PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:15 AM

ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம.ரவிகுமார், மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தமிழக அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக முதல்வர் விஜய், காங்., தலைவர் ராகுலிடம் பேசி, கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.
'தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, 10 லட்சம் கோடி ரூபாயை தி.மு.க., அரசு வழித்து எடுத்துக் கொண்டு சென்று விட்டது என பேசுகிறார். தமிழகத்துக்கு எவ்வளவு கடன் உள்ளது என்பது தெரிந்து தானே, தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தீர்கள். அப்போது, கடன் இருப்பது தெரியாதா?' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'தி.மு.க., கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் இவர் கேட்டு, அவங்களுக்கு பின்னணி குரல் கொடுக்கிறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
