தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

தேர்தல் - தேர்தல் முடிவு என்ற எல்லா பரபரப்புகளும் ஓய்ந்த பின், ஒருநாள், பொறுப்பாசிரியர் என்னை அழைத்து, 'நீயும், லென்ஸ் மாமாவும் இரண்டு நாள் பெங்களூருக்கு சென்று, 'ரிலாக்ஸ்' செஞ்சுட்டு வாங்க...' என்று கூறி, பதிவு செய்த, இரண்டு ரயில் டிக்கெட்டுகளை கொடுத்தார்.

இந்த விஷயத்தை, லென்ஸ் மாமாவிடம் சொல்ல, 'ஹையா, ஜாலி...' என்று, ஸ்கூல் பையன் மாதிரி குதித்தார். உடனடியாக பெங்களூரில் வசிப்பவரும், ஆங்கில பத்திரிகை ஒன்றின் பெங்களூரு பதிப்பில் பணிபுரியும் நண்பரிடமும் கூறிவிட்டார். அடுத்து, துணிமணிகள் எடுத்து வைக்க, வீட்டுக்கு கிளம்பியும் விட்டார்.

மறுநாள், காலை, 'வந்தே பாரத்' ரயிலில், பெங்களூரு கிளம்பினோம். ரயில் கிளம்பிய, ஒரு மணி நேரத்துக்கு பின், டிபன், காபி கொடுத்து விட்டனர். அதிவிரைவு ரயில் என்பதால், நான்கு மணி நேர பயணம் சுகமாகவே இருந்தது; களைப்பே தெரியவில்லை.

எங்களை அழைத்துச் செல்ல, நண்பரே கார் எடுத்து வந்திருந்தார். பெங்களூரு, 'டிராபிக்'கில் சிக்கி, ஒருவழியாக நண்பர் வீட்டுக்கு சென்றோம்.

நண்பரின் மனைவியும், குழந்தைகளும் கோடை விடுமுறைக்காக, மனைவியின் அம்மா வீட்டுக்கு சென்றிருப்பதாக கூறினார், நண்பர்.

வீட்டிலிருந்த சமையற்கார மாமாவிடம் எங்களை அறிமுகப்படுத்தி, 'உங்களுக்கு தேவையானதை சொல்லி விடுங்கள். சுவையாக சமைத்து தருவார். குளித்து, சிறிது நேரம், 'ரெஸ்ட்' எடுங்கள். அலுவலகத்தில் ஒரு அவசர வேலை இருக்கிறது. இரண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டு வருகிறேன்...' என்று கூறி சென்றார், நண்பர்.

மாமா, குளித்து முடித்து, சமையலறைக்கு சென்று, 'நான்-வெஜ்' ஐட்டங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்று சமையற்காரரிடம் சொல்லிவிட்டு வந்தார். என்னிடம் கேட்க, வெஜ்-சூப் மற்றும் பெங்களூரு ஸ்பெஷல் சைவ ஐட்டங்களை கூறினேன்.

மாமா தோட்டத்தில் இருந்த, ஊஞ்சலில் அமர்ந்து ஆட ஆரம்பிக்க, நான், நண்பரது புத்தக அலமாரியை ஆராய்ந்தேன். முன் வரிசையில், 'குஷ்வந்த் சிங் ஜோக்ஸ்' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. எடுத்து புரட்டினேன்.

'இல்லஸ்ட்ரேடட் வீக்லி' மற்றும் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்தவர், குஷ்வந்த் சிங். அலட்டிக் கொள்ளாமல், சுருக்கென்று தைக்கும் விதத்தில் எழுதும் பாணியில் கைதேர்ந்தவர்.

புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சில நகைச்சுவை துணுக்குகள்:

ஒரு அமெரிக்க சுற்றுலா பயணிக்கு, டில்லி, ஆக்ராவை சுற்றிக்காட்ட, டாக்ஸியுடன் உதவினார், சர்தார்ஜி ஒருவர்.

செங்கோட்டையை சுற்றி பார்த்த பிறகு, சர்தார்ஜியிடம், 'இதை கட்ட எவ்வளவு ஆண்டுகள் ஆனது?' என்று கேட்டார், அமெரிக்கர்.

'இருபது ஆண்டுகள் ஆனது...' என்றார், சர்தார்ஜி.

'இந்தியர்கள் சோம்பேறிகள். அமெரிக்கர்கள் இதனை, ஐந்து ஆண்டுகளில் கட்டியிருப்பர்...' என்றார், அமெரிக்கர்.

அடுத்து, தாஜ்மஹாலை சுற்றி பார்த்ததும், 'இதை கட்ட எவ்வளவு ஆண்டுகள் ஆனது?' என்று கேட்டார், அமெரிக்கர்.

சர்தார்ஜி வேண்டுமென்றே குறைவாக, '10 ஆண்டுகள் ஆனது...' என்றார்.

அதற்கு, 'இந்தியர்கள் சோம்பேறிகள். நாங்கள் இரண்டரை ஆண்டுகளில் கட்டியிருப்போம்...' என்றார், அமெரிக்கர்.

சர்தார்ஜிக்கு கோபம் வந்தது.

அடுத்து, டாக்ஸி, குதுப்மினாரை நெருங்கியது. 'அது என்ன கோபுரம்?' என்றார், அமெரிக்கர்.

உடனே, 'அங்கே போய் தான் விசாரிக்கணும். நேற்று இந்த வழியாக வந்த போது, அது இல்லை...' என்றார், சர்தார்ஜி.

