தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'சி லர், பிடிக்காத தன் பெயரை மாற்றி, அதை நாளிதழ்களில் விளம்பரம் செய்வதை பார்த்திருக்கியா? அதுபோல், நீயும், உன் பெயரை, 'கேர்லெஸ் மன்னன்' என்று மாற்றிக்கொள்...' என, தன் உதவியாள பையனை சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா. அந்த பையன், ஆட்டை திருடிய கள்வன் போல் விழித்துக் கொண்டிருந்தான். காலையில், லென்ஸ் மாமாவின், விலை உயர்ந்த கேமராவை துடைத்து வைப்பதற்காக எடுத்துள்ளான், உதவியாளன். கைத்தவறி கேமராவின், 'பிளாஷ் லைட்' மட்டும் கழண்டு கீழே விழுந்து உடைந்துள்ளது. ஆவேசமாகி விட்டார், மாமா. 'கவனமா இருக்க வேணாமா தம்பி...' என்று சமாதானப்படுத்தி, அவனை அந்த இடத்திலிருந்து வெளியேற்றினார், உ.ஆ., ஒருவர். 'வேறு கேமரா எதிலிருந்தாவது எடுத்துக் கொள்ளுங்களேன்...' என்று ஆலோசனை தந்தார், மூத்த செய்தியாளர். 'தேடிப் பார்க்கிறேன்...' என்றவாறு, கேமராக்கள் வைத்திருக்கும் அறையை நோக்கி சென்றார், லென்ஸ் மாமா. மாமா அங்கிருந்து சென்றதும், 'பிடிக்காத பெயரை மாற்றுவது மனிதர்களிடம் மட்டுமல்ல, நாடுகள், அது சார்ந்த நகரங்களிலும் தொடர்ந்து நடந்து வருகின்றன...' என்று ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்: இந்த வகையில், லேட்டஸ்டாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது, நம் நாட்டின் கேரள மாநிலம் தான். கேரளாவின் தற்போதைய பெயர், கேரளம்.

இதற்கு முன், பெயர் மாற்றம் அடைந்த நாடுகள் பல உள்ளன...

'டர்க்கி' எனப்படும், துருக்கி நாடு, பெயரை, 'டர்க்கியா' என, மாற்றி விட்டது. இதற்கு, ஐ.நா.,வும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெயரை மாற்றியதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, 'டர்க்கி' என்பது, கழுகு என்ற பறவையை குறிக்கிறது. மே லும், கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதி, 'டர்க்கி' என்பதற்கு, முட்டாள் தனமான அற்பமான மனிதன் என்றும், படுமோசமாய் தோற்பது என்றும் அர்த்தம் கொடுத்துள்ளது. இதனால், வெறுப்படைந்த அரசு, தன் நாட்டின் பெயரை, உள்நாட்டு மக்கள் அழைக்கும் ஸ்டைலிலேயே மாற்றி விட்டது.

சுதந்திரத்துக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் பிரியும் நிலை வந்தபோது, மவுண்ட்பேட்டனிடம், இஸ்லாமியர் வாழும் நாட்டிற்கு, பாகிஸ்தான் எனவும், மீதி பகுதிக்கு, இந்துஸ்தான் எனவும் பெயர் வைக்கணும்ன்னு கேட்டுக் கொண்டார், ஜின்னா. காந்திஜியும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் அதை ஏற்கவில்லை.

இந்தியாவை சேர்ந்தவர்களும், இந்திய பகுதிக்கு, பாரத் அல்லது பாரத வர்ஷா என்று பெயர் வைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

கடைசியில், இந்தியா என, பெயர் சூட்டப்பட்டது. அத்துடன், இந்தியா தான் பாரத், பாரத் தான் இந்தியா எனவும், சமாதானம் கூறி, மற்றவர்களையும் ஏற்க வைத்தனர்.

பாகிஸ்தான் பிரிந்ததும், அதன் தலைவர், ஜின்னாவுக்கு, நம்முடைய, இந்து மகா சமுத்திரம் கண்ணை உறுத்தியது. அதன் பெயரை மாற்ற வேண்டும். இந்திய கடலை ஒட்டி ஏராளமான இஸ்லாமிய நாடுகள் தான் உள்ளன. அதனால், 'முஸ்லீம் கடல்' என, அழைக்க வேண்டும் அல்லது இந்தோ-பாக் கடல், ஈஸ்டர் கடல் என, பெயர் மாற்றிவிட, பல இடங்களில் முட்டிப் பார்த்தார், நடக்கவில்லை.

சில சமயம் ஆதிக்க நாடுகள் கூட, பெயரை மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்துவதுண்டு. உதாரணமாக, இரண்டாவது உலகப் போரின் போது, ஈரான் நாட்டின் பெயரை, 'பெர்ஷியா' என, மாற்ற வேண்டும் என்று ஈரானுக்கு கட்டளையிட்டார், இங்கிலாந்து நாட்டின் அப்போதைய பிரதமர், சர்ச்சில்.

