PUBLISHED ON : ஜூன் 04, 2026 12:09 AM

“எம். எல்.ஏ., அடாவடியை கேளுங்கோ ஓய்...” என்றபடியே பெஞ்ச் விவாதத்தை துவக்கிய குப்பண்ணா தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாவட்டத்துல ஜெயிச்சிருக்கற, தமிழக வெற்றிக் கழக - எம்.எல்.ஏ.,வின் ஆட்டம் நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிண்டே போறது... தேர்தலுக்கு முன்னாடி, மாவட்டம் முழுக்க, 'ஆன்லைன்' லாட்டரி தொழில் நடத்திண்டு இருந்தவர், இப்ப தன் ஆதரவாளரிடம் அதை கைமாத்தி விட்டிருக்கார் ஓய்...
“அமைச்சர் கனவுல இருந்தவருக்கு பதவி கிடைக்காம போயிட்டாலும், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்களுக்கு அடிக்கடி போய் அமைச்சர் மாதிரி ஆய்வு நடத்தறார்...
''கூடவே, 10 பேரை கூட்டிண்டு போறவர், தன் ஆய்வுகளை மொபைல் போன்ல வீடியோ எடுத்து சமூக வலைதளங்கள்ல பரப்ப சொல்றார் ஓய்...
“சமீபத்துல, இப்படி ஆய்வுக்கு போன இடத்துல, எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர் ஒருத்தர், தாலுகா அதிகாரியை ஒருமையில் பேசி பெரிய பிரச்னையாகிடுத்து... 'இவரை கட்சி தலைமை தட்டி வைக்கணும்'னு அரசு அதிகாரிகள் எல்லாம் புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“வாரும் சரவணன்... ஸ்ரீவைகுண்டம் போயிட்டு எப்ப வந்தீரு...” என நண்பரிடம் நலம் விசாரித்த பெரியசாமி அண்ணாச்சியே, ''அரசு உத்தரவை கண்டுக்கவே இல்லை வே...” என்றார்.
“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தி.மு.க., ஆட்சியில ஏராளமான திட்ட பணிகளுக்கு டெண்டர் விட்டாவ... 'அடுத்தும் நாங்க தான் ஆட்சிக்கு வருவோம்'னு சொல்லி, அதுக்கான கமிஷனையும் ஒப்பந்ததாரர்களிடம் வாங்கிட்டாவ வே...
“இதுக்கு, அந்தந்த துறையின் அதிகாரிகளும் உடந்தை... ஆனா, தேர்தல் முடிவு தலைகீழா மாறிட்டுல்லா... த.வெ.க., அரசு வந்ததும், கடைசி மூணு மாசத்துல வெளியிட்ட டெண்டர்களை ரத்து பண்ண உத்தரவு போட்டுச்சு வே...
“இதன்படி, பல துறைகள்ல டெண்டர்களை ரத்து பண்ணிட்டாவ... ஆனா, பல பொதுத்துறை நிறுவனங்கள் சார்புல விட்ட டெண்டர்களை ரத்து பண்ணல...
''அதுலயும் தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் சிலர், இப்பவும் முன்தேதியிட்டு டெண்டர்களை குடுத்திட்டு இருக்காவ வே...” என முடித்தார் அண்ணாச்சி.
''அ.தி.மு.க., பெண் பிரமுகரின் அடாவடியால், குடியிருப்புவாசிகள் தவிக்கிறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அன்வர்பாய்.
''விபரமா சொல்லும் ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.
''சென்னை, மடிப்பாக்கத்தில் பிரபல பள்ளியின் அருகே குடியிருந்த, அ.தி.மு.க., பெண் பிரமுகர், அக்கம்பக்கத்துல இருந்தவாளோட தகராறு செஞ்சு, கீழ்க்கட்டளையில, இன்னொரு பள்ளி உள்ள பகுதியில், பழைய வீட்டை வாங்கி குடியேறி இருக்காங்க பா...
''அங்கேயும், அனைத்து குடியிருப்புக்கும் பொதுவான பகுதி, சாலையோரம்ன்னு ஆக்கிரமிச்சு, ஒரே அடாவடி...
''ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொது இடத்தை வாகன நிறுத்தத்துக்கு ஒதுக்கிக் கொடுங்கோன்னு போலீஸ் அட்வைஸ் செஞ்ச பின்னும், 'என்னை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது'ங்கறாங்க பா...
''இப்ப அந்த அ.தி.மு.க., பெண் பிரமுகர், கட்சி மாற, ஆளுங்கட்சிக்கு துாது விட்டுட்டு இருக்காங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.
''வேதகுமாரி மேடம்... அப்புறமா பேசுதேன்...'' என, தனக்கு வந்த தொலைபேசி இணைப்பை துண்டித்தபடியே அண்ணாச்சி எழ, பெஞ்ச் காலியானது.
