தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ் (344)

இளஸ் மனஸ் (344)

இளஸ் மனஸ் (344)


PUBLISHED ON : மார் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்ட்டி,

நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு ஒரு தங்கை; 8ம் வகுப்பு படிக்கிறாள். அம்மாவுக்கும், எங்களுக்கும் சாமி கும்பிட, பூஜை செய்ய பிடிக்கும்.

எனக்கு அப்பா வைத்த பெயர், இளமாறன். இந்த பெயர், எனக்கு பிடிக்கவே இல்லை. அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில், அம்மா என்னை, 'செந்தில்' என்று தான் கூப்பிடுவார். முருகக் கடவுளை, எனக்கு ரொம்ப பிடிக்கும்.

வீட்டில் சாமி படங்களை மாட்டி, பூ போட்டு விளக்கேற்ற விருப்பம். அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து, கோலம் போட்டு, 'டிவி'யில் பக்தி சேனல்களில் வரும் கந்தசஷ்டி கவசம், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் மற்றும் லட்சுமி அஷ்டோத்திரம் எல்லாம் கேட்டபடியே சமையல் வேலையை செய்ய வேண்டும் என்பது, அம்மாவின் ஆசை.

ஆனால், எதையும் செய்ய விட மாட்டார், எங்கள் அப்பா. சாமி படங்களை வீட்டுக்குள் அனுமதிக்கவே மாட்டார். அம்மா, தங்கை இருவரும் தலையில் பூ வைக்க கூடாது; பொட்டு வைத்துக் கொள்ள கூடாது; கைகளில் வளையல் போடக் கூடாது.

பண்டிகை நாட்களில் கை நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டு, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து, நெற்றியில் குங்குமப் பொட்டும், மேலே சிறிதாக விபூதியும் வைக்க, அம்மா விருப்பப்படுவார்.

நவராத்திரி வந்து விட்டால், அம்மா முகம் ஜொலிக்கும். ஆடி கிருத்திகை, தை கிருத்திகை மற்றும் பிரதோஷ பூஜைகளை செய்வதில் விருப்பம். புரட்டாசி வந்தால் அசைவம் சமைக்கக் கூடாது என்றிருப்பார், அம்மா.

ஆனால், அந்த விசேஷ நாட்களில் தான் சிக்கன், மட்டன், மீன், இறால் என்றெல்லாம் வாங்கி வந்து, அம்மாவை சமைக்க வைப்பார், அப்பா.

அம்மா மறுத்தால், 'நான் கடவுள் மறுப்பாளன்; முற்போக்கு வாதி. உன் முட்டாள்தனத்தை எல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது...' என, மூர்க்கமாக பேசுவார்.

அப்பாவின் இந்த போக்கை மாற்ற முடியுமா... அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும், ஆன்ட்டி.

- இப்படிக்கு,

வி.இளமாறன்.



அன்பு செந்திலுக்கு,

நானும் உன்னை செந்தில் என்றே அழைக்கிறேன். உன் அப்பாவை ஏன் மாற்ற முடியாது, செந்தில்...

அப்பனுக்கு பாடம் சொன்னவரது பெயரைத் தானே, உன் அம்மா உனக்கு வைத்திருக்கிறார். நீயும், உன் அப்பாவுக்கு பாடம் கற்றுக் கொடு. அந்த முருகப் பெருமானை போல் அமைதியாய், நிதானமாய்...

இப்படி எடுத்து சொல்லேன்...

'அப்பா, உங்களை முற்போக்குவாதி என சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால், மிகவும் பிற்போக்குவாதியாக இருக்கிறீர்களே...' என, ஆரம்பி.

இதை கேட்டதும், முதலில் திடுக்கிட்டு போவார். பயப்படாமல், மேலே அமைதியாக தொடர்ந்து பேசு...

'தனி மனித சுதந்திரத்தை நீங்கள் மதிப்பதே இல்லையேப்பா. எங்கள் எண்ணங்களையும், ஆசைகளையும் பொருட்படுத்துவது இல்லையே... பகுத்தறிவுவாதி என சொல்லிக் கொள்கிறீர்கள்; ஆனால், அம்மாவை, நீங்கள் ஒரு அடிமை மாதிரி நடத்துகிறீர்கள். பெண்ணை அடிமைப்படுத்துவதற்கு பெயர் பகுத்தறிவா, அப்பா...

'லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, முருகன், ராமன், கிருஷ்ணன், சிவன், பார்வதி என்றெல்லாம் வழிபடுவது பிடிக்கவில்லை என்றால், லட்சுமியை செல்வமாக பாருங்கள்... சரஸ்வதியின் கையில் வீணையும், புத்தகமும் வைத்திருப்பது, கல்வி மற்றும் கலையை உருவகப்படுத்தி தான்; அதனால், சரஸ்வதியை கல்வி, கலை என்றே பாருங்கள்...

'துர்க்கையை வீரத்துக்கு அடையாளமாக பாருங்கள். முருகன் என்ற சொல்லுக்கு அழகு என்றே அர்த்தம். ஆகவே, முருகனை அழகு என்று கொள்ளுங்கள். அதுபோலவே, ராமனை நேர்மையாகவும், கிருஷ்ணனை புத்திக்கூர்மை எனவும், சிவனை செயலாகவும், பார்வதியை சக்தியாகவும் பாருங்கள், அப்பா...

'ஒவ்வொரு தத்துவத்திற்கும் உருவம் கொடுக்கப்பட்டதன் காரணம், நம் சிந்தையும், செயலும் அவற்றின் மீது குவிய வேண்டும் என்பதற்காக. அப்படி குவிய வேண்டுமானால், அதற்கு தனியானதோர் இடம் வேண்டும். அப்படிப்பட்ட தனி இடங்கள் தான் கோவில்கள்...

'எல்லா இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், ஒட்டுமொத்த சக்தியும் பிரதிபலிக்கும் இடம், கோவில் தான். இதன் அடிப்படையில் தான் வீடுகளிலும், குறிப்பிட்ட இடத்தில் சாமி படங்களை வைத்து வணங்குவதும்...

'இதெல்லாம், நான் படித்த புத்தகங்களிலிருந்து கற்றுக் கொண்டது தான். இது, உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும், எங்கள் மீது உங்கள் எண்ணத்தை திணிக்கலாமா, அப்பா...' எனக் கேள்.

நீ விரும்பி வணங்கும் சரஸ்வதியும், முருகனும் உனக்கு துணையாக நிற்பர். உடனடியாக இல்லாவிட்டாலும், நாளடைவில் நிச்சயம் மாறுவார், உன் அப்பா. நம்பிக்கையுடன் இரு.

- பிரியமுடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us