
அன்பு சகோதரிக்கு,
நான், 57 வயது பெண்மணி. என் கணவர் வயது, 59. எனக்கு, இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் இரு அண்ணன்கள். கணவருக்கு இரு தம்பிகள். மகன்களில் மூத்தவனுக்கு, 29 வயது. இளையவனுக்கு, 27 வயது.
தற்சமயம், இரு மகன்களும் ஐ.டி., துறையில் பணிபுரிகின்றனர். என் கணவரும் உயர் பதவியில் இருந்தவர், சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
இரு மகன்களிடமும், அவரவர் சம்பளத்தை வங்கியில் முதலீடு செய்யுங்கள் என்று கூறிவிட்டோம்.
நானும் ஆரம்பத்தில், பெரிய நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருந்தேன். திருமணமான பின், மாமியார் ஊருக்கு அருகில் இருந்த அலுவலகத்துக்கு தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவேன். முதல் பையன் பிறந்து ஒரு மாதம் தான் தாய் பால் கொடுத்தேன். என் மாமியாரிடம் என் குழந்தையை விட்டு, வேலைக்கு செல்வேன். மாலை வீடு திரும்பியதும், குழந்தைக்கு தாய் பால் கொடுக்க சென்றால், தடுத்து விடுவார், மாமியார்.
குழந்தைக்கு தாய் பால் முக்கியம் என்று அறிவுறுத்தியும், என்னை கொடுக்க விடாமல், அவனை தன் பராமரிப்பில் வைத்துக் கொண்டார்.
தற்சமயம், மாமியார் கைப்பாவையாக உள்ளான், மூத்த மகன். அவன், குழந்தையாக இருந்தபோது, தாய்ப்பால் கொடுக்க விடாததால், வெளியூர் வேலையை விட்டுவிட்டு, என் இரண்டாம் மகன் வயிற்றில் இருந்த சமயத்தில், சிறு சம்பளத்திற்கு உள்ளூரிலேயே வேலைக்கு சேர்ந்தேன்.
இரண்டாம் பையனுக்கு மட்டும் தான் நாங்கள் இருவரும் செல்லம் கொடுக்கிறோம் என்று மூத்தவன் மனதில் பதிய வைத்து விட்டார், மாமியார்.
இதை அவ்வப்போது எங்களிடமும், அவன் தம்பியிடமும் கூறி, தகராறு செய்கிறான், மூத்தவன்.
மூத்தவன் நல்ல சம்பளத்தில் வேலையில் உள்ளானே என்றும் பாராமல் அவ்வப்போது, பெரிய தொகையை கொடுப்பார், கணவர். நான், என்னால் முடிந்த சிறு தொகையை இருவருக்கும் கொடுப்பேன். இளையவன், 'எனக்கு எதற்கப்பா பணம், நான் தான் வேலை செய்து சம்பாதிக்கிறேனே...' என்று மறுத்து விடுவான். ஆனாலும், பேதம் பார்க்கக்கூடாது என்று இருவருக்கும் கொடுப்போம்.
மாமியார் படிக்காதவர். மாமனார், ஆசிரியர்; பண்போடு நடந்து கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன் அவரும் இறந்து விட்டார். அவருடைய ஓய்வூதியம், 30 ஆயிரம் ரூபாயை மாமியாரே வாங்கி, செலவு செய்கிறார். வட்டிக்கும் விடுகிறார். என் கணவரிடமும் பணம் வாங்கிக் கொள்கிறார்.
ஏதாவது அவசர தேவை என்று, மாமியாரிடம் கேட்டால், மற்றவரிடம் வாங்கி கொடுத்ததாக கூறி, கொடுப்பார். பிறகு மறக்காமல், வட்டியோடு பணத்தை திருப்பி வாங்கி கொள்கிறார்.
தற்சமயம் வெளியூரில் பணி புரிகிறான், மூத்தவன். மாமியாரிடம் தினமும் போனில் பேசி, அவர் கருத்தை கேட்டு, எதையும் முடிவு செய்கிறான். எங்களையும், தன் தம்பியையும் தவறாக எண்ணுகிறான். எங்களிடம் பணத்தை வாங்கி, தன் பாட்டிக்கு அதாவது என் மாமியாருக்கு செலவு செய்கிறான்.
நான் பணியிலிருந்து விலகி, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்போது என் கணவர், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகிவிட்டார்.
என் பெற்றோர் இருவரும் நல்ல பணியில் இருந்து, ஓய்வு பெற்றவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் ஒரு வார இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். இருவர் இறப்புக்கும் வரவில்லை, என் கணவர். அந்த மன வருத்தம் என் சகோதரர்களுக்கும், எனக்கும் உண்டு.
