/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கனிமவள கடத்தல் வாகனங்களிடம் அதிகாரி கறார் வசூல்!
/
கனிமவள கடத்தல் வாகனங்களிடம் அதிகாரி கறார் வசூல்!
PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''ஈரோடு பக்கமே எட்டி பார்க்காம போயிட்டாருல்லா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே சிறிய கைத்தறி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட, கைத்தறி துறை அமைச்சர் காந்தி சமீபத்துல வந்தாரு... பொதுவா இப்படி வர்றவங்க, மாநில அளவில் அதிகமா இலவச வேட்டி, சேலை உற்பத்தி நடக்கும் ஈரோடு பகுதியில் ஆய்வு செய்வாவ வே...
''அங்க இருக்கிற நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நெசவாளர்களை சந்திச்சு குறை கேட்டுட்டு போவாவ... ஆனா, நடப்பாண்டு ஆர்டர்ல இலவச வேட்டிகள்ல, 47 லட்சத்தையும், இலவச சேலைகள்ல, 77 லட்சத்தையும் அரசு குறைச்சிட்டு வே...
''அதுவும் இல்லாம, இந்த பணிகளுக்கு ரெண்டு மாசத்துக்கு மேலா கூலியும் ஒதுக்கல... நெசவாளர்களிடம் குறைகள் கேட்டா, இது பத்தி எல்லாம் கேள்வி கேட்டு கிடுக்கிப்பிடி போடுவாங்கன்னு நினைச்ச அமைச்சர், ஈரோடு பக்கமே தலைகாட்டாம போயிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''மக்கள் எக்கேடு கெட்டா என்னன்னு நினைச்சுட்டாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சென்னை பிராட்வே - கொசப்பூர் வரை ஓடிட்டு இருந்த, '64டி' மாநகர பேருந்தை, சமீபத்துல தீயம்பாக்கம் வரை நீட்டிச்சாங்க... இதை, தீயம்பாக்கம் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றாங்க பா...
''இந்த நிகழ்ச்சியில், உள்ளூர் தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்க... ஆனா, மறுநாளே தீயம்பாக்கத்துக்கு பஸ் வரல... விசாரிச்சா, தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., உத்தரவுப் படி நிறுத்திட்டதா தகவல் கிடைச்சது பா...
''அதாவது, பஸ் நீட்டிப்பு விழாவுக்கு வந்து, கொடியசைத்து துவக்கி வைக்கும்படி எம்.எல்.ஏ.,வை அதிகாரிகள் அழைக்கல... அந்த கோபத்துல தான் பஸ் நீட்டிப்பை எம்.எல்.ஏ., ரத்து பண்ணிட்டாரு... அதுவும் இல்லாம, தன்னை அழைக்காத டிப்போ அதிகாரியையும் அங்க இருந்து துாக்கி அடிச்சிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''சுதர்சனம், இந்த பேப்பரை அங்க வையும்...'' என்ற குப்பண்ணாவே, ''கறாரா வசூல் நடத்தறார் ஓய்...” என்றார்.
''யாருவே அது...'' என கேட்டார், அண்ணாச்சி.
''கோவை, மதுக்கரை தாலுகாவுல ஒரு அதிகாரி இருக்கார்... இவர், கேரளாவுக்கு கனிமவளம் கடத்திட்டு போகும் வாகனங்களை மறிச்சு, கணிசமான தொகையை கறாரா கறந்துடறார் ஓய்...
''அதே நேரம், மாநிலம் முழுக்க கனிம வளங்களை கட்டுப்பாட்டுல வச்சிருக்கற புதுக்கோட்டை தரப்பு, தங்களுக்கு கப்பம் கட்டாத வாகனங்கள் குறித்து, அதிகாரியிடம் தகவல் சொல்லிடறா... அந்த வாகனங்களை அதிகாரி குறிவச்சு பிடிச்சு, அபராதம் தீட்டிடறார் ஓய்...
“அதுவும் இல்லாம, பட்டா பெயர் மாற்றத்துக்கு மலைக்க வைக்கும் தொகையை லஞ்சமா கேக்கறார்... இத்தனைக்கும், சிறந்த பணிக்கான அரசின் விருதை இந்த அதிகாரி வாங்கியிருக்கார்... 'இவரை எப்படா மாத்துவா'ன்னு இவரது அலுவலக ஊழியர்களே எதிர்பார்த்துண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''வேல்முருகன் வரார்... சுக்கு காபி குடும் நாயரே...'' என்ற படியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.