இதற்கு, சர்ச்சில் கூறிய காரணம், ஈராக்குடன் சேர்த்து கூறும்போது, குழம்புகிறது என்பது தான்.

ஆனால், அந்த காலகட்டத்திலே யே அமெரிக்கா நன்கு வளர்ந்து, ஆதிக்க நாடாகி விட்டது. ஈரானுடன் நல்ல தொடர்பும் இருந்ததால், ஈரானிடம் பெயரை மாற்றக்கூடாது என, கூறி விட்டது. இதனால், ஈரான் பெயரை மாற்றவில்லை. அதே அமெரிக்கா, இன்று, ஈரானை துவம்சம் செய்து வருவது தனிக்கதை.

தைவான் நாட்டின் பழைய பெயர், கீவ். சீனாவிடமிருந்து ஒதுங்கியதும், அது, தன் பெயரை, தைவான் என, அறிவித்துக் கொண்டது. தனி நாடாக, இதை ஏற்கவில்லை, சீனா. இதேபோல், சீனாவிலிருந்து ஒதுங்கிய, டபி பகுதி, தன் பெயரை, லிதான்சியா என, மாற்றிக் கொண்டது.

இதேபோல், யுகேஸ்லேவியாவிலிருந்து, மாசிடோனியா பகுதி பிரிந்தபோது, அதே பெயரை வைத்துக்கொள்ள கூடாது என, கிரீஸ் நாடு எதிர்ப்பு தெரிவித்தது. காரணம், கிரீஸ் நாட்டிற்குள்ளும், ஒரு மாசிடோனியா பகுதி இருந்தது. மாவீரன் அலெக்சாண்டர் பிறந்த இடம் இது என்பதால், கடும் எதிர்ப்பை தெரிவித்தது, கிரீஸ். பலன், புதிய நாடு தன் பெயரை, வட மாசிடோனியா என, மாற்றிக் கொண்டது.

ஐரோப்பிய நாடுகளான, ஹாலந்து தன் பெயரை, நெதர்லாந்து எனவும், ஸ்வாசிலாந்து, ஸ்வாடினி எனவும் மாற்றிக்கொண்டன. ஸ்வாசிலாந்து என, உச்சரிக்கும் போது, சுவிட்சர்லாந்துடன் பலர் குழப்பிக் கொள்வதால், இந்த பெயர் மாற்றம்.

சிலோன் நாடு, ஸ்ரீலங்கா என, மாற்றிக் கொண்டது.

தென்னாப்ரிக்காவில், ஜனநாயக ஆட்சி மலர்ந்த பின், பல நகரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டன.

இந்தியாவில், பல நகரங்கள், தமிழகம் உட்பட பல ஊர்களின் பெயர்களும் மாற்றம் பெற்றுள்ளன.

உதாரணமாக, கோல்கட்டா, கடப்பா, புதுச்சேரி, பெங்களூரு, ஜபல்பூர், கான்பூர், வதோதரா, மும்பை, கொச்சி, சென்னை, மைசூரு, பிரயாக்ராஜ், குவஹாத்தி, கோழிக்கோடு, நாசிக், பனாஜி, புனே என, பல இந்திய நகரங்களை கூறிக்கொண்டே போகலாம்.

பெயர் மாற்றும் திட்டத்தில், மேலும் சில மாநிலங்கள் உள்ளன. அவை:

நாகாலாந்து - நாகாம்சி, மேற்குவங்காளம் - பங்களா.

இந்திய நகரங்களில் மாற்றப்படும் நிலையில் உள்ளவை:

பாட்னா - பாடலிபுத்ரா, அகமதாபாத் - கர்னாவதி, சிம்லா - சியாமளா, திருவனந்தபுரம் - அனந்தபுரி, என, பெயர் மாற்றம் பெற உள்ளன.

பெயர் மாற்றம் ஒன்றும் புதிதல்ல. ஆதிக்க நாடுகள், புதிய நாடுகளை பிடித்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது, தங்கள் வாயில் நுழையும்படியான பெயர்களை, நகரங்களுக்கு சூட்டிக் கொள்ளும்.

இந்தியாவை ஆண்ட, மொகலாய மன்னர்கள், நகரங்கள், கோட்டைகளை பிடித்ததும் முதலில் செய்வது அதன் பெயரை மாற்றுவது தான்.

- என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.

அச்சமயம், 'பர்சேஸ்' பிரிவு மேலாளருடன் தன் கேபினுக்கு திரும்பிய, லென்ஸ் மாமா, உடைந்த, 'பிளாஷ் லைட்'டை எடுத்துக் காட்டி, உதவியாள பையன் மீது புகார் கூறினார். புதிதாக வாங்குவதற்கு அடிப்போடுகிறார் என்று புரிந்து, அமைதியானோம் நாங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us