அமைச்சர் ஆபீசில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சி பிரமுகர்!
அமைச்சர் ஆபீசில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சி பிரமுகர்!
PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:05 AM

கருப்பட்டி காபிக்கு ஆர்டர் தந்த பெரியசாமி அண்ணாச்சி, “முன்னாள் அதிகாரியின் ஆதிக்கம் இன்னும் இருக்குல்லா...” என பேச்சை ஆரம்பித்தார்.
“எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முதல்வர் விஜய் கையில் தான் இருக்கு... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியை, 'கலந்தாலோசகர்' என்ற பெயர்ல அப்பவே பணி நியமனம் செஞ்சாவ வே...
“இப்பவும் அந்த பதவியில் நீடிக்கிறவர், நகராட்சி மற்றும் மாநகராட்சி டெண்டர்கள், கமிஷன், டிரான்ஸ்பர், பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை கவனிக்காரு... இதனால, மற்ற அதிகாரிகள் செயல்பட முடியாம தவிக்காவ வே...
“நகராட்சி நிர்வாக துறை மட்டுமில்லாம, மற்ற எல்லா துறைகள்லயும் இந்த மாதிரி, 'ஆலோசகர்' என்ற பெயர்ல நிறைய பேர் இருக்காவ... 'இவங்களை எல்லாம் களை எடுத்தால் தான், ஊழலற்ற நிர்வாகம் என்ற முதல்வர் விஜயின் கனவு நனவாகும்'னு நேர்மையான அதிகாரிகள் எல்லாம் சொல்லுதாவ வே...” என்றார் அண்ணாச்சி.
“ஸ்ரீதர், இப்படி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “பழைய அதிகாரி மீது புகார் வந்திருக்குதுங்க...” என்றார்.
“யாருவே அது...” என கேட்டார் அண்ணாச்சி.
“தமிழக அரசின் செய்தி துறையில், அரசு விளம்பரங்களை கவனிக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி, தேர்தலுக்கு முன்னாடி ஓய்வு பெற இருந்தாரு... அப்போதைய முதல்வரின் உதவியாளரை, 'கவனிச்சு' பணி நீட்டிப்பு வாங்கிட்டாருங்க...
“தேர்தல்லயும், தி.மு.க.,வுக்கு ஆதரவா தீயா வேலை பார்த்தாரு... ஆட்சி மாறிட்ட சூழல்ல, சத்தம் காட்டாம பணியில் இருந்து விலகிட்டாரு... அவர் இடத்துக்கு புதிய அதிகாரியும் வந்துட்டாருங்க...
“தேர்தல் சமயத்தில், தி.மு.க., அரசின் சாதனைகள் பத்தி நிறைய விளம்பரங்களை குடுத்தாங்க... இதுக்கான பல கோடி ரூபாயை விளம்பர நிறுவனங்களுக்கு வழங்காம, அதிகாரி, 'அபேஸ்' பண்ணிட்டதா புகார் எழுந்திருக்குது... இது சம்பந்தமா விசாரணை நடத்த, துறையின் முக்கிய புள்ளி உத்தரவு போட்டிருக்காருங்க...” என்றார் அந்தோணிசாமி.
“செல்வராஜ், இதையும் கேட்டுட்டு கிளம்பும் ஓய்...” என்ற குப்பண்ணாவே, “அமைச்சருடன் ஒட்டிண்டு திரியறார் ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
''சட்டசபை தேர்தல்ல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க., வேட்பாளர் தோற்று போயிட்டாரு... ஆனா, முக்கியமான துறையின் அமைச்சர் கூடவே ஒட்டிண்டார் ஓய்...
“தினமும் கார்த்தால, 'பள்ளி'க்கு போற மாணவன் மாதிரி கோட்டையில் இருக்கும் அமைச்சர் அறையில் ஆஜராகிடறார்... அமைச்சரை பார்க்க வரவாளை அலட்சியப்படுத்தறது, முக்கியமான ஆலோசனை கூட்டங்கள்ல வந்து உட்கார்ந்துக்கறதுமா இருக்கார் ஓய்...
“அமைச்சர் எங்க கிளம்பினாலும், முதல் ஆளா அவரது கார்ல போய் ஏறிக்கறார்... 'இவரால உங்களுக்கு தான் கெட்ட பெயர் வரும்'னு அமைச்சரிடமே சிலர் சொல்லிட்டா... ஆனாலும், கட்சிக்காரரா இருக்கறதால, அவரை எப்படி தள்ளிவைக்கறதுன்னு தெரியாம அமைச்சர் தவிக்கறார் ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
“ஜெகதீச பாண்டியன், நாளைக்கு பார்க்கலாம் பா...” என நண்பரிடம் அன்வர்பாய் விடைபெற, மற்றவர்களும் கிளம்பினர்.
