெள்ளை அறிக்கை வெளிவந்து விடுமோ என்ற பீதியில், பலர் உறைந்து போயுள்ளனர். அந்த, 'கேட்டகரி'யில், நீங்கள் இல்லை தானே, கஸ்துாரி?
ஏ.எஸ்.யோகா, ஈரோடு: 'சட்டசபை தேர்தல் தோல்விக்கு, ஸ்டாலினும், சபரீசனும் தான் காரணம்...' என, கள ஆய்வுக்குழுவினர், கண்டுபிடித்திருக்கின்றனராமே!
அது தான் ஊரறிந்த ரகசியம் ஆயிற்றே, யோகா... இதற்கு கள ஆய்வுக் குழு வேறு தேவையா என்ன!
ஒய்.எஸ்.ஸ்ரீரவிராகுல், ஈரோடு: 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்குது...' என, எந்த அரசியல்வாதியும், அரசியலை விட்டு ஒதுங்குவதில்லையே... ஏன்?
பணம் புரளும் வியாபாரமாகி விட்டதே அரசியல்... அதை யார் வெறுப்பர்?
* சி.திலீப் விஸ்வராஜ், சென்னை: பிரதமர் மோடி தொடங்கிய மரம் நடும் இயக்கத்தை பின்பற்றி, யு.ஜி.சி., அமைப்பு, பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மரம் நடுமாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதே...
நல்ல திட்டம். எல்லா பல்கலைகளும், கல்லுாரிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், 'பசுமை புரட்சி' ஏற்படும்; மழை நன்றாக பொழியும்; காற்று மாசு குறையும்; கோடை வெயிலின் தாக்கமும் குறையும். மகிழ்ச்சி தானே! நல்லதே நடக்கட்டும்!
