PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM

'டாஸ்மாக்' மது கடைகளில், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துக்கு எதிராக, ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், சந்தியூரில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன், தொ.மு.ச., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட, 11 சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, 'காலி மது பாட்டில்களை திரும்ப பெற கடை பணியாளர்களை வலியுறுத்தக் கூடாது' என, சங்க நிர்வாகிகள் பேசினர்.
அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் பேசுகையில், 'மஹாபாரதத்தில், 13 ஆண்டுகள் வனவாசம் முடிந்த பின், பாண்டவர்களுக்கு நாடு கிடைத்தது. ஆனால், 22 ஆண்டுகள் வேலை செய்தும் நமக்கு பணி நிரந்தரம், பாதுகாப்பு இல்லை. இதற்கு, நமக்குள் ஒற்றுமை இல்லாததே காரணம்' என்றார்.
இதை கேட்ட ஒரு ஊழியர், 'அது சரி... நாமதான் இத்தனை சங்கங்களா பிரிந்து கிடக்கிறோமே... அதான், நம்ம குரலுக்கு மதிப்பில்ல... கிட்டத்தட்ட நம்மை அடிமை மாதிரி தானே வேலை வாங்குறாங்க...' என, புலம்பியபடியே கிளம்பினார்.