தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பட்டு வியாபாரத்தில் தொடரும் பாரம்பரியம்!

 பட்டு வியாபாரத்தில் தொடரும் பாரம்பரியம்!

 பட்டு வியாபாரத்தில் தொடரும் பாரம்பரியம்!


PUBLISHED ON : மே 31, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2026 12:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டுப்புடவையில் பாரம் பரிய டிசைன்களை பிரபலமாக்கி வரும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த மாமியார் - மருமகளான, 52 வயதாகும் அபிராமி மெய்யப்பன், 28 வயதாகும் உமையாம்பிகை:

அபிராமி மெய்யப்பன் : என் கணவருக்கு பட்டு வியாபாரம் தான் தொழில். நானும் தொழில் செய்ய வேண்டும் என, மனதில் மிகவும் ஆழமாக பதிய வைத்தவர் என் மாமியார் தான். 10ம் வகுப்பு படித்த என்னிடம், 'பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தால் எல்லாம் கிடைக்கும்' என்று கூறி, வியாபாரம் செய்ய ஊக்குவித்தார்.

செட்டிநாடு என்று சொன்னாலே, புடவையில் கட்டங்கள் தான் பிரதான டிசைன். அந்த பிரதான டிசைன்களையும், காஞ்சிபுரத்தின் பாரம்பரியத்தையும் சேர்த்து உருவாக்கிய புடவைகளை நாங்கள் வியாபாரம் செய்து வந்தோம்.

டில்லி, மும்பை, கொல்கட்டா உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் காரைக்குடி வந்து, புடவைகளை வாங்கி செல்வர். பலரும், 'முழு ஜரிகைகள் வைத்து, புடவைகளை நெய்து தாருங்கள்; புது டிசைன்கள் போடுங்கள் ' என்று கேட்பர்.

ஆனால், நான் பாரம்பரிய டிசைன்களை மட்டும் தான் நெய்யணும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

வியாபாரத்தில் மகனும், மருமகளும் இணைந்தனர். மருமகள் தகவல் தொழில்நுட்ப துறையில் பார்த்த வேலையை விட்டுவிட்டு தொழிலில் இணைந்தது, எனக்கு மிகப்பெரிய பலம்!

உமையாம்பிகை: பெண் பார்க்க வந்தபோது, என் மாமியார், 'தொழிலில் ஆர்வம் இருக்கா?' என்று தான் முதலில் கேட்டார்.

'சமைக்கத் தெரியுமா' என்று கேட்கிற மாமியார்களுக்கு மத்தியில், தொழில் தெரியுமா என்று கேட்ட மாமியார் தனித்துவமாக தெரிந்தார். திருமணம் ஆனதும் வேலையை விட்டுவிட்டேன்.

என் கணவர், புடவைகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துவார். எங்கள் பிராண்டுக்கு மாமியார் தான், 'மாடலாக' இருப்பார். ஒரு முழு பட்டுப் புடவையை நெய்து முடிக்க, இரண்டு வாரங்களாகும். ஒரு புடவைக்கு பின், 16 பேரின் உழைப்பு இருக்கும்.

இப்போது, நாங்கள் கோர்வை முறையில் நெய்கிறோம். கோர்வை நெய்தல் என்பது, புடவையின் உடல் மற்றும் பார்டருக்கு வெவ்வேறு நுால்களை பயன்படுத்தி நெய்து, ஒன்றோடு ஒன்றை கையால் இணைக்க வேண்டும்.

நெய்து முடிக்க பல நாட்கள் ஆகும். அதனால், கோர்வை முறை நெசவாளர்கள் மிகவும் குறைவு.

இப்படியே போனால் , கோர்வை நெசவு இல்லாமலே போய்விடும் என்பதால், 100 கைத்தறிகளை இயக்க ஆரம்பித்துள்ளோம்.

இன்று பிரபலமாக இருக்கும் டிசைன்களை வைத்து நெய்தால், கூடுதலாக பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், நம் அடையாளம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக இதை தொடர்கிறோம்.

தொடர்புக்கு

94864 47946

தனித்து போராடும் இந்த வாழ்க்கை துணிச்சலை தருகிறது!


காஷ்மீரில் பயண நிறுவனம் மற்றும் உணவகம் நடத்தி வரும், தமிழகத்தைச் சேர்ந்த பெண் சிந்து:

புதுக்கோட்டை தான் என் சொந்த ஊர். 2020ல் தனி ஆளாக பயணம் செய்ய துவங்கினேன். இதுவரை 25 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களுக்கு பயணித்துள்ளேன்.

ஒருமுறை, இலங்கையைச் சேர்ந்த குடும்பம் காஷ்மீருக்கு வருவதாகவும், அவர்களுக்கு வழிகாட்டியாக வர முடியுமா என்றும் கேட்டனர்.

தங்குவதற்கான இடமும், சாப்பாடும் போக தினமும் 1,000 ரூபாய் என, ஐந்து நாளைக்கு 5,000 ரூபாய் கொடுப்பதாக கூறினர். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்பின், 2022ல் நானே பயண நிறுவனத்தை துவக்கினேன்.

டிரைவர்களை, 'கேப்டன்' என மரியாதையாக அழைப்பது, மற்றவர்களை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுப்பது என சில மாற்றங்களை கொண்டு வந்தேன். என்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன். இதனால், எனக்கு சரியான ஆட்கள் அமைந்தனர்.

இப்போது வரை காஷ்மீருக்கு, 1,000 குழு பயணங்களை ஏற்பாடு செய்திருக்கிறேன். தமிழர்கள் மட்டுமே, 8,000 பேர் வந்திருக்கின்றனர்.

என் பயணியருக்கு மட்டும் உணவு வழங்க, சின்னதாக இட்லி - தோசை கடை போடலாம் என்று முடிவு செய்து, 70,000 ரூபாய் மாத வாடகையில், 10க்கு 10 அடியில் ஒரு கடையை ஆரம்பித்தேன்.

தென்மாநில உணவகம் எதுவும் இங்கு இல்லை என்பதால், உள்ளூர் மக்கள் பலரும் சாப்பிட வந்தனர். மூன்று மாதங்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சாப்பிட வந்தபோது, '20 ஆண்டுகளாக நாங்கள் தமிழக உணவுகளை சாப்பிடவே இல்லை. இப்போது, மறுபடியும் கொண்டு வந்துள்ளீர்கள்; நன்றி!' என்றார்.

அதன்பின் வங்கியில் கடன் வாங்கி, 1,000 சதுர அடியில், 'இட்லி அண்டு தோசா டிலைட்' என்ற உணவகத்தை ஆரம்பித்தேன்.

உணவகத்தில் நாங்கள் பயன்படுத்தும், 70 சதவீத பொருட்களை சென்னையில் இருந்து தான் வாங்குகிறோம். தற்போது, மேலும் இரண்டு கிளைகள் துவக்கி உள்ளேன்.

இணையத்தில், 'தோசை கேர்ள் ஆப் காஷ்மீர்' என்று தேடினால், என்னை பற்றிய தகவல்கள் வரும். தனியாக இருப்பதால் சில நேரங்களில் ரொம்ப மன அழுத்தமாக இருக்கும். அதுமாதிரி நேரங்களில், என் அறையில் நானே கதறி அழுது விடுவேன்.

சிறிது நேரத்தில் எழுந்து குளித்து, புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவேன். தனித்து போராடும் இந்த வாழ்க்கை, என்னை மிகவும் துணிச்சலான நபராக மாற்றி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us