PUBLISHED ON : ஏப் 01, 2026 03:20 AM

கற்பூரவல்லி ரக வாழை கள் சாகுபடியில், நிறைவான லாபம் ஈட்டும், திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, 29 வயதான முரளி:
எங் கள் ஊர் வழியாக தாமிரபரணி ஆறு பாய்ந்தோடுவதால், விவசாயம் இங்கு செழிப்பாக நடக்கும். நெல், வாழை இரண்டும் தான் எங்கள் ஊரில் முதன்மையான பயிர்கள். எங்கள் குடும்பத்துக்கு வாழ்வாதாரமே விவசாயம் தான்.
தாத்தாவுக்கு பின், அப்பா விவசாயம் பார்த்தார். அதன் பின், நான் விவசாயம் பார்க்கிறேன். அது சம்பந்தமாக, சமூக வலைதளத்தில் பல காணொளிகள் பார்த்தேன். தாழையூத்து பகுதியில், ஈஷா மையம் நடத்திய, இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியில் பங்கேற்றேன்.
அதில், இயற்கை விவசாயி ஒருவர், வாழை சாகுபடியில் ஒன்றரை ஆண்டில் இரண்டு முறை அறுவடை செய்யக்கூடிய, 'குத்து முறை' சாகுபடி குறித்து பேசினார்; எனக்கு அது புதிதாக இருந்தது.
அதாவது, குத்து எனும் ஒரே மண் குவியலில், நான்கு வாழைக் கன்றுகளை நடுவது தான் குத்து முறை.
அடுத்த வாரத்திலேயே, அவரது தோட்டத்திற்கு நேரில் சென்று பார்த்தேன். அவர், குத்து முறை சாகுபடி பற்றி விளக்கமாக கூறியதுடன், இயற்கை இடுபொருட்களை தயார் செய்வது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுத்தார். மேலும், அவர் தோட்டத்தில் இருந்த எல்லா குலைகளிலும், வாழைக்காய்கள் திரட்சியாக இருந்தன.
எங்கள் பகுதியில் பெரும்பாலானோர் மொந்தன், பூவன் ரக வாழைகளை தான் பரவலாக சாகுபடி செய்வர். அதனால், அதை தவிர்த்து விட்டு, கற்பூரவல்லி ரகத்தை தேர்ந்தெடுத்தேன். 75 சென்ட் பரப்பில் மொத்தம், 720 வாழைக்கன்றுகளை நடவு செய்தேன். முதல் அறுவடையில் திரட்சியாக, 680 குலைகள் கிடைத்தன. ஒவ்வொரு குலையும், 20 கிலோ வரை எடை இருந்தது.
மொத்தம், 680 வாழைக்குலைகள் விற்பனை வாயிலாக, 2 லட்சத்து 4,000 ரூபாயும், வாழைப்பூக்கள் விற்பனை வாயிலாக, 10,000 ரூபாயும் வருமானம் கிடைத்தது. ஆக, 75 சென்ட் வாழை சாகுபடியில், மொத்தம் 2 லட்சத்து 14,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.
சாகுபடி செலவு மற்றும் அறுவடை கூலி என்று எல்லா செலவுகளும் சேர்த்து, 67,000 ரூபாய் போக, 1 லட்சத்து 47,000 ரூபாய் லாபமாக கிடைத்தது.
உள்ளூர் சந்தையிலும், திருநெல்வேலி சந்தையிலும் வாழைக்காய்களை விற்பனை செய்தேன்.
இப்போது, இரண்டாவது அறுவடையை துவங்க இருக்கிறேன். குத்து முறையில் வாழைகள் பயிர் செய்வதால், ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு ஒரு முறை வருமானம் பார்க்க முடிகிறது.
தொடர்புக்கு:
88830 91736.

