PUBLISHED ON : ஜூன் 14, 2026 12:18 AM

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, சமீபத்தில் சிதம்பரத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதால், திராவிட இயக்கம் மீண்டு வராது என்று நினைத்து விடக்கூடாது. தேர்தலில் கடந்த காலங்களிலும் வெற்றி, தோல்வி ஏற்பட்டுள்ளது.
'இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டமைப்பை கொண்ட அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வரும்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'தி.மு.க., - அ.தி.மு.க., மீண்டு வரும்னு சொல்றவர், ம.தி.மு.க., மீண்டு வரும்னு சொல்ல மாட்டேங்கிறாரே...' என முணுமுணுக்க, சக நிருபரோ, 'அதுல, அவருக்கே நம்பிக்கை இல்லை போல...' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
