/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கட்சி பிரமுகரை அவமானப்படுத்திய அ.தி.மு.க. , நிர்வாகி!
/
கட்சி பிரமுகரை அவமானப்படுத்திய அ.தி.மு.க. , நிர்வாகி!
கட்சி பிரமுகரை அவமானப்படுத்திய அ.தி.மு.க. , நிர்வாகி!
கட்சி பிரமுகரை அவமானப்படுத்திய அ.தி.மு.க. , நிர்வாகி!
PUBLISHED ON : செப் 13, 2025 12:00 AM

இ ஞ்சி டீக்கு, ஆர்டர் தந்தபடியே, ''எல்லாரையும் தேடி போய் வாழ்த்து வாங்கியிருக்காருங்க...'' என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக போலீஸ் துறையின் பொறுப்பு டி.ஜி.பி.,யா, சமீபத்துல வெங்கட்ராமன் என்பவரை நியமிச்சாங்களே... இவர் பொறுப்பேற்ற நிகழ்ச்சியை, புதிய டி.ஜி.பி.,யாக தகுதியுள்ள சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் புறக்கணிச்சுட்டாங்க...
''ஆனாலும், அதை பொருட்படுத்தாத வெங்கட்ராமன், அந்த சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, அவரே தேடி போய் பார்த்து வாழ்த்து வாங்கியிருக்காருங்க... இதனால, அவங்க எல்லாம் நெகிழ்ந்து போயிட்டாங்க...
''அதுவும் இல்லாம, போலீசாரின், 'வாட்ஸாப்' குழுக்கள்ல, 'டிஸ்பிளே' படமா தன் படத்தை வைக்க வேண்டாம்னும் வெங்கட்ராமன் அன்பு கட்டளை போட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதிகாரிகளை வலம் வந்து, விரும்பிய இடங்களை வாங்கிண்டுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழக வனத்துறையில், துணை வன பாதுகாவலரா பணியாற்றிய, 10 பேருக்கு சமீபத்தில், ஐ.எப்.எஸ்., அதிகாரியா பதவி உயர்வு குடுத்தா... இதுல பலர், வனத்துறையில் தங்களுக்கு வேண்டிய உயர் அதிகாரிகளை பார்த்து, 'கவனிப்பு'களை செய்து, 'பசை'யான இடங்களை கேட்டிருக்கா ஓய்...
''சில அதிகாரிகள், 'அமைச்சரை போய் பாருங்கோ... காரியம் பட்டுன்னு முடிஞ்சிடும்'னு தட்டி கழிச்சிருக்கா... ஆனா, 'அமைச்சரை பார்க்கறதை விட, உங்கள மாதிரி அதிகாரிகள் தயவு இருந்தா தான் காரியம் முடியும் சார்'னு ஐஸ் வச்சு, விரும்பிய இடங்களை பலரும் வாங்கிண்டுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பதவி கேட்டு போனவரை, ஜாதி ரீதியா கொச்சைப்படுத்தி பேசிட்டாரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி, மேல்புறம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., - ஐ.டி., அணி செயலரா இருக்கிறவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்த சஜித்... இவர், கல்லுாரி படிக்கிறப்பவே, கட்சி பணிகள்ல ஈடுபட்டிருக்காரு வே...
''சமீபத்துல, புதுசா நியமிக்கப்பட்டிருக்கும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., முக்கிய புள்ளியை பார்த்து, 'கட்சி பணியை இன்னும் சிறப்பா செய்ய, எனக்கு நல்லதா ஒரு பதவி தாங்க'ன்னு கேட்டிருக்காரு வே...
''மாவட்ட புள்ளியோ, சஜித் சமுதாயத்தை பற்றி தரக்குறைவாகவும், கொச்சையான வார்த்தைகள்லயும் பேசி அவமானப்படுத்தி அனுப்பிட்டாரு... அப்ப, இதர கட்சி நிர்வாகிகளும் அங்கன இருந்திருக்காவ... அவங்களும் மாவட்ட புள்ளி பேசியது தப்புன்னு தட்டிக் கேட்கல வே...
''இதனால, 'பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த தனபாலை, மற்ற நிர்வாகிகள் அவமானப்படுத்தியதை கேள்விப்பட்டு, அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கி, ஜெயலலிதா கவுரவிச்சாங்க...
''அப்படிப்பட்ட கட்சியில் இருக்கிற இந்த மாதிரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு பழனிசாமிக்கு சஜித் புகார் அனுப்பியிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''வாங்க ஜெயசுதர்சன்... ஊர்ல இருந்து எப்ப வந்தேள்...'' என, நண்பரிடம் குப்பண்ணா நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.