/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
5 வீடுகள் வாங்கிய லஞ்ச அதிகாரிக்கு வருகிறது ' ஆப்பு! '
/
5 வீடுகள் வாங்கிய லஞ்ச அதிகாரிக்கு வருகிறது ' ஆப்பு! '
5 வீடுகள் வாங்கிய லஞ்ச அதிகாரிக்கு வருகிறது ' ஆப்பு! '
5 வீடுகள் வாங்கிய லஞ்ச அதிகாரிக்கு வருகிறது ' ஆப்பு! '
PUBLISHED ON : செப் 03, 2025 12:00 AM

''கு ற்றத்தை கண்டுபிடிச்சவரை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க வே...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோவில் செயல் அலுவலரா இருந்தவங்க ஜெயப்பிரியா... இவங்க, கோவில் ஊழியர்களுக்கான பி.எப்., தொகையை, பி.எப்., அலுவலகத்துல செலுத்த, எழுத்தர் வழியா தனியார் ஏஜன்சிக்கு, 'செக்' குடுத்து விட்டாங்க வே...
''ஆனா, செக்கை எழுத்தர் அமுக்கிட்டாரு... இது சம்பந்தமா, போலீஸ்ல ஜெயப்பி ரியா புகார் குடுத்துட்டாங்க... சம்பந்தப்பட்ட எழுத்தர், உயர் அதிகாரியிடம் போய் தஞ்சம் புகுந்துட்டாரு வே...
''இதனால, செயல் அலுவலர் ஜெயப்பிரியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவங்களை இணை ஆணையர் சஸ்பெண்ட் பண்ணிட்டாரு... எழுத்தரோ, காலரை துாக்கி விட்டுட்டு சுத்துதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''குறை கேட்பு கூட்டம் பத்தியே குறை சொல்றா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''பத்திரப்பதிவு துறையில், மாவட்ட பதிவாளர் துவங்கி அலுவலக உதவியாளர் வரை பல்வேறு நிலைகளில் சங்கங்கள் இருக்கு... வருஷத்துக்கு ஒருமுறை இந்த சங்கங்களை கூப்பிட்டு, குறைகள் கேக்கறது வழக்கம் ஓய்...
''சமீபத்துல, இந்த குறை கேட்பு கூட்டத்துக்கு பதிவுத்துறை ஐ.ஜி., அழைப்பு விடுத்தார்... இதில், எட்டு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துண்டா ஓய்...
''கூட்டம் துவங்கியதுமே, 'இரண்டு கூடுதல் ஐ.ஜி.,க்கள் உங்க குறைகளை கேட்பா'ன்னு சொல்லிண்டு, ஐ.ஜி., எழுந்து வெளி யே போயிட்டார்... அப்பறமா நடந்த கூட்டத்துல, நிர்வாகிகளிடம் குறைகள் கேக்கறதுல, ஐ.ஜி.,க்கள் ஆர்வம் காட்டல... இதனால, 'கண்துடைப்புக்கு கூட்டம் நடத்தறா'ன்னு சங்க நிர்வாகிகள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மத்திய அரசு திட்டத்துல, மானாவாரியா முறைகேடு பண்ணியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''திருநெல்வேலி மாநகராட்சியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி துவங்கி, இப்ப நடக்கிற தி.மு.க., ஆட்சி வரையிலும் மத்திய அரசின், 1,000 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் நடந்துச்சு... இதுல, 200 கோடி ரூபாய்க்கு மேல ஊழல் நடந்திருக்கு...
''இதனால, 2019 முதல் 2024 வரை நடந்த பணிகள் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினாங்க... விசாரணை துவங்கியதுமே பல அதிகாரிகள் வி.ஆர்.எஸ்., வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டாங்க...
''விசாரணையில், கோடிக்கணக்குல சொத்துகள் வாங்கி குவிச்ச மாநகராட்சியின் ரெண்டு உதவி இன்ஜினியர்கள் மீது வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க... மூணாவதா ஒரு அதிகாரி, திருநெல்வேலி மாநகராட்சி ஏரியாவுல மட்டும் அஞ்சு வீடுகளை வாங்கி போட்டிருக்காருங்க...
''அவர் வாங்கிய நகைகள், வாகனங்கள் பட்டியலையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தயார் பண்ணிட்டு இருக்காங்க... அவர் மற்றும் அவரது பிரியமான மனைவி மீதும் சீக்கிரமே வழக்கு பாயும்னு சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''இந்த மாதிரி ஊழல் அதிகாரிகளிடம் இருந்து நம்ம மக்களை, அந்த ராமன் தான் காப்பாத்தணும் வே...'' என்ற படியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.