தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அமைச்சர் அலுவலகத்தை சுத்தி வரும் ஒப்பந்ததாரர்கள்!

 அமைச்சர் அலுவலகத்தை சுத்தி வரும் ஒப்பந்ததாரர்கள்!

 அமைச்சர் அலுவலகத்தை சுத்தி வரும் ஒப்பந்ததாரர்கள்!

4


PUBLISHED ON : ஜூன் 11, 2026 12:15 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2026 12:15 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏலக்காய் டீக்கு ஆர்டர் தந்தபடியே, “கட்சியினரை மிரட்டி வச்சிருக்காரு பா...” என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய். “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“சிவகங்கை மாவட்ட தி.மு.க., செயலராகவும், அமைச்சராகவும் இருந்த பெரியகருப்பனே, காரைக்குடி தொகுதிக்குள்ள போகணும்னா, அவரது கட்சியின், 'மாஜி' அமைச்சரிடம் கேட்டுட்டு தான் போகணும்... அந்த அளவுக்கு, தொகுதியை தன் கட்டுப்பாட்டுல, 'மாஜி' வச்சிருக்காரு பா...

“தொகுதியில யாருக்கு, 'டெண்டர்' தரணும், யாருக்கு கட்சி பதவி தரணும்னு அவர்தான் முடிவு பண்ணிட்டு இருந்தாரு... இது சம்பந்தமா, பெரியகருப்பனிடம் கட்சியினர் கேட்டாலும், 'அண்ணன்கிட்டயே பேசிக்கிடுங்க'ன்னு நழுவிடுவாரு பா...

“சட்டசபை தேர்தல் தோல்வி சம்பந்தமா, தி.மு.க., தலைமை அமைச்சிருந்த குழு, தொகுதி வாரியா கருத்து கேட்டுச்சே... 'இந்த குழுவிடம், காரைக்குடி தொகுதி தோல்விக்கு என் மீதோ, என் ஆதரவாளர்கள் மீதோ யாரும் குறை சொன்னா, பின் விளைவுகள் மோசமா இருக்கும்'னு கட்சியினரை மாஜி மிரட்டி வச்சுட்டாராம்... இதனால, குழுவிடம் யாரும் வாயை திறக்கல பா...” என்றார் அன்வர்பாய்.

“தென்னவன், தள்ளி உட்காரும்...” என்ற குப்பண்ணாவே, “தடையில்லா சான்று வழங்க லஞ்சம் கேக்கறா ஓய்...” என்றார்.

“எந்த துறையில வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

“தமிழகத்தில் விவசாய நிலங்களை, வீட்டு மனைகள் அல்லது வணிக மனைகளா மாத்தணும்னா, வேளாண் துறையிடம் தடையில்லா சான்று வாங்கணும்... விதிப்படி, விவசாயம் செய்யவே முடியாத தரிசு நிலங்களுக்கு மட்டுமே இந்த சான்றிதழ்களை தரணும் ஓய்...

“இந்த சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரத்தை, அந்தந்த மாவட்டங்கள்ல இருக்கற வேளாண் இணை இயக்குநர்களுக்கு குடுத்திருக்கா... இவா, நல்லபடியா விவசாயம் நடக்கற நிலங்களுக்கு கூட தடையில்லா சான்று வழங்கிடறா ஓய்...

“இதுக்காக, அவாளுக்கு பெரிய தொகை கைமாறுது... இப்படியே போனா, விவசாய நிலங்களின் பரப்பளவு குறைஞ்சு, உணவு தானி யங்களுக்கு தட்டுப்பாடு வந்துடும் ஓய்...

“அதனால, 'இந்த சான்றிதழ் வழங்க, மாவட்ட வாரியா தனி குழு அமைக்கணும்... அதுல வேளாண், தோட்டக்கலைத் துறையின் கள அலுவலர்களை சேர்க்கணும்'னு விவசாயிகள் எல்லாம் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“அமைச்சர் அலுவலகத்தை சுத்தி சுத்தி வர்றாவ வே...” என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“துாத்துக்குடியில் இருக்கிற தமிழக அரசின் அனல் மின் நிலையத்தை கட்டி, 35 வருஷங்களாயிட்டுல்லா... இதனால, அடிக்கடி பழுது பார்க்க வேண்டியிருக்கு வே...

“கடந்த அஞ்சு வருஷ தி.மு.க., ஆட்சி யில் பராமரிப்புன்னு சொல்லி, பல நுாறு கோடி ரூபாயை காலி பண்ணிட்டாவ... அப்ப இருந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உதவி யோடு, 'டெண்டர்' எடுத்த ஒப்பந்ததாரர்கள் பராமரிப்பு பணிகளை சரியா செய்யாமலேயே பல கோடி ரூபாயை சம்பாதிச்சிருக்காவ வே...

“அதேபோல, அனல் மின் நிலையத்துக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செஞ்சதிலும் நிறைய முறைகேடுகள் நடந்திருக்கு... இது சம்பந்தமா, தமிழக அரசு விசாரணை நடத்தினா, அஞ்சு வருஷமா ஒப்பந்தங்கள் எடுத்தவங்க மாட்டிக்கிடுவாவ...

“இதனால, அதுல இருந்து தப்பிக்க, இவங்க எல்லாம் சென்னை தலைமை செயலகத்தில் இருக்கும் மின் துறை அமைச்சரின் அலுவலகத்தை சுத்தி சுத்தி வர்றாவ வே...” என முடித்தார் அண்ணாச்சி.

பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us