லஞ்ச ஒழிப்பு சோதனையில் தப்பிய சார் - பதிவாளர்கள்!
லஞ்ச ஒழிப்பு சோதனையில் தப்பிய சார் - பதிவாளர்கள்!
PUBLISHED ON : ஜூன் 13, 2026 12:10 AM

நாளிதழை மடித்தபடியே, “இந்த ஆட்சியிலாவது, மதுக்கடையை மூடுவாளான்னு எதிர்பார்க்கறா ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த ஊருலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கத்தில், 'டாஸ்மாக்' மதுபான கடை இருக்கு... இந்த கடைக்கு பின்புறம், 40,000க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கா ஓய்...
“கடைக்கு, 40 மீட்டர் துாரத்துல துலுக்கானத்தம்மன் கோவில், எதிர்ல பெருமாள் கோவில், 100 மீட்டர்ல தனியார் மெட்ரிக் பள்ளி எல்லாம் இருக்கு... மது வாங்கறவா, கோவில் பக்கத்துல இருக்கற குளக்கரையில் உட்கார்ந்து குடிக்கறா ஓய்...
“கோவிலுக்கு வர்ற பெண்கள், பள்ளிக்கு வர்ற மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவறது... மது வாங்க வரவா நிறுத்தற வாகனங்களால, கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படறது ஓய்...
“இதுல என்ன வேடிக்கைன்னா, முதல்வர் விஜய், இந்த வழியா தான் அவரது நீலாங்கரை வீட்டுக்கு தினமும் போயிட்டு வரார்... இந்த, 'மதுபான கடையை மூடணும்'னு முதல்வர், மதுவிலக்கு துறை அமைச்சர், உள்துறை செயலருக்கு எல்லாம் கொட்டிவாக்கம் இளைஞர் சங்கம் சார்பில் மனு அனுப்பியிருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“எந்த விபரமும் தெரியாம அல்லாடுதாங்கல்லா...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“யாரை சொல்றீங்க பா...” என விசாரித்தார் அன்வர்பாய்.
“மதுரை மாவட்டத்தில் இருக்கும் 10 தொகுதிகள்ல, தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் எட்டு இடங்கள்ல ஜெயிச்சிருக்காவ... இவங்கள்ல ஒரு சிலரை தவிர, மத்தவங்க எல்லாம் அரசியலுக்கே புதுசு வே...
“அவங்களுக்கு எந்த விபரமும் தெரியல... எல்லா பிரச்னைகளுக்கும் கலெக்டர் அலுவலகத்துல தீர்வு கிடைக்கும்னு நம்பி, தினமும் அங்க படையெடுத்து போய், 'அதை செய்யுங்க, இதை செய்யுங்க'ன்னு அதிகாரிகளுக்கு உத்தரவு போடுதாவ வே...
“மாநகராட்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு கூட, கலெக்டர் அலுவலகத்துல முறையிடுதாவ... அங்கிருக்கும் அதிகாரிகள், 'இது மாநகராட்சி விவகாரம்... அங்க போய் கமிஷனரை பாருங்க'ன்னு அனுப்பிடுதாவ... 'த.வெ.க.,வினருக்கு புரிய வைக்கிறதுக்குள்ள எங்களுக்கு தொண்டை தண்ணி வத்திடும்'னு அதிகாரிகள் புலம்புதாவ வே...” என்றார் அண்ணாச்சி.
“அதிரடி சோதனையில தப்பிச்சுட்டாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“சார் - பதிவாளர் அலுவலகங்கள்ல லஞ்சம் அதிகமா புழங்குமே... இதனால, அடிக்கடி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்துவாங்க...
“இப்ப ஆட்சி மாற்றம் நடந்திருக்கிற சூழல்ல, போன வாரம் தமிழகம் முழுக்க 46 சார் - பதிவாளர் அலுவலகங்கள்ல, லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினாங்க... இதுல கணக்கில் வராத, 38 லட்சம் ரூபாயை பறிமுதல் செஞ்சாங்க...
“அதே நேரம், குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 12 சார் - பதிவாளர்கள், இந்த சோதனைக்கு முன்னாடி அலுவலகத்தை விட்டு வெளியில போயிட்டாங்க...
''இதனால, 'ரெய்டு பத்தி அவங்களுக்கு முன்கூட்டியே தெரிஞ்சிருக்கு... அதான் சத்தம் காட்டாம நழுவிட்டாங்க'ன்னு பதிவுத்துறை ஊழியர்கள் புலம்புறாங்க... அதே நேரம், மற்ற சார் - பதிவாளர்கள் எல்லாம் லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை வளையத்துல சிக்கிட்டு முழிக்கிறாங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