என் மைத்துனர்கள் உயர் பதவியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் என்னிடம் நன்றாக போனில் நலம் விசாரிப்பர். அது என் கணவருக்கு பிடிப்பதில்லை. தினமும் குடித்து விட்டு வந்து, அவர்களை போனில் அழைத்து, தகாத வார்த்தைகளை பேசி, நோக அடிக்கிறார்.
ஒரு சமயம், என் பிறந்த ஊரில் இருந்து என் உறவினர்கள் என் வீட்டுக்கு வந்திருந்தனர்.
நான் அவர்களை சந்தோஷத்துடன் நலம் விசாரித்தேன். அது என் கணவர் மற்றும் மாமியாருக்கு பிடிக்கவில்லை. கண்டபடி பேசினர்.
தினமும் குடித்துவிட்டு வந்து, இறந்த என் பெற்றோரையும், என்னையும் இழிவாக பேசி மனதை நோக வைக்கிறார், கணவர்.
என் மாமியாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தாலும், அவர் முழுமையான அன்பை என்னிடம் காட்டாமல், எதிரி போல் பார்க்கிறார்.
எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும், தன் மற்ற இரு மகன்கள் மற்றும் மருமகள்களிடம் தன் வெறுப்பை காண்பிக்க மாட்டார், என் மாமியார். மூத்த மருமகளான என் மீது எப்போதும் வெறுப்பை காட்டுகிறார்.
மூத்த மகன், என் அன்பை புரிந்து கொள்வானா? மாமியார் குணம் மாறுமா?
சரியான தீர்வை தங்களிடம் எதிர்பார்க்கிறேன், சகோதரி.
- இப்படிக்கு, உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு -
உங்களின் நீண்ட கடிதம், உங்களின் அடர்ந்த மனக்குழப்பத்தைக் காட்டுகிறது.
முழுமையாக மாமியாரின் மீது புகார்களை கொட்டித் தீர்த்துள்ளீர்கள். மூத்த மகனுக்கு உங்களை தாய்ப்பால் கொடுக்க விடாமல் மாமியார் தடுத்ததற்கு காரணம், மருமகளின் உடல் அழகு கெட்டு விடக்கூடாது. தவிர, கடுமையான பணி செய்யும் மருமகள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உடல் பலவீனமாகி விடக்கூடாது என்ற அக்கறையைத்தான் வன்முறையாக காட்டியுள்ளார், உங்கள் மாமியார்.
பொதுவாக மகன்கள் அம்மா கோண்டுவாய் இருப்பர். உன் மூத்த மகன் விதிவிலக்காய், அப்பா வழி பாட்டி கோண்டுவாய் இருக்கிறான்.
உங்கள் மாமியாருக்கு இப்போது, 80 வயதிருக்கும். இன்னும் எத்தனை காலம் உயிரோடு இருக்கப் போகிறார்? அவருடன் ஏன் தேவையில்லாத போட்டி?
ஒரு குழந்தை பிறக்கும் போது இருக்கும் குடும்பச்சூழல், பொருளாதார நிலை, குழந்தையின் ஆளுமை, குழந்தை நம்மிடம் காட்டும் பாசம் இவற்றை வைத்து ஒரு குழந்தைக்கும், இன்னொரு குழந்தைக்கும் இடையே நாம் காட்டும் பாசம் வேறுபடுகிறது.
அறுபது வயது கணவர் குடிக்கிறாரா? அவர் போக்கிலேயே விட்டு விடுங்கள். சேதாரம் அவருக்கே.
குடித்துவிட்டு உங்கள் கணவர் உங்கள் உறவினர்களுக்கு போன் செய்தால் போனை யாரும் எடுக்காதீர்கள் என, அறிவுறுத்துங்கள்.
குடித்துவிட்டு வந்து உங்கள் கணவர், இறந்த உன் பெற்றோரை அவதுாறு பேசினால், உன் இளைய மகனை விட்டு கண்டி.
உன் மாமியார், தன் மற்ற இரு மருமகள்களிடம் அன்பாய் நடந்து கொள்கிறார் என, நினைப்பது உன் கற்பனை. அந்த இரு மருமகள்களிடம் தனித்தனியாக கேட்டால், அவர்களும் மாமியாரை பற்றி குறை கூறுவர்.
திருமண வயதை உன்னிரு மகன்களும் தாண்டி விட்டனர். மாமியாருடன் மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டு, தகுந்த பெண்களை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து வை.
திருமணத்திற்கு பின், உன் இருமகன்களும் பெற்றோரின் பாசத்தை ஒப்பீடு செய்து பார்க்காமல், தங்களுக்கு இடையேயான பொருளாதார வெற்றிகளை ஒப்பீடு செய்ய ஆரம்பித்து விடுவர்.
காலம் எதையும் மாற்றும் வல்லமை படைத்தது.
- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

