PUBLISHED ON : மே 16, 2026

செங்கல்பட்டு மாவட்டம், எண்டத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 10ம் வகுப்பு படித்தேன். எனக்கு எப்போதுமே கணக்கு பாடம், மிகவும் கடினமாக இருந்தது. டியூஷன் வைத்துக் கொள்ள பொருளாதார நிலை இடம் தரவில்லை.
அப்போது, எங்கள் வகுப்பு கணித ஆசிரியராக இருந்தவர், கன்னியாகுமரி மாவட்டம், மாதவபுரத்தை சேர்ந்த, மூத்த நாடார். அவரின் தம்பி ரங்கநாதன், என் பள்ளி தோழன்; நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.
என்னுடைய குடும்ப நிலையை அறிந்து, எனக்கு டியூஷன் சொல்லித்தர அவன் அண்ணனிடம் பரிந்துரை செய்தான். அதன்படி கட்டணம் இல்லாமல், எனக்கு டியூஷன் சொல்லி கொடுத்தார், கணித ஆசிரியர்.
அவர் காலத்தே செய்த உதவியால், பள்ளி பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். அதைத் தொடர்ந்து, கூட்டுறவு பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றேன்.
தற்போது என் வயது, 64. கூட்டுறவு துறையில் இளநிலை உதவியாளர் நிலையிலிருந்து, உதவி இயக்குனர் வரை பதவி உயர்வு பெற்று, 2019ல் ஓய்வு பெற்றேன்.
என் வாழ்க்கை படிநிலை உயர்வதற்கு, ஏணியாக இருந்து உதவிய கணித ஆசிரியர் மூத்த நாடாருக்கும், என் நண்பன் ரங்கநாதனுக்கும் என்றென்றும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
- ச.குணசேகரன், சென்னை. தொடர்புக்கு: 98842 76983