**********

பறந்து கொண்டிருந்த தேசியக் கொடியை தேசபக்தியுள்ள சீக்கியர் ஒருவர் கண்டார். விரைப்பாக நின்று அதற்கு, 'சல்யூட்' அடித்தார்.

அதைப் பார்த்த ஒருவர், 'இந்த கொடிக்கு ஏன் வணக்கம் செய்கிறாய்? ஹிந்துக்களுக்கு ஆரஞ்சு, முஸ்லீம்களுக்கு பச்சை, மற்றவர்களுக்கு வெள்ளை நிறம். சீக்கியர்களுக்கு எதுவும் இல்லையே...' என்றார்.

அதற்கு, சீக்கியர் பட்டென பதில் கூறினார்...

'கொடிக்கம்பம் யாரைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள். சீக்கியர்களைத் தான்!' என்றார்.

*******

தண்டவாளத்தின் குறுக்கே, படுத்திருந்தார், சர்தார்ஜி ஒருவர். அருகில் ஒரு புட்டி விஸ்கியும், தந்துாரி சிக்கனும் இருந்தது.

அவரை பார்த்துவிட்ட ஒருவர், 'ரயில் வந்தால் உங்கள் மீது ஏறிவிடாதா?' என, கேட்டார்.

'எனக்கு வாழப் பிடிக்கவில்லை. இறந்து போகத் தான் படுத்துக் கொண்டிருக்கிறேன்...' என்றார்.

'சரி, விஸ்கியும், சிக்கனும் எதற்கு?'

'ரயில் சரியான நேரத்திற்கு வரும் என, கூற முடியாது. பட்டினி, தாகத்துடன் இறக்கணுமா என்று தான் அதை கொண்டு வந்திருக்கிறேன்...' என்றார், சர்தார்ஜி.

********

உலகத்துக்கு எது முக்கியம்? சூரியனா, சந்திரனா? என்பதில், இரு பஞ்சாபி விவசாயிகளுக்கிடையே வாக்குவாதம்.

பிரச்னை கிராமப் பஞ்சாயத்துக்கு சென்றது.

பஞ்சாயத்தார், பல மணி நேரம் தங்களுக்குள் கூடி விவாதித்தனர். தலைவர், சந்திரனுக்கு ஆதரவாக தன்னுடைய தீர்ப்பை கூறினார்...

'சந்திரன் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் நம்மால் எதையுமே பார்க்க முடியாது. ஆனால், சூரியனோ வெளிச்சம் தேவைப்படாத பகல் நேரத்திலேயே பிரகாசிக்கிறான். ஆக, சந்திரன் தான் முக்கியம்!' என்றார்.

*********

ஒரு கோழிப்பண்ணையில், கோழிகள் மற்றும் முட்டைகள் சிறந்தவையாக இருந்தன.

அதைப் பார்த்த ஒருவர் கேட்டார்...

'இவைகளுக்கு என்ன உணவு கொடுக்கிறீர்கள்?'

'பாதாம், பிஸ்தா மற்றும் நெய் ஆகியவற்றை தீவனத்துடன் கலந்து தருகிறேன்...' என்றார்.

உடனே வந்தவர், 'நான் வருமான வரி அதிகாரி. உங்களுக்கு செலவழிக்க ஏது பணம்?' எனக் கேட்க, திகைத்த பண்ணையார், ஒருவழியாக அவரை சமாளித்து அனுப்பி விட்டார்.

சில நாட்களில், மற்றொருவர் வந்து, அதே கேள்வியை கேட்டார்.

பண்ணையார் ஜாக்கிரதையாக, 'எதுவுமே போடுவதில்லை. பட்டினி போடுகிறேன்...' என்றார்.

'நான், கால்நடை பாதுகாப்பு மையத்திலிருந்து வருகிறேன். கோழிகளை பட்டினி போட்டதற்காக உன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன்...' என, மிரட்டினார்.

அவரையும் சமாளித்து அனுப்பி விட்டார், பண்ணையார்.

மேலும் சில நாட்கள் சென்றபின், மற்றொருவர் வந்து, அதே கேள்வியை கேட்டார்.

எதற்கு வம்பு என்று, 'ஒவ்வொரு கோழியிடமும், 50 ரூபாய் கொடுத்து, வேண்டியதை சாப்பிட்டுக்குங்கன்னு சொல்லி விடுவேன்...' என்று கூறிவிட்டார், பண்ணையார்.

பாதி புத்தகம் படிப்பதற்குள், ஏதோ சத்தம் கேட்க, தலையை உயர்த்தி பார்த்தேன். எதிரே, 'கச்சேரி' ஆரம்பிக்க, ஆயத்தம் செய்து கொண்டிருந்தார், லென்ஸ் மாமா. 'திருந்தவே மாட்டீர்களா, மாமா. 'ரிலாக்ஸ்' செய்துக்கணும்ன்னா இது தான் அர்த்தமா?' என்றேன். 'உஷ்... இதெல்லாம் உனக்கு தெரியாது, மணி...' என்று என்னை அடக்கினார். சமையற்காரரும் இடையிடையே வந்து, லென்ஸ் மாமாவிடம் ஏதோ கிசுகிசுத்துவிட்டு, சென்றார். இனி, இவர்கள் போக்கில் தான் செல்ல வேண்டும் என்று நினைத்து, தோட்டத்தை சுற்றி பார்க்க சென்றேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us